Friday, May 01, 2015

தொழிலாளரின் உரிமைகள், மற்றும் கடமைகள்

தொழிலாளரின் உரிமைகள், மற்றும் கடமைகள்
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
உலகளாவிய ரீதியில் மே 01ஆம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
இஸ்லாம் பேசுகின்ற உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட நபியவர்கள் நடைமுறைப்படுத்திக்காட்டிய உரிமைகள் ஆகும். அவை ஏதோ ஓர் அரசினாலோ சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவை அல்ல. இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகள் உலகளாவியவை; மனித குலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியவை. அந்த உரிமைகள் ஓர் இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி. எந்த நிலைமையிலும் கடைபிடிக்க வேண்டியவையே!

மனித உரிமைகள் சாசனம் ஒன்றை இவ்வுலகில் முதலில் அறிமுகப்படுத்தியது இஸ்லாம். புதைகுழிக்குள் புதைந்து கிடந்த பெண்களின் கண்ணியத்தை உயிர்ப்பித்து தூக்கி நிறுத்தியது இஸ்லாம். கருத்துச் சுதந்திரத்துக்கு களமமைத்ததும் இஸ்லாம். உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்தளித்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

இன்று கருத்துச் சுதந்திரம் குறித்து அரக்கப் பரக்கப் பேசும் மேற்குலகு, நீதியின் குரல்வளையை நசுக்குகிறது. கருத்தச் சுதந்திரம் என்ற பெயரில் மனித மாமிசம் புசிக்கப்படுகிறது. அவதூறும் அபாண்டங்களும் புறமும் கோளும் அரங்கேற்றப்படுகின்றன. மனிதனின் மானம் சந்திக்கு இழுக்கப்பட்டு கழுமரத்தில் தொங்கவிடப்படுகிறது. இதுதானா கருத்துச் சுதந்திரம்?
நிறம், இனம், மொழி என்ற வேறுபாடின்றி சகல மனிதர்களும் சமமானவர்கள். சமத்துவத்தை நிலைநாட்டி இறையச்சத்தை மாத்திரம் அளவீடாக வைத்து மனிதர்களைத் தரம் பிரிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
இன்று பணமும் அதிகாரமும் உடற்பலமும் உள்ளவர்கள் தமது அதிகாரத்திற்குக் கீழ் பணிபுரிபவர்களை இழிவாகவும் தாழ்வாகவும் நோக்குவதை சமூகத் தளத்தில் அவதானிக்க முடிகிறது. சிலபோது தொழிலாளர்கள் கொடுமைக்குட்படுத்தப்படுகின்றனர் உரிமை மறுக்கப்படுகின்றனர். இந்நிலையில் இஸ்லாம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து சற்று நோக்குவோம்.
மனிதர்களுக்கு வழங்கப்படவேண்டிய அத்தனை உரிமைகளும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் தொழிலாளர்கள், பணியாளர்கள் என்பதற்காக அவர்களை இழிவுபடுத்துவதோ புறக்கணிப்பதோ கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
01. தொழிலாளர்களை கண்ணியமாக நடத்துதல் வேண்டும். தொழிலாளர்களின் உணர்வுகளையோ மனதையோ புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், அவர்களும் மனிதர்கள். அவர்களை மனிதாபிமானத்தோடு அணுகுதல் வேண்டும். அவர்கள் இழிவானவர்கள் அல்ல. அல்லாஹ் நாடினால் எவரையும் உயர்த்துவான் எவ்வளவு பெரிய செல்வாக்குமிக்கவரையும் தாழ்த்தி விடுவான். நொடிப் பொழுதில் ஏழையை செல்வந்தனாகவும் செல்வந்தனை ஓட்டாண்டியாகவும் மாற்றும் வல்லமை மிக்கவன் அல்லாஹ்.
 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பணியாளராக இருந்த அனஸ் பின் மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் பத்து வருடங்களாகப் பணிபுரிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் ஒருபோதும் எனக்கு சீ என்று கூறியதில்லை. இதனை ஏன் செய்தாய்? இதனைச் செய்யாதிருந்தால் என்ன? என்றாவது அவர் எனக்குச் சொன்னதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களுள் நற்குணமிக்கவராக இருந்தார்கள்.” (முஸ்லிம்)
2. தொழிலாளர்களோடு மென்மையாக நடந்து கொள்ளுதல்.
தொழிலாளர்களை ஏசுவது, திட்டுவது, அடிப்பது, சித்திரவதை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் உடல் மாத்திரமல்ல மானம், மரியாதையும் பாதுகாக்கப்படல் வேண்டும்.
“தொழிலாளர்களை நல்ல முறையில் நடத்தாதவர்கள் மறுமையில் சுவனம் நுழைய மாட்டார்கள்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் சிலபோது தவறிழைக்கலாம். அவ்வேளைகளில் அவர்களின் நிறைகளைக் கருத்திற் கொண்டு அன்பு காட்ட வேண்டும். தவறுசெய்கின்றவர்களை முறையாகத் திருத்த வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்த உன்னதமான பண்புகளுள் அன்பும் இங்கிதமும் குறிப்பிடத்தக்கவை. மக்களோடு, மற்றவர்களோடு அன்பாக இருத்தல் எனும் உயரிய பண்பைப் பெற்றிருந்தார்கள் நபியவர்கள். தன்னோடு பணியாற்றிய எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் நபியவர்கள் தண்டித்ததில்லை. அவர்களுடன் எல்லா சந்தர்ப்பத்திலும் இங்கிதமாகவே நடந்திருக்கிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்: “மனிதர்களுக்கு எதையும் இலகுபடுத்துபவர்களாகவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களே தவிர எதையும் கஷ்டப்படுத்தி, சிரமப்படுத்தி கடினமாக்குபவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை.” (முஸ்லிம்)
நாம் இயந்திரங்களோடு பணியாற்றுபவர்களல்ல மாறாக மனிதர்களோடு உறவாடுபவர்கள். நாம் ஏசுகின்ற, திட்டுகின்ற வார்த்தை அவர்களது உள்ளங்களைப் புண்படுத்தி விடுகின்றது. அதனால் அவர்கள் சிலபோது விரக்தியடைந்து வாழ்வைப் பாழ்படுத்திவிடுகிறார்கள். இதற்கெல்லாம் ஒவ்வொரு முதலாளியும் பொறுப்புக் கூறியாக வேண்டும்.
3. பணியாளர்களால் செய்ய முடியாத, சுமக்க முடியாத வேலைகளை அவர்கள் மீது சுமத்துவது அவர்களுக்கு இழைக்கும் அநீதமாகும்.
“அவனால் சுமக்க முடியாத ஒன்றை அவன் மீது சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்யவேண்டி ஏற்பட்டால் எஜமான் அவனுக்கு உதவி புரியட்டும்” என நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் அடிமை விடயத்தில் கூறினார்கள். (அல்புகாரி)
4. உரிய நேரத்துக்கு ஊதியம் வழங்குதல்
“வியர்வை உலரமுன் பணியாளரின் கூலியைக் கொடுத்து விடுங்கள்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
அதாவது, செய்த வேலைக்கு ஏற்ற கூலியைக் கொடுப்பதில் காலம் தாழ்த்துவதோ இழுத்தடிப்பதோ கூடாது.
“மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதிராக வாதாடுவேன். ஒருவர், சுதந்திரமான ஒருவனை அடிமையாக்கியவன் மற்றவர், வாக்குறுதி மீறியவர் (மூன்றாமவர்) ஒரு பணியாளரை கூலிக்கமர்த்தி, அவனிடமிருந்து வேலை வாங்கிவிட்டு, அவனது கூலியை வழங்காதிருந்தவர்.” (அல்புகாரி)
5. தொழிலாளர்கள் மீது வீண்பழி சுமத்தக் கூடாது.
ஒரு காரியம் நிறைவேறுவதில் நூறுவீதப் பங்கும் தொழிலாளியைச் சேரமாட்டாது. தொழிலில் ஒரு நட்டமோ பாதிப்போ ஏற்பட்டுவிட்டால் அதனை முழுமையாக தொழிலாளி மீது சுமத்தக் கூடாது. அந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அனைவருமே அதற்குப் பொறுப்பு கூற வேண்டும்.
இவை தவிர தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு உணவு வழங்குதல், நல்ல ஆடைகளை வழங்குதல் என்பனவும் இஸ்லாம் கூறும் தொழிலாளர்களின் உரிமைகளாகும்.
தமது உரிமைகள் குறித்து குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் சிலபோது தமது கடமைகளை மறந்துவிடுகிறார்கள். உரிமை எவ்வளவு முக்கியமோ அதே போன்று அவரது பொறுப்புகள், கடமைகளும் முக்கியமானது என்பதை இஸ்லாம் எமக்குச் சொல்லித் தருகிறது.
அந்த வகையில் தொழிலாளர்களின் கடமைகள், முதலாளிகளின் உரிமைகள் குறித்து நோக்குவதும் அவசியம்.
1. செய்யும் தொழிலை ஓர் இபாதத்தாகக் (வணக்கமாக) கருதுதல்
உழைக்கும் ஒவ்வொரு சதமும் ஹலாலாக இருக்க வேண்டுமெனில், செய்யும் தொழிலைத் தூய்மையாகச் செய்ய வேண்டும். ஷரீஆ அனுமதித்துள்ள எத்தகைய தொழிலாக இருந்தாலும் தூய்மை கண்டிப்பாகப் பேணப்பட வேண்டும்.
பொதுவாக இன்று எல்லா மதங்களும் தொழில் என்பது முழுக்க முழுக்க உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட, பணத்துடன் தொடர்புபட்ட ஒரு விடயம் என்றே நோக்குகின்றன. வாழ்வே வணக்கம் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒரு முஸ்லிம் எந்நிலையிலும் இபாதத்தில்தான் இருக்க வேண்டும். தொழுகையின் போது, நோன்பு நோற்கின்றபோது, தானதர்மங்கள் செய்கின்றபோது, அல்குர்ஆன் ஓதுகின்றபோது இபாதத்தில் இருப்பது போலவே தொழில் செய்கின்றபோதும் உழைக்கின்றபோதும் ஒரு முஸ்லிம் இபாதத்தில்தான் இருக்கிறார். அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அவ்வாறு உழைப்பதற்கு நன்மை இருக்கிறது மறுமையில் நற்கூலி இருக்கிறது.
ஒருவர் என்ன செய்கின்றார் என்ற புறத்தோற்றத் தைவிட எத்தகைய எண்ணத்தோடு கருமமாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது அதற்கு நிறைவான கூலி இருக்கிறது.
2. நம்பிக்கையும் பொறுப்புணர்வும்
ஒருவர் தான் செய்கின்ற தொழில், தன்னுடைய கடமைகள் பற்றி மறுமையில் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவேன் என்ற உணர்வோடு தொழில் புரிய வேண்டும். அவர் தொழுகை, நோன்பு, குழந்தை வளர்ப்பு, கணவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுதல் என்பன பற்றி தான் விசாரிக்கப்படுவது போலவே தன்னுடைய தொழில் சார்ந்த பொறுப்புகள் பற்றியும் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தொழிலில் ஈடுபட வேண்டும்.
பெறும் ஊதியத்திற்கு ஏற்ப தமது பொறுப்புகளை நிறைவேற்றாது முழுச் சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு செய்யும் தொழிலில் பேணுதலின்றி நடந்து கொண்டால் அந்தச் சம்பளம் ஹராமானதாக மாறும்.   
3. தொழில் பற்றிய அறிவு
இன்று பலர் தாம் செய்யும் தொழில் பற்றிய அறிவின்றி, தெளிவின்றி தொழில் புரிகிறார்கள். இது ஒரு பெரும் அநீதி. இதனால் குறித்த நிறுவனம் மட்டுமின்றி சமூகமும் பாதிக்கப்படுகிறது. எனவே, செய்யும் தொழிலைத் திருந்தச் செய்ய வேண்டும். அதனை அறிந்து செய்ய வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் நிலைப்பாடு. 
4. நிறைவாக, பூரணமாகச் செய்தல்
எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதனை அழகாக, பூரணமாகச் செய்ய வேண்டும் திறம்படச் செய்ய வேண்டும். எதனையும் அரைகுறையாகச் செய்யக் கூடாது. வேலையின் விளைவு கனதியாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
“ஒருவர் ஒரு வேலையைச் செய்தால் அதனைத் திறம்படச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.” (அத்தபரானி)
இவை தவிர வேலையில் மோசடி செய்யாமை, எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளுதல், கடினமாக உழைத்தல்... போன்ற பண்புகளையும் தொழிலாளர்கள் அணிகலனாகக் கொள்ளும் அதேவேளை கண்டபடி விமர்சனம் செய்தல், உரிமை என்ற பெயரில் திட்டமிட்டு சதி செய்ய முயற்சித்தல் போன்ற பண்புகளை விட்டும் விலகியிருத்தல் வேண்டும். 
பிறரிடம் கையேந்தாது தான் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் உழைப்பில் ஈடுபட்டால் அவர் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார். எவன் பெருமைக்காகவும் ஆணவத்திற்காகவும் உழைக்கப் போகின்றானோ அவன் ஷைத்தானுடைய பாதையில் இருக்கிறான் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
தூய்மை, நம்பிக்கை, நாணயம், பொறுப்புணர்வு, தியாகம், அர்ப்பணம், நேரம் தவறாமை என்பவற்றோடு இப்படித்தான் பொருளீட்ட வேண்டும் என இஸ்லாம் வகுத்த வரையறைக்குள் நின்று தொழில் புரிய வேண்டும்.
எப்படியாவது, எந்த வழியிலாவது சம்பாதித்து முன்னேற வேண்டுமென நினைப்பது தவறானது. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமானது. இந்த நிலை மாறினால் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் குடும்பம், சமூகம், நாடு என முழு உலகமும் வளம் பெறும். இத்தகைய பண்புகளை அணிகலனாகக் கொண்ட ஒரு தொழிலாளர் படை இன்றைய தேவையாகும்.
எனவே, தொழிலாளர்களின் உரிமைகள் ஒருபோதும் மீறப்படலாகாது அவ்வாறே தொழிலாளர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.