பிறை ஓர் ஆய்வு


அல்லாஹ் கூறுகிறான்
'ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.' (அல்குர்ஆன் 10:05)

இஸ்லாத்தில் பிறையை வைத்தே நோன்பும் பெருநாளும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த வகையில் பிறை முக்கியத்துவம் பெறுகின்றது. பிறையை வைத்து தீர்மானிக்கப்படும் நோன்பிலும் பெருநாளிலும் முஸ்லிம் சமுதாயம் பாரிய சிக்கலை எதிர்கொள்கின்றது. பிறை விடயத்தில் சரியான நிலைப்பாடு அதிகமானவர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. பிறை விடயத்தில் முஸ்லிம்கள் ஐந்து சாரார்களாக காணப்படுகின்றனர்.
முதலாவது சாரார்: ஒரு ஊரில் பிறை கண்டால் அந்த ஊரை மாத்திரமே அது கட்டுப்படுத்தும் எனக் கூறுபவர்கள்
இரண்டாவது சாரார்: விஞ்ஞான தொழில் நுட்பத்தைக் கொண்டு பிறையைக் கணிக்க வேண்டும் என்பவர்கள்
மூன்றாவது சாரார்: தங்களது மத குரு(ஷேக்) சொல்வதை அடிப்படையாக வைத்து பிறையை தீர்மானிப்பவர்கள்
நான்காவது சாரார்: நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்கள்
ஐந்தாவது சாரார்: உலகில் ஓர் இடத்தில் பிறை தென்பட்டால்; அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று கூறுபவர்கள்
ஓவ்வொரு சாராரும் தத்தமது நிலைப்பாடே சரியானது என்றும் மற்ற நிலைப்பாடுகள் தவறானவை என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு சாராரும் பிறை விடயத்தில் கூறும் கருத்துக்களை நோக்குவோம்.
ஒரு ஊரில் பிறை கண்டால் அது அந்த ஊரையும் அதை அண்டியுள்ள ஊர்களையும் மாத்திரமே கட்டுப்படுத்தும் என்ற கருத்து குர்ஆன் ஹதீஸிற்கு எதிரான ஒரு கருத்தாகும். ஒரு ஊரில் பிறை கண்டால் அது அந்த ஊரை மாத்திரமே கட்டுப்படுத்தும் என்பது இஸ்லாத்தில் இருக்குமாயின் குர்ஆன் ஹதீஸில் அதற்கான நேரடியான அல்லது மறைமுகமான ஆதாரம் இடம் பெற வேண்டும்;. இக்கருத்துடைய சாரார் வாதிடுவது போன்று ஊருக்கு ஊர் பிறையை வரையறை செய்து எந்த ஹதீஸும் இல்லை. எந்தக் குர்ஆன் வசனமும் இல்லை. இரண்டு கிராமவாசிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பிறை கண்டதாக சாட்சி கூறினார்கள் என ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று அபூதாவுதில் 2339ல் இடம் பெற்றுள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஊருக்கு ஊர் மட்டுமே பிறை பார்க்க வேண்டும் என இக்கருத்துடைய சாரார் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குறித்த ஹதீஸை விளங்க வேண்டிய விதத்தில் இச்சாரார் விளங்கவில்லை என்பதே எமது கருத்தாகும். காரணம் நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி கூறிய சம்பவத்தை வைத்து ஊருக்கு ஊர் மட்டுமே பிறை பார்க்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறவுமில்லை. அவ்வாறு நாம் விளங்குவதற்குரிய சாத்தியக் கூறுகளும் அந்த ஹதீஸில் இல்லை. சாட்சி சொன்ன தகவலை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுள்ளார்கள். எனவே நாமும் தகவல் வந்தால் அவற்றை ஏற்க வேண்டும் என்ற பாடம் மட்டுமே அந்த ஹதீஸில் உண்டு.
எனவே தகுந்த ஆதாரம் முதல் சாராரிடம் இல்லாதபடியால் இவர்களின் கருத்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமையப் பெற்ற கருத்தல்ல என்பதை நாம் நன்கு ஊர்ஜிதம் செய்யலாம்.
அடுத்து விஞ்ஞான தொழிநுட்பத்தைக் கொண்டு பிறையை கணிக்கலாம் என்ற கருத்தை நாம் ஆய்வு செய்தால் அது கூட மேலெழுந்த வாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தவறான முடிவு என்பதை உணரலாம். காணுதல் என இடம் பெற்ற அறபி வார்த்தைக்கு கணித்தல் என அர்த்தம் கொடுத்து தவறான முடிவை இந்த சாரார் அடைந்து விட்டார்கள்.
மூன்றாவது சாராரான தங்களது மத குரு என்றைக்கு பிறை பற்றிய முடிவை அறிவிக்கிறாரோ அதுதான் சரியான முடிவு என்று கூறுபவர்கள். இவர்கள் தங்களது மூளையை முழுக்க முழுக்க அடகு வைக்கும் சாராhராக உள்ளார்கள். இவர்கள் பற்றி நாம் பேசவே தேவையில்லை. ஏனெனில் இந்த சாராரின் வாதம் தகுந்த ஆதாரத்தைக் கொண்டதாகவோ, அல்லது சிந்திக்கத்தக்க விதத்திலோ அமையப் பெறவில்லை. எனவே இவர்களின் கருத்தும் குர்ஆன் ஸுன்னாவுக்கு முற்றிலும் எதிரானதே!
அடுத்து நான்காவது சாராரான நாட்டுக்கு நாடு பிறை பார்த்து அதையே அமுல்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களின் வாதங்களையும் சற்று நோக்குவோம். இக்கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். இக்கருத்து கூட குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமையப் பெற்ற கருத்தல்ல. அதிகமான மக்கள் செய்வதால் அது இஸ்லாத்தில் உள்ளது என்று நாம் ஏற்க இயலாது. தகுந்த ஆதாரம் அமையும் பட்சத்தில்தான் அதனை இஸ்லாத்தின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியும். இந்த அடிப்படையையும் நாம் மறந்து விடக் கூடாது.
ஒரு நாட்டில் பிறை கண்டால் அது அந்த நாட்டை மாத்திரமே கட்டுப்படுத்தும் என இக்கருத்துடையவர்கள்; வாதிடுகின்றனர். இது நியாயமான வாதமில்லை. ஏனெனில் நாடுகளின் எல்லைகளை அல்லாஹ்வோ அவனது தூதரோ எமக்கு வகுத்துத் தரவில்லை. எமது வசதிக்கு ஏற்பவே அவைகள் அரசாங்கத்தினால் வகுத்துத் தரப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக நாடுகள் பிரிவதும் சேர்வதும் சர்வ சாதாரணமான அம்சமாகும்.
இன்னும் சொல்லப்போனால் நாட்டுக்கு நாடு பிறை என்பதே சரியானது என்ற கருத்தில் கூட இவர்கள் உறுதியானவர்கள் இல்லை என்றே நாம் கூறுகின்றோம். உதாரணமாக இந்தியாவிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறை கண்டால் இலங்கையின் தலைமன்னாரில் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதாவது காணப்பட்ட பிறையை அடிப்படையாக வைத்து நோன்போ பெருநாளோ இவர்கள் அனுஷ்டிக்கமாட்டார்கள். ஏனெனில் ராமேஸ்வரம் இந்தியாவைச் சேர்ந்தது. தலைமன்னார் இலங்கையைச் சேர்ந்தது என அப்போது வாதிடுவார்கள். ஆனால் இரண்டிற்குமிடையே உள்ள தூரம் சுமார் 35 கிலோ மீட்டரே ஆகும். இதில் வியப்பு என்னவென்றால் யாப்பாணத்தில் தலைப் பிறை கண்டால் காலியில் அதனை ஏற்றுக் கொள்வார்கள். இரண்டிற்குமிடையே உள்ள தூரம் கிட்;டத்தட்ட 300 கிலோ மீட்டருக்கு அதிகமாகும். 30 கிலோமீட்டர் தூரத்தில் காணப்பட்ட பிறையை ஏற்காதவர்கள், 300 கிலோ மீட்டர் தூரத்தில் காணப்பட்ட பிறையை ஏற்கிறார்கள் என்றால் இவர்களின் அறிவுத்தராதரத்தை நாம் என்னவென்பது? இவர்களின் முடிவில் என்ன நியாயம் உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே நாட்டுக்கு நாடு பிறை பார்த்து அதையே அமுல்படுத்த வேண்டும் என்ற கருத்தும் குர்ஆன் ஹதீஸின் கருத்தல்ல என்பது நன்கு தெளிவாகின்றது.
அடுத்ததாக உலகில் ஓர் இடத்தில் பிறை கண்டால் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்ற கருத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.
சர்வதேசப்பிறை என்றால் என்ன?
உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ரமளானின் தலைப்பிறை தென்பட்டால் அதை ஏற்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அமல் செய்ய வேண்டும். உலகத்திலுள்ள அனைவரும் ஒரே நாளில் மாதத்தை அடைகின்றனர். ஒரே நேரத்திலல்ல. ஒரே நேரத்தில் அடைவதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். அது உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலாகும். ஓரிடத்தில் காணப்படும் பிறை அனைவருக்கும் பொருந்துகின்றது என்றபடியால் இதனை நாம் 'சர்வதேசப்பிறை' என்று அழைக்கிறோம். இக்கருத்தை விளங்க வேண்டிய முறைப்படி சிலர் விளங்காததால் இது குழப்பமான கருத்து என கூறி வருகின்றனர். ஆனால் இக்கருத்துதான் மிக மிகத் தெளிவான கருத்தாகும் என்பதை நாம் வழங்கும் விளக்கத்திலிருந்து இன்ஷா அல்லாஹ் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
சர்வதேசப்பிறைக்கான முக்கிய மூன்று ஆதாரங்கள்
உலகில் ஓர் இடத்தில் பிறை கண்டால் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்பதற்கு மூன்று முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அவ்வாதாரங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் பார்ப்போம்.
சர்வதேசப்பிறைக்கான முதலாவது ஆதாரம்:
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَأَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدِّثُونِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا ثَلَاثِينَ، وَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا وَأَفْطِرُوا(السنن الكبرى-2437)
அப்துர்ரஹ்மான் பின் ஸைத் ஷக்குடை(சந்தேகத்திற்குரிய) நாளில் உரை நிகழ்த்தினார். அதில் அவர் பின்வருமாரு கூறினார். நான் நபி(ஸல்) அவர்களது தோழர்களுடன் அமர்ந்துள்ளேன். அவர்கள் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை சொன்னார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'பிறை கண்டு நோன்பு பிடியுங்கள்! பிறை கண்டு நோன்பை விடுங்கள்! (பிறை காணுதலை அடிப்படையாக வைத்து) வணக்கம் செய்யுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (மாதத்தை) முப்பதாக முழுமைப்படுத்துங்கள்! மேலும் இரண்டு பேர் (பிறை கண்டதாக) சாட்சி கூறினால் (அதை) ஏற்று நோன்பு மற்றும் பெருநாளை அனுஷ்டியுங்கள்! அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸைத் நூல்: ஸுனனுல் குப்ரா 2437)
விளக்கம்:
பிறை கண்டதாக உலகில் யாரேனும் எமக்கு சாட்சி கூறினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அற்புதமாக இந்த ஹதீஸ் விளக்குகின்றது. பிறை கண்டவர் என்ன நாட்டைச் சேர்ந்தவர்?, அவர் என்ன பாகையில் பிறையைக் கண்டார்?, காணும் போது இவர் என்ன நிலையில் இருந்தார்? என்பன போன்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது என்ற பாடமும் இந்;த ஹதீஸில் அடங்கியிருக்கின்றது.
மேலும் ஹதீஸில் வரையறை செய்யப்படாமல் ஒரு அம்சம் இடம் பெற்றால் அதனை வரையரை செய்யாமல் புரிவதே அறிவாளிகளின் செயலாகும். ஹதீஸில் மாத்திரமல்ல சாதாரண அம்சத்திற்கும் இது பொருந்தும். உதாரணமாக அஹ்மத் கடையில் இரண்டு பேனாக்களை வாங்கினான் என்றால் அஹ்மத் இரண்டு கறுப்புப் பேனாக்களை வாங்கினான் என்று கூற முடியாது. இரண்டு பேனாக்கள் வாங்கினான் என்றுதான் கூற வேண்டும். கறுப்புப் பேனாக்கள் வாங்கினான் என்பது தெளிவாக தெரிய வந்தால் கறுப்புப் பேனாக்கள் வாங்கினான் என்று கூறுவதில் ஆட்சேபனை இல்லை. இதே போல்தான் 'இரண்டு பேர் பிறை கண்டதாக சாட்சி கூறினால் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த இரண்டு முஸ்லிம்கள்; அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலென்ன? ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலென்ன? ஹதீஸில் பொதுவாகக் கூறப்பட்டால் நாம் பொதுவாகவே புரிய வேண்டும்.
சர்வதேசப்பிறைக்கான இரண்டாவது ஆதாரம்:
عَنْ عُمُومَةٍ لَهُ مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَصْبَحُوا صِيَامًا فِي رَمَضَانَ فَجَاءَ رَكْبٌ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوْهُ بِالْأَمْسِ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ يُفْطِرُوا بَقِيَّةَ يَوْمِهِمْ، فَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ
(السنن الصغير-1314)
(ஷவ்வாலின் தலைப்பிறை மறைக்கப்பட்டதால்) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் ரமளானின் இறுதிப்பகுதியில் நோன்பாளிகளாக காலைப் பொழுதை அடைந்தார்கள். ஒரு பிரயாணக் கூட்டம் வந்து நேற்று பிறை கண்டதாக சாட்சி கூறினார்கள். அப்போது எஞ்சிய நாளில் நோன்பை விட்டு விட்டு அடுத்த நாள் காலை தொழும் திடலுக்கு செல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். நூல்: ஸுனனுஸ் ஸகீர் 1314)
விளக்கம்:
பிறை கண்டதாக நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி கூறப்பட்ட போது 'இது தூரத்திலிருந்து வந்த தகவல்' எனக் கூறி நபி(ஸல்) அவர்கள் அந்தத் தகவலை உதாசீனம் செய்யவில்லை. அல்லது பிறையைக் கண்டவர்களுக்கு மாத்திரம் 'நீங்கள் கண்டதால் நீங்களே பெருநாளைக் கொண்டாட வேண்டும், எங்களுக்கு இது பொருந்தாது' என்று கூறவுமில்லை. அந்தச் சாட்சியை ஏற்று பெருநாள் கொண்டாடுமாறு மக்கள் அனைவருக்கும் கட்டளை பிறப்பிக்கிறார்கள். எனவே சர்வதேசப்பிறைக்கு இதுவும் சிறந்த ஆதாரமாகத் திகழ்கின்றது.
இது தூரத்தலிருந்து வந்த தகவல் என்பதை எப்படி உறுதி செய்வது? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். பிறையைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு கூட்டத்தினர் தெரிவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தினர் மதீனாவுக்கு அருகில் உள்ள ஊரிலிருந்து நிச்சயம் வந்திருக்க முடியாது. அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும். இரவில் ஓய்வு எடுத்துக் கொண்டால் கூட அதிகாலையில் புறப்பட்டு முற்பகலில் வந்திருக்கலாம். ஆனால் இக்கூட்டத்தினர் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக அபூதாவூத்- 1159, நஸயீ- 1557, பைஹகீ- 7987, தாரகுத்னி- 14, அஹ்மத்- 20579 ஹதீஸ் கூறுகிறது. அஸரிலிருந்து மக்ரிபுக்குள் உள்ள நேரம் தான் பகலின் கடைசிப் பகுதியாகும். இவ்வளவு தாமதமாக வந்துள்ளார்கள் என்றால் அதிகமான தொலைவிலிருந்து பயணம் செய்து தான் இவர்கள் வந்திருக்க வேண்டும். நடந்து வந்த காரணத்தால் தாமதமாக வந்திருப்பார்களோ என்றும் கருத முடியாது. வாகனக் கூட்டம் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுகிறது. வாகனத்தில் வந்திருந்தும் மாலை நேரத்தில் தான் மதீனாவை வந்தடைகிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் அதிகமான தொலைவிலிருந்து தான் மதீனாவுக்கு வந்துள்ளனர் என்பது உறுதியான விஷயமாகும். இவ்வளவு தொலைவிலிருந்து பிறை பார்த்த செய்தி கிடைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்காமல் அவர்களது கூற்றை ஏற்று நோன்பை விடுமாறும், மறுநாள் பெருநாள் தொழுமாறும் ஆணையிடுகிறார்கள். நோன்பு திறக்க சில மணி நேரங்களே இருக்கும் போது கூட நோன்பை விடச் சொல்லியுள்ளனர். எனவே எவ்வளவு தொலைவான ஊர்களில் பிறை பார்க்கப்பட்டாலும் அந்தத் தகவல் நமக்குக் கிடைக்குமானால் அந்தத் தகவலை ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.
சர்வதேசப்பிறைக்கான மூன்றாவது ஆதாரம்
عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ، فَقَدِمَ أَعْرَابِيَّانِ، فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا»، زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ،: «وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ(سنن أبي داود 2339)
ரமளான் மாத இறுதியில் (பிறை விடயத்தில்) மக்கள் சர்ச்சைப்பட்டனர். இரண்டு கிராமப்புறத்து அறபிகள் வந்து நேற்று மாலை பிறையைக் கண்டதாக நபி(ஸல்) அவர்களிடம் சான்று பகர்ந்தனர். எனவே நோன்பை விட்டு விட்டு அடுத்த நாள் காலை தொழும் திடலுக்கு செல்லுமாரு மக்களுக்கு நபி(ஸல் அவர்கள் மக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். அறிவிப்பவர்: ரிப்யீ பின் ஹிராஷ் நூல்: அபூதாவுத் 2339
விளக்கம்:
இந்த ஹதீஸை நாம் கவனமாக சிந்தித்தால் இதுவும் பிறை கண்டதாக யாரேனும் எம்மிடம் சாட்சி கூறினால் எவ்வளவு தூரத்திலிருந்து வந்துள்ளாய்? நீர் என்ன நாட்டைச் சேர்ந்தவர்? என்ற கேள்வியையெல்லாம் கேட்கக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இது சர்வதேசப்பிறைக்கான மூன்றாவது ஆதாரமாகும்.
மேற்குறித்த மூன்று ஆதாரங்களின் அடிப்படையில்தான் உலகில் எங்கேனும் பிறை தென்பட்டால் அதை ஏற்று முஸ்லிம்கள் அமல் செய்ய வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கின்றது.
நேரப்பிரச்சனைக்கு என்ன தீர்வு?
உலகத்தில் எங்கேனும் பிறை கண்டால் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என நாம் வாதிடுகிறோம். எமது இக்கருத்திற்கு மாற்றமான சகோதார்கள் எம்மிடம் ஒரு கேள்வியை பலமாக முன்வைக்கின்றனர். அதாவது உலகில் உள்ள நாடுகளின் நேரங்கள் வித்தியாசப்படுகின்றன. ஒரு நாட்டில் இரவாக இருந்தால் இன்னுமொரு நாட்டில் பகலாக உள்ளது. ஒரு நாட்டிலுள்ள மக்கள் மாலை வேளையில் இருந்தால் மறு நாட்டிலுள்ள மக்கள் காலை வேளையில் உள்ளார்கள். நோன்பு நோற்பதாயின் பஜ்ருடன் உண்ணுதல், பருகுதல் போன்ற சகல காரியங்களும் சம்பூ10ரணமாக்கப்பட வேண்டும் என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, இரவு எனும் கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!(அல்குர்ஆன்: 2:187)
மேற்குறித்த குர்ஆன் வசனம் பஜ்ருக்குப் பிறகு நோன்பு நோற்க இயலாது என்பதை அழுத்தமாக நிரூபிக்கின்றது. ஒரு நாட்டிலுள்ள மக்கள் இரவில் பிறை கண்டு அதே இரவின் ஸஹர் வேளையில் நோன்பு நோற்கிறார்கள் எனில் இன்னுமொரு நாட்டிலுள்ள மக்களுக்கு காலை ஏழு மணிக்குத்தான் பிறை கண்ட தகவல் கிடைக்கப் பெறுகின்றது. இவ்வாறான நிலையிலுள்ள மக்கள் என்ன செய்வது?; இவர்களுக்கு சர்வதேசப் பிறை பொருந்தவில்லையே!
இதுதான் இவர்களது கேள்வியாகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு நாம் நியாயமான இரண்டு தீர்வுகளை முன்வைக்கிறோம்.
தீர்வு:1
பன்னிரண்டு மணித்தியால நேர வித்தியாசத்தைக் காரணம் காட்டி நேரப்பிரச்சனையை முன்வைப்பவர்கள்; பாரியளவில் நேரப்பிரச்சனை ஏற்படாத நாடுகளுக்கு சர்வதேசப்பிறையை நடைமுறைப்படுத்;த முதலில் முன்வர வேண்டும். அதற்கு முன்வராமல் நேரம் வித்தியாசப்படுகின்ற நாடுகளின் பட்டியலை தேடி எடுத்துக் கொண்டு கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டிருப்பது நியாயமான ஒரு போக்கல்ல. உதாரணமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சர்வதேசப்பிறை நடைமுறை சாத்தியமானதாகவே உள்ளது. நடைமுறையில் சாத்தியமாக உள்ள ஒன்றை அமுல்படுத்துவதற்கு நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றை உதாரணமாகக் காண்பிப்பது அறியாமை ஆகும். எனவே சர்வதேசப்பிறையை அமுல்படுத்துவதற்கு சாத்தியமான நாடுகளில் வாழ்வோர் முதலில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். நேரம் வித்தியாசப்படும் நாடுகளின் விவகாரத்தை தனியே நோக்குவோம்.
தீர்வு:2
நேரப்பிரச்சனை ஏற்படும் நாடுகளுக்கு நாம் கூறக் கூடிய தீர்வு என்னவெனில் அவர்களுக்கு எப்போது தகவல் கிடைக்கப் பெறுகின்றதோ அந்த நேரத்திலிருந்தே அவர்கள் தங்களது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். என்ன நேரத்தில் தகவல் கிடைக்கின்றதோ அந்த நேரத்திலிருந்து நோன்பை தொடருவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. அதற்கு பின்வரும் ஹதீஸ் சிறந்த சான்றாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுறா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்;. அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரழி) நூல்: புஹாரீ 1960
இது ஆஷுறா நோன்பிற்கு கூறப்பட்ட சட்டம் என்று இந்த ஹதீஸை ஒதுக்க இயலாது. காரணம் ஆரம்ப காலத்தில் ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. பின்னர் அது கடமையில்லை என்று மாற்றப்பட்டது. ஆஷுறா நோன்பு கடமையில்லை என்ற படியால் அந்த நோன்பின் மற்ற அம்சங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. கடமை என்ற சட்டம் மட்டுமே மாற்றப்பட்டது. எனவே ஆஷுறா நோன்பிற்கு கூறப்படும் இச்சட்டம் ரமளான் நோன்பிற்கும் பொருந்தக்கூடியதே!
மேற்குறித்த ஹதீஸில் காலை நேரத்திலிருந்தே அன்ஸாரி ஸஹாபாக்கள் அவர்களது நோன்பை தொடருமாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்புகிறார்கள். இங்குதான் நாம் ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அதாவது அன்ஸாரி ஸஹாபாக்கள் வேன்றுமென்று நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடையவில்லை. எதேச்சகமாகவே நோன்பு நோற்காத நிலையில் காலை நேரத்தை அடைகிறார்கள். காலையிலிருந்தே நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்புகிறார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து எப்போது ஒருவருக்கு பிறை பற்றிய தகவல் கிடைக்கின்றதோ அவர் அப்போதிலிருந்தே நோன்பு நோற்கலாம். அது மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள இரண்டு நிமிடங்களாக இருந்தாலும் சரியே என்பதை நாம் விளங்கலாம். (நம் நாட்டிலுள்ளவர்களுக்கோ, அயல் நாடுகளில் உள்ளவர்களுக்கோ இச்சிக்கல் ஏற்படுவதில்லை என்பது தனி விஷயமாகும்.)
அதே போன்று ரமளான் முடிவடைந்து ஷவ்வாலின் தலைப்பிறை பற்றிய தகவல் ஒரு நாட்டிலுள்ளோருக்கு மாலை வேளையிலே கிடைக்கப் பெற்றால் அவர்கள் உடனடியாகக் பெருநாளைக் கொண்டாட இயலாது. கொண்டாடவும் கூடாது. பிறை பற்றிய தகவல் கிடைத்து மறு நாள்தான் அவர்கள் பெருநாள் கொண்டாட வேண்டும். ஷவ்வாலின் தலைப்பிறை கண்டு நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி கூறிய சாராருக்கும் நபி(ஸல்) அவர்களது தோழர்களுக்கும் அடுத்த நாள் பெருநாளைக் கொண்டாடுமாறுதான் நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பிக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
நாம் மேலே குறிப்பிட்ட இரண்டு தீர்வுகளும் நியாயமான தீர்வுகளே! இதனை நன்கு ஆழமாக சிந்தித்து சர்வதேசப்பிறை சரியானதா? அல்லது பிழையானதா? என்பதை மனதிற்குள் அசைபோட்டுப் பாருங்கள்!
நாட்டுக்கு நாடு பிறையை சிக்கலாக்கும் சில கேள்விகள்!
உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்பதுவே சரியான கருத்து என்பதை சற்று விரிவாக மேலே கண்டோம். சர்வதேசப்பிறையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சில நடைமுறைப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சர்வதேசப்பிறைக்கு எதிரான கருத்தைக் கொண்ட சாரார் அதற்கான சரியான தீர்வைக் கூறுவதில்லை. நாம் இவர்களிடம் முன்வைக்கும் சில கேள்விகளை மாத்திரம் இங்கு வழங்குகிறோம்.
எதிர் கேள்வி:1
உதாரணமாக துபாயில் உள்ள ஒருவர் ரமளான் மாத முப்பதாவது நோன்பை துபாயில் நிறைவு செய்து விட்டு பெருநாள் கொண்டாட தாயகம் (இலங்கை) திரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். தாயகத்தில் நாட்டுக்கு நாடு பிறைப்படி மக்கள் 29ல் இருப்பார்கள். பெருநாள் கொண்டாட தாயகம் திரும்பிய இவர் இப்போது என்ன செய்ய வேண்டும்? தாயகத்தில் அனைவரும் நோன்பு என்ற படியால் நோன்பு நோற்ற மக்களுடன் சேர்ந்து இவரும் நோன்பு நோற்க வேண்டுமா? அவ்வாறு அவர் நோன்பு நோற்றால் அது அவருக்கு 31 நோன்பாக ஆகாதா? 31 நோன்பு பிடிப்பது மார்க்கத்தில் ஹராமானதல்லவா? இல்லை, இல்லை!! அவர் நோன்பு நோற்கக் கூடாது என்றால் அவர் தனியாகப் பெருநாள் கொண்டாட வேண்டி வருமே? தன்னந்தனியாக ஒருவர் பெருநாள் அனுஷ்டிப்பதை மார்க்கம் அங்கீகரிக்கின்றதா? தனியாகப் பெருநாள் கொண்டாடக் கூடாது என்றால் அவர் என்ன தான் செய்வது? அன்றைய நாள் நோன்போ, பெருநாளோ கொண்டாடாமல் சும்மா இருந்து விட்டு மறு நாள் நாட்டு மக்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாட வேண்டுமென்றால் இது கேலிக் கூத்தில்லையா? சிந்தியுங்கள்!
எதிர்கேள்வி:2
ஒரு நாடு தன்னை ஒட்டியுள்ள கடலில் 22.2 கிமீ தூரத்தை தனது எல்லையாக வைத்துக் கொள்ளலாம். அந்த எல்லை அந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும். இந்த எல்லைக்குள் அந்நிய நாட்டவர் நுழைந்தால் அது சட்ட விரோத அத்துமீறலாகும். அந்தக் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதி பெற்றே யாரும் பிரவேசிக்க முடியும். 22.2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடல் பரப்பு யாருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் அந்த வழியாகக் கடந்து செல்லலாம். இது முதல் வகையான எல்லை. ஒரு நாட்டை ஒட்டியுள்ள கடலில் 393 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வளங்கள் அனைத்தும் அந்த நாட்டுக்கே சொந்தமானதாகும். அந்நிய நாட்டவர்கள் அங்கே எண்னெய்க் கிணறுகள் தோண்டுவதோ அங்கு தளம் அமைப்பதோ கூடாது. கடந்து செல்லும் வழியாக மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இரண்டாவது வகை எல்லையாகும். இரு நாடுகளிடையே பிரச்சினை ஏற்படாதிருக்க இது போன்ற விதிகள் அவசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை. சர்வதேச எல்லைக் கோட்டில் ஒருவர் பயணிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது நமது கேள்வி என்னவென்றால் இவர் எந்த நாட்டுப் பிறையை ஏற்க வேண்டும்?
எதிர்கேள்வி:3
வெளிநாட்டிலிருந்து வரும் தகவலை ஏற்க இயலாது என்ற கோட்பாட்டை இவர்கள் சகல விடயங்களிலும் கடைப்பிடிக்கின்றார்களா? தங்களது வாதத்தில் இவர்கள் உண்மையாளர்கள் எனில் வெளிநாட்டிலிருந்து வரும் எந்த செய்தியையும் இவர்கள் ஒப்புக் கொள்ளக்கூடாது. இவர்களின் வாதப்படி வெளிநாட்டிலிருந்து கணவனின் மரணச் செய்தி வந்தால் இங்கு மனைவி இத்தா இருக்கக் கூடாது. இது போன்ற முடிவுகளை எடுக்காமல் பிறை விடயத்தில் மாத்திரம் வெளிநாட்டு செய்திகளை ஏற்க மாட்டோம் என வாதிடுவது அறிவுபூர்வமில்லை.
அன்பான வாசகர்களே! சர்வதேசப்பிறைதான் சரியானது என்பதற்குண்டான ஆதாரங்களையும் விளக்கங்களையும் இங்கு நாம் இடம் பெறச் செய்தது மாத்திரமல்லாமல் எதிர்தரப்பினரின் நிலைப்பாடுகள் எவ்வாறு தவறாக உள்ளன என்பதையும் விளக்கியுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ் பிறை விடயத்தில் உண்மையை அறிந்து அதைப் பின்பற்ற நல்லருள் பாலிப்பானாக!

நன்றி: நசீர் நூரி,ஹெட்டிப்பொல,குர்னாகள.

Comments