53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி - 1)

ஸைது இப்னு ஹாரிதா
زيد ابن حارثة
க்காவிற்கு யாத்திரை சென்று திரும்பி வந்த தம் குலத்து மக்கள் சொன்ன செய்தியைக் கேட்ட அவருக்கு அதை நம்ப முடியவில்லை. அது அவருக்கு அடிவயிற்றில் பால் வார்த்தது. சோகத்தில் வாடியிருந்த தேகத்தில் சடுதியில் புத்துணர்வு பரவி, முகத்தில் அப்படியொரு பிரகாசம்.
நொடிப் பொழுதையும் வீணாக்காமல், நீண்ட பயணத்திற்குத் தேவையானவற்றைப் பரபரவென்று தயார் செய்தார். தம் சகோதரரையும் துணைக்கு அழைத்துக்கொண்டார். மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு அவரது பயணம் துவங்கியது.

மக்கா வந்து சேர்ந்தார். தொலைதூரம் பயணித்துவந்த அலுப்பு, களைப்பு எதுவும் அவருக்குப் பொருட்டாகவே இல்லை. மனமெங்கும் பரபரப்பும் ஆவலும் அப்பிக்கிடந்தன. நகருள் நுழைந்ததும் கண்ணில் தென்பட்டவர்களிடம் விசாரித்தார். “அப்துல்லாஹ்வின் மகனார் இல்லம் எது?”
அவர் தேடிவந்தவர் மக்காவிலுள்ள குரைஷிகளுக்கு மிகவும் அறிமுகமானவர். அவர்களது அன்பிற்கு உரியவர். வாஞ்சையுடன் அல்-அமீன் என்று குரைஷிகள் அவரை அவரது பண்புப் பெயரால் குறிப்பிடுவதும் வழக்கம். எனவே அவரது இல்லத்தை எளிதாய் அறிந்து அடைய முடிந்தது; அவரையும் சந்திக்க முடிந்தது.

அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முந்தைய காலகட்டம் அது. அதனால் அப்பொழுது மக்கள் முஹம்மது அவர்களை அறிந்து வைத்திருந்ததெல்லாம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ். வந்தவர் நபியவர்களிடம் தளுதளுத்துப் பேசினார். “அப்துல் முத்தலிபின் வழித்தோன்றலே! மக்காவின் மக்களாகிய உங்கள் குலத்தினர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்பில்லாதவர்களுக்கு அபயம் அளிக்கின்றீர்கள். பசித்தவருக்கு உணவளிக்கின்றீர்கள். துன்பத்தில் உழல்பவருக்கு உதவுகின்றீர்கள். தங்களிடம் உள்ள எங்கள் மைந்தரின் பொருட்டு நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப் போதிய பணமும் கொண்டு வந்துள்ளோம். அதற்கான கிரயத்தைச் சொல்லுங்கள். எங்களுக்குக் கருணை புரியுங்கள்.”
“தங்களின் மகனா? யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.
வந்தவர்கள் தெரிவித்தார்கள்.
“அவரது விடுதலையைத் தாங்கள் விலை கொடுத்து வாங்குவதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லவா?” அன்புடன் கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.
“என்ன அது?” ஆச்சரியத்துடன் கேட்டார்கள் வந்தவர்கள்.
விவரித்தார்கள் முஹம்மது அவர்கள்.
வந்தவர்களுக்குத் தாங்க இயலாத ஆச்சரியம்! ‘நாம் செவிமடுத்தது கனவா நனவா’ என்பதைப்போன்ற வியப்பு!
“ஆஹா! எவரும் நினைத்தே பார்க்கமுடியாத தயாள குணம் அமைந்தவராய்த் தாங்கள் இருக்கின்றீர்கள்” என்று அந்த ஆச்சரியம் அவர்களது பதிலில் வெளிப்பட்டது.
ஆனால் அடுத்து நிகழ்ந்தவைதாம் பேராச்சரியம்.
oOo
கதீஜா பின்த் குவைலித் அம்மையார் மக்காவில் ஒரு செல்வச் சீமாட்டி. கணவனை இழந்து கைம்பெண்ணாய் இருந்த அவரை, மறுமணம் புரிந்துகொள்ளப் பலருக்கும் ஆர்வம், ஆசை. ஒருவர் மாற்றி ஒருவர் அவரிடம் ஆள் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுள் எவர்மீதும் கதீஜா அம்மையாருக்கு ஆர்வம் ஏற்படவில்லை. தம்மைத் திருமணம் புரிய அணுகுபவர்களின் குறிக்கோள் தம்மிடம் உள்ள செல்வம் என்பது அவருக்குப் புரிந்திருந்தது. நேர்மையான, அன்பான, உண்மையான ஒருவர் தமக்குக் கணவராய் வாய்க்கவேண்டும் என்று காத்திருந்தவருக்கு அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது அவர்கள் அறிமுகமானார்கள். மக்காவில் உள்ள அனைவரும் அவர்கள்மீது நல்லபிப்ராயம் கொண்டிருந்ததை அவர் நன்கு கேள்விப்பட்டிருந்தார். இந்நிலையில் கதீஜா அம்மையாரின் வர்த்தகம் ஒன்றில் முஹம்மது அவர்கள் ஈடுபட ஒரு வாய்ப்பு அமைந்து, அது அவர்களின் குணாதிசயத்தை அவர் நேரடியாகவே நன்கு உணர்ந்துகொள்ள உதவியது. ‘இவர்தாம் தமக்குக் கணவராய் அமையத் தகுந்த கனவான்’ என்று அவருக்கு மனதில் உறுதி ஏற்பட்டது. தம்மைவிட முஹம்மது வயதில் இளையவர் என்பதைப் புறந்தள்ளி, அவர்களை கதீஜா அம்மையார் திருமணம் புரிந்தார்.
அன்பார்ந்த தம் கணவருக்கு அன்பளிப்பு அளிக்க விரும்பினார் கதீஜா அம்மையார். அது சிறப்பான ஓர் அன்பளிப்பாய் இருக்கவேண்டும் என்று நினைத்தவருக்கு மனதில் உதித்த எண்ணம் ஸைது. ஸைதை அழைத்து ‘இந்தாருங்கள்’ என்று நபியவர்களுக்கு அன்பளிப்பாய் அளித்தார் அன்னை கதீஜா. ஸைது, கதீஜா அம்மையாருக்குக் கிடைத்ததே ஓர் அன்பளிப்பாகத்தான். சில காலங்களுக்குமுன் தம் சகோதரர் ஹிஸாமின் மைந்தர் ஹகீமைச் சந்திக்கச் சென்றிருந்தார் கதீஜா அம்மையார். தம் அத்தையின்மீது ஏக அன்பும் பரிவும் கொண்டிருந்தவர் ஹகீம் பின் ஹிஸாம். தம்மைச் சந்திக்க வந்த அத்தையைக் கண்ணியப்படுத்த விரும்பினார் அவர். அதனால் தம் அடிமைகளைக் காண்பித்து, ‘தங்களுக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். ஒவ்வொருவராய்ப் பார்த்துக் கொண்டே வந்த கதீஜா அம்மையாரைச் சிறுவர் ஸைதின் இனிய முகமும் அதில் புதைந்திருந்த புத்திக்கூர்மையும் கவர்ந்தன. அழைத்துக்கொண்டார்.
அக்காலத்தில் மனிதர்களைப் பண்டமாய் விற்றார்கள், வாங்கினார்கள், பரிமாறிக் கொண்டார்கள். அரபு நாடு என்றில்லை; ரோம், பாரசீகம் என்று அது அப்போது உலக வழக்கம். இஸ்லாம் மீளெழுச்சி பெற்ற பின்னரே அடிமை என்பதன் பரிமாணத்தை அது மாற்றி அமைத்தது; அவர்களும் மனிதர்களே என்பதை நிலைநாட்டியது; மெதுமெதுவே அம்முறையை அழித்தது. தம் அத்தைக்கு அன்பளிப்பாய் அளித்த ஸைதை, ஹகீம் இப்னு ஹிஸாம் விலைக்கு வாங்கியிருந்தார்.
உக்காள் சந்தையைப் பற்றி துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் படித்தோமே நினைவிருக்கிறதா? ஆம் என்பவர்களுக்குப் பாராட்டுகள். இது மக்காவின் அருகே அமைந்திருந்த சந்தை. இந்தச் சந்தையில் அரேபியாவிலுள்ள அனைத்துக் குலம், கோத்திரத்து மக்கள் வந்து குழுமுவார்கள். வியாபாரம், பண்டமாற்று, அது-இது என்று சுறுசுறுப்பாய் இருக்கும்.  அங்குதான் சிறுவர் ஸைதை 400 திர்ஹமுக்கு விலைபேசி வாங்கி வந்திருந்தார் ஹகீம் இப்னு ஹிஸாம். அந்தச் சந்தைக்கு அந்தச் சிறுவர் எப்படி வந்து சேர்ந்தார்? அது ஒரு சிறுகதை.
ஹாரிதா இப்னு ஷராஹீலும் ஸுதா பின்த் ஃதஅலபாவும் கணவன்-மனைவி. இவர்களுக்கு ஸைது இப்னு ஹாரிதா, ஜப்லா இப்னு ஹாரிதா என்று இரண்டு மகன்கள். சிறு குடும்பம்; அமைதியான வாழ்க்கை என்று காலம் கழிந்துகொண்டிருந்தது. ஒருநாள் ஸுதா தம் கணவரிடம், ‘‘நான் சென்று என் சொந்த பந்தங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்’’ என்று அனுமதிபெற்றுப் பயணம் கிளம்பினார். தம்முடன் சிறுவயது மகன் ஸைதையும் அழைத்துக்கொண்டார். ஹாரிதா, தம் மனைவியின் பயணத்திற்கான மூட்டை முடிச்சுகளைக் கட்டித் தந்தார். வணிகக் கூட்டத்துடன் கிளம்பிய தம் மனைவியையும் மகனையும் கூடவே சிறிது தூரம் வரை நடந்து சென்று வழியனுப்பி வைத்தார்.
ஸுதாவின் உறவினர்கள் மஅன் குலத்தார். அவர்களுக்கும் பனூ அல் ஃகைன் கோத்திரத்திற்கும் இடையே ஏதோ பழைய பகை இருந்திருக்கிறது. நல்ல ஒரு வாய்ப்பு அமைந்தபோது, பனூ அல் ஃகைன் கோத்திரத்தினர் மஅன் குலத்தினரின் ஊரைச் சுற்றி வளைத்தனர். சகட்டுமேனிக்குப் போட்டுத் தாக்கினார்கள். பணம், கால்நடைகள் என்று கொள்ளையடித்து இலவச இணைப்பாய் நிறைய மக்களையும் சிறைப்பிடித்து, போயே போய்விட்டனர். அவர்கள் சிறைப்பிடித்த மக்களுள் அவ்வூருக்கு விருந்தினராக வந்திருந்த ஸுதாவின் எட்டு வயது மகன் ஸைது இப்னு ஹாரிதாவும் ஒருவர். ஊர்விட்டு ஊர்வந்து, தம் மகனைக் கொள்ளையர்களுக்குப் பறிகொடுத்து, திகைத்து, கதறி நின்றார் ஸுதா!
பனூ அல் ஃகைன் கொள்ளையர்கள் தாங்கள் சிறைப்பிடித்தவர்களை விற்பதற்குக் கொண்டு சென்ற சந்தை உக்காள். அங்கு ஹகீம் பின் ஹிஸாம் இப்னு குவைலிதுக்கு அடிமையாக விலைபோனார் சிறுவர் ஸைது இப்னு ஹாரிதா. அங்குத் துவங்கி, எசமானர்கள் பலரின் கை மாறி, இறுதியாக அல்-அமீன் முஹம்மதிடம் வந்தடைந்தார் அவர். அல்-அமீன் அவர்களின் அரவணைப்பில் ஸைதின் வாழ்க்கை அடிமை என்ற அடிப்படையில் துவங்கியது பெயரளவில்தானே தவிர, அது அடிமைத் தளைக்குச் சற்றும் தொடர்பற்ற உன்னத வாழ்க்கை. பெற்ற மகனைக் கவனிப்பதைப்போல் அன்பு, கனிவு, அரவணைப்பு என்று பாசம் கிடைக்கக் கிடைக்க, அந்த மாமனிதரின் நிழலில் உயர் ஒழுக்கத்துடன் வளர ஆரம்பித்தார் ஸைது இப்னு ஹாரிதா.
oOo
பெற்ற மகனைக் கொள்ளையரிடம் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக வீடு திரும்பினார் ஸுதா. மரணத்தால் ஏற்படும் பிரிவு ஒருவகை சோகமென்றால், விழித்துக்கொண்டிருக்கும் போதே கண்ணெதிரே மகனை ஒரு கூட்டம் பிடுங்கிச் செல்வது பெருந்துயரம்! கையாலாகாத்தனம், கழிவிரக்கம், ஆத்திரம் ஆகிய பல உணர்ச்சிகள் அதில் கலந்து நாள்தோறும் நொடிதோறும் அது வருத்தி எடுக்கும். ஸுதாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது! ஆனால் தம் மகன் எப்படியும் கிடைத்துவிடுவான் என்று ஏதோ ஒரு நம்பிக்கை. அது அசட்டு நம்பிக்கையா, அர்த்தமுள்ளதா என்று தெரியாது. ஆனால் அதில் அவரது நாள்கள் கடந்துகொண்டிருந்தன. இரவெல்லாம் அழுகையில் கழியும். ஒரு கட்டத்தில் தம் மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதே அவருக்குக் கேள்விக்குறியாகிப் படுத்தி எடுத்தது. இறந்துவிட்டார் என்று தெரிந்தாலாவது ஒரேயடியாக அழுது முடித்து சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாமே என்றுகூட அவருக்குத் தோன்றியது.
 
தாயின் பாசத்திற்குக் குறையாத பாசக்காரத் தந்தையாக இருந்தார் ஹாரிதா. மகனைத் தொலைத்துவிட்டு மனைவி மட்டும் திரும்பியதும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் நிலைகுலைந்து போனது அவரது வாழ்க்கை. அதற்காக அவர் நொறுங்கிப்போய் வீடடங்கிவிடாமல் தேட ஆரம்பித்தார். எப்படியாவது தம் மகனைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அவருக்கு உரமேற்பட்டுவிட்டது. தென்பட்ட திசையெல்லாம் பயணித்தார். அங்குக் கண்ணில் பட்டவரிடமெல்லாம் விசாரித்தார். அழுகையும் சோகமும் மிகைத்துப்போய், கழிவிரக்கம் மிகுந்து கவிதையெல்லாம் வடித்தார். அரபியர்கள் அதில் மிகத் தேர்ந்திருந்தார்கள். காதல், பாசம், வீரம், சோகம், வரலாறு என்று அனைத்திற்கும் அவர்களுக்குக் கவிதை. ஹாரிதா வடித்த கவிதை அரபு மொழிக்கே உண்டான உயர் தரக் கட்டமைப்பில் உள்ளதால், அதை நமக்கு விளங்கும் தமிழில் இப்படியாகப் புரிந்துகொள்ளலாம்.
என் செய்வேன் என்னிறைவா
என்னருமை ஸைதுக்காக
கண்ணழுது ஓயவில்லை
கைசேதம் இக்கொடுமை
 
மறைந்துபோன செல்ல மகன்
மலைகளில் திரிகின்றானோ
மண்ணுக்குள் புதைந்து அவன்
விண்ணுக்கே ஏகினானோ
 
மீட்டுத்தா என்னிறைவா
மீண்டும்தா எனக்கவனை
மண்ணுலகைத் தந்ததுபோல்
மனமுருகிப் போற்றிடுவேன்
 
கதிரவன் எழும் காலையும்
முதிர்ந்தவன் விழும் மாலையும்
புதிர்போலத் தெரியுமென்
புதல்வனின் நினைவுகளே!
 
உச்சிப் பொழுதில் அவன்
உச்சிமுகர மனம் விழையும்
கடுங்காற்று அடிக்கும்போதும் நான்
படும் பாடு மகன் நினைவால்
 
துக்கம் உயிர் துளைத்திடவே
தூக்கம் வராக் கணங்களினால்
பொங்கிப் பொங்கி அடங்குகின்றேன்
அவன் போன இடம் புரியவில்லை
 
புதல்வா உனைத்தேடி
புயலாய் அலைந்திடுவேன்
புதிதாய்த் திசையிருப்பின்
அதிலும் நுழைந்திடுவேன்
 
கால்குளம்பு உளியாக
பாலை மணல் முழுதும்
சலித்து உனை மீட்காமல்
சாகாது என் ஒட்டகம்
இப்படி ஹாரிதா தம் மகனைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்க, அவர் குலத்தினர் சிலர் யாத்திரைக்காக மக்கா சென்றனர். அஞ்ஞானக் காலத்தில் அம்மக்கள் அங்கு நட்டுவைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கு வணக்கம் செய்யும் யாத்திரை. அவர்கள் கஅபாவைச் சுற்றி வரும்போது யதேச்சையாய் ஸைதை நேருக்குநேர் பார்த்து விட்டனர். ஸதை அடையாளம் தெரிந்துபோய் அவர்களுக்கு ஏக ஆச்சரியம்! ‘மக்காவிற்கு எப்படி வந்தாய்? என்ன ஏது’ என்று விசாரிக்க, நடந்ததையெல்லாம் சொன்னார் ஸைது. இறுதியில், “பெருந்தன்மையுள்ள ஓர் உயர்குண மனிதரிடம் நான் இங்குப் பத்திரமாக இருக்கிறேன் என்று என் பெற்றோரிடம் தெரிவித்து விடுங்கள்” என்று தம் பெற்றோருக்குச் செய்தியும் சொல்லி அனுப்பினார்.
யாத்திரைக் கடமைகளை முடித்துக்கொண்டு தங்கள் ஊர் திரும்பிய அவர்கள் உடனே ஹாரிதாவைச் சந்தித்தார்கள். ‘உம் மைந்தர் மக்காவில் இருக்கிறார். அடிமையாக வளர்ந்து வருகிறார். நாங்கள் பார்த்துப் பேசினோம்” என்று அனைத்தையும் விலாவாரியாக விவரித்தனர். அதைக் கேட்டு ஹாரிதாவுக்குச் சொல்லி மாளாத மகிழ்ச்சி! வற்றிய கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது! அதற்குமேல் ஒரு நொடிப் பொழுதும் வீணாகுமா என்ன? ஓட்டமாய் ஓடிப் பயணத்திற்கான கால்நடையைத் தயார் செய்தார்; ‘அடிமையாகக் கிடக்கிறானாமே’ என்று தம் மகனை விடுவிக்கப் பணம் திரட்டி மடியில் கட்டிக்கொண்டார்; துணைக்குத் தம் சகோதரரையையும் அழைத்துக்கொண்டார்; ‘ஸுதா உன் கவலைக்கு விடிவு. நான்போய் நம் மகனை மீட்டு வருகிறேன்’ என்று மனைவியிடம் விடைபெற்று, மக்காவை நோக்கி அவரது பயணம் துவங்கியது.
மக்கா வந்து சேர்ந்ததும் தொலைதூரம் பயணித்து வந்த அலுப்பு, களைப்பு எதுவும் அவருக்குப் பொருட்டாகவே இல்லை. மனமெங்கும் பரபரப்பும், ஆவலும் அப்பிக்கிடந்தன. நகருள் நுழைந்ததும் கண்ணில் தென்பட்டவர்களிடம் விசாரித்தார். “அப்துல்லாஹ்வின் மகனார் இல்லம் எது?”
முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முந்தைய காலகட்டம் அது. அதனால் அப்பொழுது மக்கள் அவர்களை அறிந்து வைத்திருந்ததெல்லாம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ். வாஞ்சையுடன் அல்-அமீன் என்று குரைஷிகள் அவரை அவரது பண்புப் பெயரால் குறிப்பிடுவதும் வழக்கம். எனவே அவரது இல்லத்தை எளிதாய் அறிந்து அடைய முடிந்தது. முஹம்மது அவர்களைத் தம் சகோதரருடன் சென்று ஹாரிதா சந்தித்தார். அவர்களிடம் தளுதளுத்துப் பேசினார்.
“அப்துல் முத்தலிபின் வழித்தோன்றலே! மக்காவின் மக்களாகிய உங்கள் குலத்தினர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்பில்லாதவர்களுக்கு அபயம் அளிக்கின்றீர்கள். பசித்தவருக்கு உணவளிக்கின்றீர்கள். துன்பத்தில் உழல்பவருக்கு உதவுகின்றீர்கள். தங்களிடம் உள்ள எங்கள் மைந்தரின் பொருட்டு நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப் போதிய பணமும் கொண்டு வந்துள்ளோம். அதற்கான கிரயத்தைச் சொல்லுங்கள். எங்களுக்குக் கருணை புரியுங்கள்.”
“தங்களின் மகனா? யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.
“தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”
“அவரது விடுதலையைத் தாங்கள் விலைகொடுத்து வாங்குவதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லவா?” அன்புடன் கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.
“என்ன அது?” ஆச்சரியத்துடன் கேட்டார்கள் ஹாரிதாவும் சகோதரரும்.
(இன்னும் வருவார், இன்ஷா அல்லாஹ்)

http://www.satyamargam.com ல் இருந்து...

Comments