4 அல் அகீதா

தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை) பற்றிய விளக்கம்.
A- ஓரிறைக் கொள்கை எனும்போது அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று அவனது அதிகாரங்களில் மாத்திரம் அவனை ஓர்மைப்படுத்துவதே தௌஹீத் என்று முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகின்றனர். ஆனால் அது தௌஹீதின் ஒரு பகுதியே. ஏனெனில் இந்த அதிகாரத்தை அல்லாஹ்வுக்குக் கொடுத்த மக்கா வாசிகளை முஷ்ரிக்குகள், காபிர்கள் என்றே இஸ்லாம் அடையாளப்படுத்தியது. இதனை (31:25, 23:86, 43:9,87) போன்ற வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன.
அப்படியானால் அவர்களை காபிர்கள் என அல்குர்ஆன் ஏன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது? காரணம் அவர்கள் தௌஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை ஒரு வகையாக மாத்திரம் (அல்லாஹ் படைத்தவன், காப்பவன், அழிப்பவன் என்று மாத்திரம் நம்புவதும், தேவைக்கு மாத்திரம் அவனை அழைப்பதும் போன்று) கறுதினர்.

 ஆனால் ஒருவன் பரிபூரணமாக அல்லாஹ்வை ஏற்று பூரணகொள்கை (தௌஹீத்) வாதியாக மாற வேண்டுமானால் அவன் மூன்று வகைகளை ஏற்று அதனடிப்படையில் அல்லாஹ்வை ஓர்மைப்படுத்த வேண்டும். ஒன்றை ஏற்று மற்றதை மறுக்கும் நிலை இருக்குமானால் அவன் வழி தவரவேண்டிய நிலை ஏற்படலாம். அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.
 B-தௌஹீதை மூன்று வகையாக நோக்குவதற்கான ஆதாரத்தை முதலில் பார்ப்போம்.
ஸூரதுல் பாத்திஹாவின் வசனங்களுள் முதல் வசனம் அவனது அதிகாரத்தையும், இரண்டாவது மூன்றாவது வசனம் பண்புகளையும், நான்காவது வசனம் வணக்கம் பிரார்த்தனைகளையும் பற்றி பேசுகின்றது.
  • அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:1-4)
 ஸூரதுல் பகராவின் பின்வரும் வசனம் படைபாளன் அல்லாஹ் என்பதைக் கூறி அவனை வணங்குமாறு குறிப்பிடுகின்றது. எனவே படைத்தவன் என நம்புவது வேறு. வணக்கங்களை அவனுக்கு மாத்திரம் செலுத்துவது வேறு என்பது தெளிவாகின்றது.
  • மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.(2:21)
 பின்வரும் வசனத்தில் அல்லஹ்வின் பண்பான (நித்திய ஜீவன்) என்பதைக் கூறி அவனை சார்ந்திருக்குமாறு அல்லாஹ் கூறுகின்றான்.
  • எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.(25:58)
 மேலும் பின்வரும் வசனத்தில் அல்லாஹ்வின் பெயர்களை ஏற்று அவற்றைக்கொண்டு அவனை அழைக்குமாறு குறிப்பிடுவதோடு, அவற்றில் குழறுபடி செய்பவர்களையும் கண்டிக்கின்றது.
  • அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள்.-அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.(7:180)

எனவே தௌஹீதை
1-அதிகாரங்களில் ஓர்மைப்படுத்துவது.
2-வணக்கங்களில் ஓர்மைப்படுத்துவது.
3-பெயர்கள் பண்புகளில் ஓர்மைப்படுத்துவது.
என்று மூன்று வகையாக நோக்கலாம். இதனை சரியாக விளங்காததன் காரணமாக நிறைய முஸ்லிம்கள் வழிதவரிப் போயுள்ளனர்.
 C-தௌஹீதின் வகைகள்:
1-    اَلتَوْحِيْدُ الرُبُوْبِية  (தௌஹீத் ருபூபிய்யா)
செயற்பாடுகள், அதிகாரங்கள் விடயத்தில் அல்லாஹ்வை ஓர்மைப்படுத்தல். (அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று நம்புவது போன்று) இதனை ஏற்றிருந்த மக்கா முஷ்ரிக்குகள் இதன் வெளிப்பாடான இரண்டாம் வகையை சரியாக ஏற்கவில்லை.
2-    اَلتَوْحِيْدُ الْأُلُوْهِية  (தௌஹீத் உளூஹிய்யா)
வணக்க, வழிபாடுகளில் அல்லாஹ்வை ஓர்மைப்படுத்தல்.
(எவையெல்லாம் வணக்கமோ அவற்றை அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யவேண்டும்)
இவ்விரண்டுக்குமிடையிலான தொடர்பு:-
படைத்து, காத்து, அழிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றால் அவனை ஏன் வணங்கக் கூடது. எனவே தான் அவனை வணங்கச் சொல்லும் அல்லாஹ் படைத்ததை ஞாபகப்படுத்தி வணங்கச் சொல்கின்றான்.
படைத்து பரிபாளிப்பவன் அல்லாஹ் என்று ஏற்ற பிறகு வேறு ஒருவனுக்கு வணக்கம் செய்வதே பெறும் அநியாயம்.
  • இன்னும் லுக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)
  • அப்துல்லாஹ்ப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
3-    تَوْحِيْدُ الْأَسْمَاءِ وَالصِفًاتِ  (தௌஹீதுல் அஸ்மா வஸ்ஸிபாத்)
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லித் தந்த முறையில் அப்படியே ஏற்று நம்புவது.
(எனவே அல்லாஹ்வும் அவன் தூதரும் அல்லாஹ்வுக்கு என்ன பெயர்கள் பண்புகள் இருப்பதாக கூறினார்களோ, அவற்றை ஏற்றுக் கொள்வதோடு, எவை அவனுக்கு பொறுத்தமாகாது என்றனரோ அவற்றை மறுப்பதுமாகும்.)
D-விளக்கம்:
அல்லாஹ்வுக்குள்ள அதிகாரங்களை மறுத்தாலோ அல்லது அவனின் அதிகாரங்களில் வேறு படைப்பினங்கள் கூட்டு சேறுவார்கள் என்றாலோ அது குfப்ராக ஷிர்க்காக ஆகிவிடும்.
fபிர்அவ்ன் என்பவனும் செய்த பாவம் இதுவே, ஏனெனில் அவன் இறை அதிகாரங்களுக்கு தகுதியானவானக தன்னை கறுதியதோடு, இறைவனையே மறுத்தான்.
  • இன்னும் fபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறு ஒரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ) 28:38(
மேலும் இப்றாஹீம் நபி காலத்து அரசனும் இதனையே செய்தான்.
  • அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று கூற (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.  (2:258)
மேலும் நாத்திகர்கள் (அனைத்தும் தானாகவே இயற்கையாகவே இயங்குகின்றது என்று கூறுவோர்) போன்றோர் அனைத்தும் காலத்தின் கோலமே என்று கூறி காலம் தான் அனைத்தையும் இயக்குகின்றது என்றனர்.  அதனையும் குர்ஆன் குப்ராகவே வர்ணிக்கின்றது.
  • மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. (45:24)
எனவே இப்படியெல்லாம் அல்லாஹ்வின் அதிகாரங்கள் மறுக்கப்படும்போது அல்லாஹ் தன் தனித்துவமான அதிகாரங்களைக் காட்டி அவற்றை மறுக்கின்றான்.
  • அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? 36. அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். 37. அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா? 38. அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.( 52:35-38)
  • நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? 58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? 59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? 60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. 61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). 62. முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? 63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? 64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? 65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். 66. “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். 67. “மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? 69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? 70. நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? 71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? 72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?  ( 56:57-72)
இனி சமகாலத்தில் அல்லாஹ்வின் அதிகாரங்கள் எப்படியெல்லாம் படைப்பினங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதனைப் பார்ப்போம். அதிலும் முஸ்லிம்கள் அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

ஆக்கம் : அஷ் ஷேக் முர்ஷித் அப்பாசி,
     நாவலப்பிட்டிய,இலங்கை..

Comments