Friday, June 21, 2013

தந்தையின் சிறப்பு

தந்தையின் சிறப்பு


தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடுஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.  (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.  (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள்  பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள்  இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே  சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய  பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன்  சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளைஎன்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.  

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின்  பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)
நூ அப்துல் ஹாதி பாகவி M. A.,M.Phil. 
மொழிபெயர்ப்பாளர் 
ரஹ்மத் அறக்கட்டளை 
(நுங்கம்பாக்கம்)
சென்னை 

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”


kindly visit:
www.hadi-baquavi.blogspot.in

புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

·         அஸ்ஸலாமு அலைக்கும்...

Inline image 1

புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது.

ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.

ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவுநேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடையவேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

·         ரமலானை வரவேற்க தயாராவது எப்படி?

எதிர்வரும் ரமலானை இறையச்சத்தோடு அதன் பலனை அடைவதற்கும், இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது.

·         ரமலான் வருகைக்கு ஆர்வமூட்டல்:

குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மத்தியில் ரமலானுக்கு மனதளவில் தயாராவது குறித்து அறிவுறுத்த வேண்டும். ரமலானின் சிறப்புகளைப் பற்றி அதிகமதிகம் விவாதிப்பதும், பேசுவதும் ரமலான் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிக்கும்.

·         குர்ஆன் ஓத ஆர்வமூட்டல்:

ரமலானுடைய மாதங்களில் குர்ஆனை மனனம் செய்வதற்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ளுதல். ஏனென்றால் ரமலான் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். ரமலானில் திருக்குர்ஆனை ஓதுவதுடன், திருக்குர்ஆன் வசனங்களைக் குறித்த சிந்தனையில் ஈடுபடுவது, அதனை நடைமுறைப்படுத்துவது ஆகியனவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

·         நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக் கூடியதாகும். அது ஏற்கப்படக் கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத்(ரலி) ஆதாரம்: முஸ்லிம்)
·         சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தல்
:
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு நோன்பின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை அதற்கு தகுந்தாற்போல் பயிற்றுவிக்க வேண்டும். ஸஹர் மற்றும் இஃப்தார் நேரங்களில் அவர்களையும் அமரச் செய்யலாம். நோன்பு நோற்றிருக்கும் போது அவர்களுக்கு முடியுமானவரை இருந்துவிட்டு இடையில் விடுவதற்கு அனுமதிக்கலாம். இதன்மூலம் நோன்பு நோற்பதற்கு படிப்படியாக தயாராவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும். மேலும் இதன் மூலம் நோன்பை பற்றிய அறிவும், ஆற்றலும் அவர்களுக்கு கிடைக்கும்.

·         பெண்களை தயார்படுத்துதல்:

பெண்களுக்கு உணவுகள், சிற்றுண்டிகள் தயாரிக்கும் நேரத்தை சுருக்கி கொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டும். ரமலானின் முழுபலனையும் அடைவதற்கு முதன்மைப்படுத்த வேண்டும். ஏனென்றால்,வேலைப் பளுவின் காரணமாக பெரும்பாலும் ஃபர்லான அமல்களை கூட செய்ய முடியாமல் போய்விடும். மேலும் ஆண்கள் பெண்களுக்கு உதவினால் பெண்களின் வேலைப் பளுவை குறைக்கலாம்.

·         திக்ரின் பலனை அறிதல்:

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு(தியானம்) செய்யுங்கள். இன்னும் காலையிலும், மாலையிலும் அவனைத் துதிச் செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42)

மேலே சொன்ன குர்ஆன் வசனம் திக்ரின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது.

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானதாகும், (நன்மை-தீமை நெருக்கப்படும்) தராசில் கனமானதகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியதாகும்(அவை)

சுப்ஹானல்லாஹில் அலீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’.(பொருள்:கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனைப் போற்றி புகழ்ந்து துதி செய்கிறேன்.)” (ஆதாரம்:ஸஹீஹ் புஹாரி).

இது போன்று திக்ருகளை இப்போதே மனனம் செய்து கொண்டால் நல்லது.
பெருநாள் ஷாப்பிங்கைமுன்கூட்டியே முடித்துக் கொள்ளுதல்:

பெருநாளின் போது புதிய ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக ஷாப்பிங்என்ற பெயரில் வீணாக நேரங்களை கழிக்க கூடாது. அதனால் ரமலானின் முழுபலனையும் அடைவதில் சிக்கல் ஏற்படக் கூடும். எனவே ஷாப்பிங்கைமுன்கூட்டியே முடித்து கொண்டால் நல்லது.

வரக்கூடிய ரமலானில் அதிகமதிகம் நல்லமல்கள் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்!

Thanks: Abdul Rahman

Sunday, June 02, 2013

புகை மரணத்தின் நுழைவாயில்


புகை மரணத்தின் நுழைவாயில்


புகையிலை இல்லா ஆரோக்கிய சமூகத்தை உருவாக்கவும், மத்திய மாநில அரசுகள் அவற்றை தடை செய்யவும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களில் சிக்கித் தவிக்கும் சமூகத்தை எச்சரிக்கவும், அவர்களை மீட்டெடுக்கவும் வேண்டி எழுதப்பட்ட ஆக்கம்.
ஆண்டு தோறும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புகையிலை ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளையும், பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புகையிலையையும், அதுசார்ந்த பொருட்களையும் தடை செய்திருக்கிறது. அத்தோடு பொது இடங்களில் புகை பிடிப்பதையும் தடை செய்திருக்கிறது.

உலகம் முழுவதிலும் 71 நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை உள்ளது. மீறிப் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்படுவதுண்டு.
அயர்லாந்தில் 3 ஆயிரம் டாலர் யூரோ அபராதம், ஜாம்பியாவில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இஸ்ரேலில் 1400 டாலர் அபராதம், இந்தியாவிலும் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டு முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
பல அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள்:
நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்த்துக்கீஸியரால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புகையிலையின் கோரப்பிடியில் 11 கோடி இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள் என்பது வேதனையிலும் வேதனை.
ஆண்டு தோறும் சிகரெட்டுகளைச் சாம்பலாக்குகிறவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்டது.
சிகரெட் மனிதனைச் சாம்பலாக்குகிற கொள்ளிக்கட்டை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் தங்களின் வாழ்வையும், பணத்தையும், உடல் ஆரேக்கியத்தையும் இழந்து வருகிறார்கள் சிகரெட் பிரியர்கள்.
உலக சுகாதார அமைப்பு உலகில் உள்ள ஆண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், இருபதாம் நூற்றாண்டில் இந்த புகையிலை பத்து கோடி பேரின்; உயிரை பறித்திருக்கிறது என்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் நூறு கோடி பேரின் உயிரை பறிக்க இருக்கிறது என்ற தகவலையும் தந்து நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஆண்டு தோறும் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாரடைப்பினால் இறக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புகைபிடிப்பதனால் இறக்கின்றனர் என்கிறது இன்னொரு அதிர்ச்சித்தகவல்.
மேலை நாட்டினர் சிகரெட்டை சவப்பெட்டிகளின் ஆணி என்று வர்ணிக்கின்றனர்.
நாள் தோறும் 80 ஆயிரம் இளைஞர்கள் அது தான் நாகரீகம் FASHION, STYLE, என்று நினைத்து பயன்படுத்துகின்றனர்.
இதனால் 8 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார்.
உலகில் 10 ல் ஒருவரது வாழ்க்கை முடிய புகையிலையே காரணம்.
உலக அளவில் புகையிலையின் விற்பனை ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தினசரி விற்பனை 1500 கோடியாகும்.
புகையிலைப் பொருட்களில் அடங்கியுள்ள நச்சுப்பொருட்கள்
நிக்கோட்டின், எத்தனால், நெப்திலோமின், ஹைட்ரஜன் சயனைடு, பைரின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா, கேட்மியம், பெரோனியம் 2-10, வினைல் குளோரைடு, தார்,க ரியமில வாயு போன்ற பல வேதிப்பொருட்கள் புகையிலைப் பொருட்களில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பறிக்கக்கூடிய அவன் உயிரோடு விளையாடக்கூடிய ஏன் அவன் உயிரையே பறிக்கக் கூடிய நச்சுப்பொருட்களாகும்.
புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளும் பாதிப்புகளும்
புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானவை மாரடைப்பு,காசநோய், ஆஸ்துமா, புற்றுநோய், முடி உதிர்தல், கண் பார்வைக் கோளாறு, தோலில் சுருக்கம் விழுந்து முதிய தோற்றம் ஏற்படுதல், தோல் புற்று நோய், காது கேளாமை, பல் சொத்தை, நெஞ்சில் சளி, எலும்பு முறிவு நோய், இதயக் கோளாறு, வயிற்றுப்புண், விரல்களில் நிறம் மாறுதல், சோரியாஸிஸ் என்னும் தோல் நோய், விந்தணுக்கள் குறைந்து குழந்தைப் பேற்றின்மை
போன்ற பல ஆபத்தான நோய்கள் எற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வகையான நோய்கள் புகைப்பவருக்கு மட்டுமல்ல அவர் வெளியிடும் புகையை சுவாசிக்கும் எல்லோருக்கும் ஏற்படுகிறது என்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்.
புகையிலை கம்பெனிகளின் உரிமங்களை ரத்து செய்து அரசே தடை செய்யவேண்டும்
இப்படிப்பட்ட நச்சுக்கொல்லியாக இருக்கின்ற, மெல்லக்கொல்லும் விஷமாக (SLOW POISON) இருக்கின்ற, பல ஆபத்துக்களை விளைவிக்கின்ற, உடல் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கின்ற புகையிலையை ஒட்டு மொத்தமாக அரசாங்கம் தடை செய்தால் மட்டுமே புகையிலையை ஒழிக்க முடியும். ஆரோக்கிமான தலைமுறையை உருவாக்கமுடியும்.
மேலும் உற்பத்தியாகும் இடங்களைக்கண்டறிந்து அவற்றை அழிக்கமுயல வேண்டும். அவர்களுக்கு தரப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவேண்டும்.
வேடிக்கை என்னவெனில் அரசாங்கமே சிகரெட் கம்பெனிகளுக்கு லைசென்சு கொடுத்து (டாஸ்மார்க், விபச்சாரம் போன்று) விற்பனையில் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது தான் வேதனைக்குறிய விஷயமாக இருக்கிறது.
இதனால் அரசுக்கு எவ்வகையிலும் இலாபம் ஏற்படப்போவதில்லை மாறாக நஷ்டம் தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
நஷ்டம் அரசுக்குத் தான்
2004 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் புகையிலைப் பொருட்களால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்த செலவு 8300 கோடி. ஆனால் புகையிலைப் பொருட்களால் கிடைத்த வரி வருமானம் 7150 கோடி. வருவாயை விட நோய்களின் சிகிச்சை செலவு 16சதவீதம் அதிகம்.
புகை பிடித்தலால் ஏற்படும் நோய்களுக்கு 4416 கோடியும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதால் ஏற்படும் நோய்களுக்கு 1387 கோடியும் செலவிடப்படுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நோய்களுக்கான செலவு தான் அதிகரிக்கிறதே தவிர புகையிலை வருமானம் என்னவோ குறைவு தான். இதனால் அரசுக்குத் தான் நட்டம் ஏற்படுகிறது. எனவே அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு புகையிலையை ஒழித்தால் மனித சமுதாயாத்தை ஆரோக்கியமானதாக மாற்றமுடியும்.
புகையிலை விஷயத்தில் இஸ்லாத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது? இஸ்லாத்தின் தீர்வுகள் என்னென்ன?
உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணச் சொல்கிறது இஸ்லாம்.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
அல்குர்ஆன் 2:172
புகைபிடிப்பதென்பது மேற்கூறப்பட்ட வசனத்திற்கு முற்றிலும் முரணான செயல் என்பதை விளங்கவேண்டும்.
புகையிலையினால் மனிதன் தன்னையே அழித்துக்கொள்கிறான். தன்னையே அழித்துக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள், இன்னும் நன்மை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் 2:195
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப்
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 5:105
புகைப்பதனால் வீண்விரயம் ஏற்படுகிறது. வீண் விரயத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதுமில்லை.
உண்ணுங்கள் பருகுங்கள், எனினும் வீண் விரயம்செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் 7:31
மதுவைப்போல போதை தரும் ஒரு பொருள் தான் புகையிலை என்பது. எனவே போதை தரும் அனைத்தையும் இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் அல்பித்உ, அல் மிஸ்ர்என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்என்று பதிலளித்தார்கள் என்று அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவிக்கிறார்.
(புகாரி: 4343)
எவனொருவன் போதை தரும் பானத்தை அருந்துகிறானோ அவனுக்கு அல்லாஹ் தீனத்துல் ஹபாலை அருந்தக் கொடுப்பான் என்று நபியவர்கள் கூறும்போது அது என்ன என்று நபித்தோழர்கள் வினவ அது நரக வாதிகளின் வியர்வை அல்லது அவர்களின் சீழ் என்றார்கள் நபியவர்கள்.
(முஸ்லிம்: 5335)
புகையிலையினால் ஒருவன் தன்னையே அழித்துக் கொள்கிறான் என்பது நாம் கேள்விப்பட்ட செய்தி. ஆனால் அவன் விடும் புகையை யாரெல்லாம் சுவாசிக்கிறார்களோ அவர்களெல்லாம் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். புகையிலையினால் சம்பந்தப்பட்டவர் பாதிக்கப்படுவதை விட அவர் விடும் புகையை சுவாசிப்பவர் அதிகம் பாதிக்கப்படுகிறார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முஸ்லிம் என்றைக்கும் மற்றவர்களுக்கு நலம் நாடக்கூடியனாக இருப்பானே தவிர பாதிப்பு ஏற்படுத்துகின்றவனாக இருக்கமாட்டான்.
மார்க்கம் என்பதே நன்மையை நாடுவதுதான் என்று நபியவர்கள் கூற யாருக்கு? என்று நபித்தோழர்கள் வினவ அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர் களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்: 205, புகாரி)
இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்றும் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்றும் நபித்தோழர்கள் கேட்டதற்கு எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற மனிதர்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்ததுஎன்றும் அவரே சிறந்தவர் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 11, முஸ்லிம்: 170, அஹ்மத்: 8918)
மனிதனுக்கு ஆரோக்கியம் தருகின்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது தான் வெங்காயமும், பூண்டும். அதையே சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாது என்கிற போது கேடுவிளைவிக்கின்ற ஆரோக்கியத்தை கெடுக்கின்ற மற்றவர்களுக்கு நோவினை தருகின்ற புகையிலையை மென்று விட்டும், பீடி, சிகரெட் குடித்துவிட்டும் பள்ளிக்கு வருவதை இஸ்லாம் எவ்வாறு அனுமதிக்கும் என்பதை புகைப்பழக்கத்திற்கு ஆளான முஸ்லிம்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
பசியின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ யாரேனும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உண்டால் நம்முடைய பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 853, 854, 855, 856)
பசியின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ யாரேனும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உண்டால் நம்முடைய பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம் மனிதர்கள் எதனால் நோவினை அடைவார்களோ அதனால் வானவர்களும் நோவினை அடைகிறார்கள்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்: 1270,1272)
மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்
ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லாத வரை ஒரு மனிதன் தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது.
1) உன்ஆயுளை எவ்வாறு கழித்தாய்?
2) உன் இளமையை எவ்வழியில் பயன்படுத்தினாய்?
3) செல்வத்தை எவ்வழியில் ஈட்டினாய்?
4) செல்வத்தை எவ்வழியில் செலவு செய்தாய்?
5) கொடுக்கப்பட்ட அறிவை எவ்வழியில் பயன்படுத்தினாய்? என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ:2399, தாரிமீ)
இளமையில்
 சிகரெட் பயன்படுத்துவது, அதற்காக செலவழிப்பது,அதை விற்பனை செய்து பொருள் ஈட்டுவது சரியான செயலா? என்பதை புகையிலையை பயன்படுத்தும் சமூகமே, அதைத் தயாரிக்கும் சமூகமே, அதை விற்பனை செய்யும் சமூகமே சிந்திப்பீர். இறைவனுக்கு அஞ்சி, அவன் விசாரனைக்கு அஞ்சி நடப்பீர்.
ஒவ்வோர் உறுப்பிற்கும் அதற்குரிய உரிமைகளை வழங்கிட வேண்டும். இல்லையேல் அவை நமக்கெதிராக மறுமையில் வாதாடும் எனபதை மறவாதீர்.
உறுப்புகள் பலவீனம் அடையும் அளவிற்கு வணக்க வழிபாடுகளில் கழிக்கக்கூடாது எனும் போது புகையிலைப் பொருட்களினால் உறுப்புக்கள் அனைத்தும் செயலிழந்து போகுமே! என்பதை சிந்திந்துப்பார்க்க வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) ஆகிய என்னிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் , “அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)”என்று கேட்டார்கள். நான், “ஆம் (உண்மைதான்) இறைத்தூதர் அவர்களே!என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதே! (சில நாள்) நோன்பு நோற்றுக்கொள். (சில நாள்) நோன்பைவிட்டு விடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்கு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டுஎன்று நபி(ஸல்)கூறினார்கள்.
(புகாரி: 1975, 5199)
மற்றோர் அறிவிப்பில நீர் இவ்வாறு செய்தால் உம்முடைய கண்கள் பலவீனப்படும். உடல் நலியும்என்று நபியவர்கள் சொன்னதாகக் காணப்படுகிறது.
(புகாரி: 1153)
வணக்க வழிபாடுகள் செய்யும் போதே உடலும், கண்களும் பலவீனப்படகக் கூடாது என்றிருக்கும் போது புகையிலை என்னும் உயிர்க்கொல்லியினால் உடலும், உடல் உறுப்புக்களும் முழுவதுமாக பாதிக்கப்படுகிறதே இப்படிப்பட்ட புகையிலை என்னும் உயிர்க்கொல்லியை இஸ்லாம் எவ்வாறு அனுமதிக்கும்?
முன்னெச்சரிக்கையாக இருக்கச்சொல்கிறது இஸ்லாம்.
ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன் பேணிக்கொள்ளுங்கள்.
1) முதுமைக்கு முன் இளமை
2) நோய்க்கு முன் ஆரோக்கியம்.
3) வறுமைக்கு முன் செல்வம்.
4) வேலைக்கு முன் ஓய்வு.
5) மரணத்திற்கு முன் வாழ்வு.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(ஹாகிம்: 7846, நஸாயீ: 11832)
எவ்வளவு அருமையான நபிமொழி. புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களால் ஆபத்தான நோய்கள் ஏற்படுகிறதே! அவற்றைத் தடுத்து ஆரோக்கியமாகவும், நோயற்ற வாழ்வும் வாழச் சொல்கிறது இஸ்லாம்.
மனிதன் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டுகிறான். அவனுக்கு எவ்வளவோ அருட்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று உடல் நலம்.
உடல் நலத்தில் மனிதர்களில் பெரும்பாலோர் அலட்சியமாகவே இருக்கின்றனர். உடல் நலத்தைப் பேணாமல் நோய்கள் வந்ததற்குப் பிறகு பல முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகின்றவர்கள் நம்மில் ஏராளம்! எராளம்!
மனிதர்களில் பெரும்பான்மையினர் மிகப்பெரிய இரண்டு அருட் செல்வங்க ளின் விஷயத்தில் பொடுபோக்காகவே இருக்கின்றனர்.
1. ஆரோக்கியம் (உடல் நலம்) 2. ஓய்வு
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 6412)
புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது கோதுமையை வாயில் போட்டு மெல்லலாம், அல்லது சூரிய காந்தி விதைகளை மெல்லலாம், அல்லது சூயிங்கம் போன்ற மாற்று ஏற்பாடுகளை கையாளும் போது புகையிலையை விட்டும் முற்றிலுமாக நம்மால் ஒதுங்க முடியும்.
புகையிலையும், அது சார்ந்த பொருட்களும் மனித சமூகத்திற்கு எவ்விதத்திலும் பயன்களைத் தருகின்ற பொருட்களல்ல. மாறாக மனித சமூகத்தை அழிக்கவல்லது என்பதும் அவற்றை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதும் மேற்கூறப்பட்ட தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
எனவே மத்திய, மாநில அரசுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு புகையிலையையும், அதுசார்ந்த பொருட்களையும் முற்றிலுமாகத் தடை செய்யவேண்டும்.

ஆக்கம்:

காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA,
பேராசிரியர்: JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College),
இமாம்: IRGT பள்ளிவாசல்.