பெண்கள் பாதங்களை அவசியம் மறைக்க வேண்டுமா?


பெண்கள் பாதங்களை முழுமையாக மறைக்க வேண்டுமா?

பெண்கள் பாதங்களை மறைப்பது தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்கள் இரண்டு சாரார்களாக பிரிந்து நிற்கின்றனர். ஒரு சாரார் பெண்கள் அவசியம் பாதங்களை மறைக்க வேண்டும் என்றும் மறு சாரார் அவ்வாறு மறைக்க வேண்டியதில்லை என்றும் கூறிவருகின்றனர்....

. எனவே இது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை விளக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

முதலில் கீழாடை தொடர்பில் நபி(ஸல்) அவர்களது வழிகாட்டல் எப்படி அமையப் பெற்றுள்ளது என்பதை சுருக்கமாக நோக்குவோம்.

கெண்டைக்காலின் நடுப்பகுதியை எல்லையாக்கிய தூதர்(ஸல்) அவர்கள்

நான் அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்களிடம் வேஷ்டி சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடமிருந்து எதையேனும் நீர் செவியுற்றுள்ளீரா? என வினவினேன். அதற்கு அவர் ஆம் என்று கூறிவிட்டு ஒரு விசுவாசியின் வேஷ்டி அவனது கெண்டைக்காலின் நடுப்பகுதியாகும். அதற்கும் கரண்டைக்காலுக்குமிடையே (வேஷ்டியை அணிந்து கொள்வது) குற்றமில்லை. கரண்டைக்காலைத் தாண்டி (ஆடை) கீழே இறங்குவது நரகத்தில் சேர்க்கும் அம்சமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றுள்ளேன் என்று கூறினார். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் நூல்: இப்னுமாஜா 3573

மேற்குறித்த ஹதீஸிலிருந்து கெண்டைக்காலின் நடுப்பகுதியை கீழாடைக்குரிய எல்லையாக நபி(ஸல்) அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அத்துடன் ஆடை கரண்டைக்காலுக்குக் கீழ் சென்றுவிடக்கூடாது என்பதையும் எச்சரிக்கையாகக் கூறுகிறார்கள்.

ஆடையை தரையில் இழுபட நடக்கக் கூடாது

கெண்டைக்காலின் நடுப்பகுதியை ஆடைக்குரிய எல்லைiயாக தீர்மானித்த நபி(ஸல்) அவர்கள் ஆடையை தரையில் இழுத்துக் கொண்டு நடப்பதையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து இச்சட்டத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

யார் தன் ஆடையை பெருமையுடன் இழுத்துச் செல்கின்றாரோ மறுமை நாளில் அவரை அல்லாஹ் பார்க்க மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் (அல்லாஹ்வின் தூதரே!) அப்படியானால் பெண்கள் தங்களுடைய ஆடையின் ஓரப் பகுதிகளை என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பெண்கள் ஒரு ஜான் இறக்கிக் கொள்ளலாம் என்றார்கள். அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம். இதை விட அவர்கள் அதிகப்படுத்தக் கூடாது என்று பதிலளித்தார்கள். நூல் : திர்மிதீ (1653)

மேற்குறித்த ஹதீஸ் வழங்கும் சட்டம் என்ன?

பெண்கள் முழுமையாக கால்பாதங்களை மறைக்க வேண்டும் என்பதற்கு மேற்குறித்த ஹதீஸை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸை நுணுக்கமாக நோக்கினால் பெண்கள் கால்பாதங்களை மறைப்பது அவசியமில்லை என்பதற்குத்தான் இந்த ஹதீஸ் சிறந்த ஆதாரமாக திகழ்வதை நாம்; புரிந்து கொள்ளலாம்.

'ஆடை இழுபடும் அளவிற்கு நடக்கக் கூடாது' என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது இச்சட்டம் ஆண்களுக்கு மட்டுமா? அல்லது பெண்களுக்கும் உரியதா? என்ற சந்தேகம் உம்மு ஸலமா(ரழி) அவர்களுக்கு ஏற்படுகின்றது. அதனால்தான் உம்மு ஸலமா(ரழி) அவர்கள் 'பெண்கள் இந்த விவகாரத்தில் என்ன செய்வது?' என்ற கேள்வியை அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கின்றார்கள். அதற்குத்தீர்வாகவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு ஜான் கீழே இறக்கட்டும் என்று கூறுகிறார்கள். அப்போதும் உம்மு ஸலமா(ரழி) அவர்கள் ஒரு ஜான் இறக்கினால் கால்பாதங்கள் தெரியுமே! என்று மீண்டும் வினவுகிறார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அப்படியானால் ஒரு முழம் இறக்கட்டும் என்று கூறுகிறார்கள்.

உண்மையில் பெண்கள் கால்பாதங்களை முழுமையாக மறைப்பது அவசியம் என்றிருக்குமானால் இந்த விடயத்தில் பெண்கள் என்ன செய்வது? என்று உம்மு ஸலமா ஆரம்பமாகக் கேட்ட சந்தர்ப்பத்திலேயே இச்சட்டம் பெண்களாகிய உங்களுக்குக் கிடையாது. ஆண்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று நபியவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறவில்லை. ஆண்களது ஆடையை விட பெண்களின் ஆடை சற்று கீழே இறங்கி இருக்க வேண்டும் என்ற உண்மையை உம்மு ஸலமாவிற்குப் புரிய வைக்கிறார்கள். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒரு ஜான் என்று கூறிவிட்டு பின்னர்; ஒரு முழம் என்று கூறுகிறார்கள்.

எதிலிருந்து இறக்குவது?

பெண்கள் கீழாடைகளை ஒரு ஜான் அளவு இறக்குவதாக இருந்தாலும் ஒரு முழம் அளவு இறக்குவதாக இருந்தாலும் எதிலிருந்து இறக்க வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழவே செய்யும். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமாவிற்கு எதிலிருந்து இறக்கச் சொன்னார்கள்? என்பதை சரியாக அறிந்து விட்டால் பெண்கள் கால்பாதங்களை மறைப்பது தொடர்பான இஸ்லாமியச் சட்டத்தை சரியாக அறிந்து கொள்ள முடியும். ஆடையை எதிலிருந்து இறக்குவது என்பதிலிருந்துதான் இஸ்லாமிய அறிஞர்களிடையே சர்ச்சை ஆரம்பமாகின்றது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாயின் ஒவ்வொரு சாராரும் முன்வைக்கும் வாதங்களை எதுவும் விடுபடாமல் அலசி ஆராய்ந்து, நியாயமான ஒரு முடிவுக்கு வருவதே சிறந்ததாக இருக்கும் எனக் நினைக்கிறோம்.

ஆடையை இறக்குவது தொடர்பில் மூன்று கருத்துக்கள் முன்மொழியப்பட்டுகின்றன.

முதலாவது: கரண்டையிலிருந்து இறக்க வேண்டும்

இரண்டாவது: கெண்டைக் காலிலிருந்து இறக்க வேண்டும்

மூன்றாவது: முட்டுக்காலிலிருந்து இறக்க வேண்டும்

மூன்றையும் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.

கரண்டைக் காலிலிருந்து எடுக்கலாமா?

கரண்டைக்காலிருந்து ஒரு ஜான் இறக்கச் சொன்னார்கள் என்றோ அல்லது கரண்டைக்காலிருந்து ஒரு முழம் இறக்கச் சொன்னார்கள் என்றோ ஹதீஸை நாம் விளங்க இயலாது. காரணம் கரண்டையிலிருந்து ஒரு ஜான் இறக்கினாலோ அல்லது ஒரு முழம் இறக்கினாலோ எந்தப் பெண்ணாலும் அத்தகைய ஆடையை அணிந்து நடக்க இயலாது. இதை ஏற்றுக் கொண்டால் அறிவீனமான சட்டத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள் என்று கூற வேண்டி வரும் நஊதுபில்லாஹ்! எனவே கரண்டைக்காலிருந்து பெண்கள் கீழாடையை இறக்க வேண்டும் என்பது இந்த ஹதீஸிற்கான விளக்கமல்ல என்பதை சந்தேகமற நாம் புரியலாம்.

கெண்டைக்காலிலிருந்து எடுக்கலாமா?

முட்டுக்காலுக்கும் கரண்டைக்காலுக்கும் மத்திய பகுதியில்; உள்ளதற்கே கெண்டைக்கால் என்று கூறப்படும். கெண்டைக்காலில் இருந்து ஒரு முழம் இறக்கினால் அது கால்பாதங்களை முழுமையாக மறைப்பதுடன் காலுக்குக் கீழேயும் இறங்கிச் சென்று விடும். அத்தகைய ஆடையை அணிந்து எந்தப் பெண்ணாலும் நடந்து செல்ல இயலாது. எனவே கெண்டைக்காலிலிருந்து இறக்குவது என்பதும் இந்த ஹதீஸிற்கான விளக்கமல்ல என்பதை சந்தேகமற நாம் புரியலாம்.

முட்டுக்காலிலிருந்து எடுக்கலாமா?

முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் இறக்கினால் சரியாக கரண்டை கால்வரை அதன் அளவு இடம் பெறும். அவரவர்; தனது கையினால் இதை அளந்து சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே பெண்கள் ஆண்களை விட சற்று கீழே இறக்குவதின் அதிகபட்ச எல்லையாக கரண்டைக்காலைத்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தீர்மானித்துள்ளார்கள் என்பது இதிலிருந்து எமக்கு விளங்குகின்றது. மேலும் (பெண்கள்) 'ஆடையை ஒரு முழம் இறக்கட்டும்' என்று கூறிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் 'அதற்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என்பதையும் அதனுடன் சேர்த்துக் கூறுகிறார்கள். பெண்கள் கால்களை முழுமையாக மறைக்க வேண்டும் என்பதுதான் இந்த ஹதீஸிற்கான விளக்கமென்றால் அதற்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என்று நபியவர்கள் கூற வேண்டிய அவசியம் கிடையாது. காரணம் முழுமையாக கால்களை மறைத்த பின்னர் அதற்கப்பாலும் ஆடையை கீழே இழுத்துக் கொண்டு யாரும் நடந்து செல்லமாட்டார்கள். நடந்து செல்லவும் இயலாது. குறைந்த பட்சம் ஆடை கரண்டை வரை இருந்தால்தான் 'அதற்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க வாய்ப்புண்டு. இதுவும் எமது கருத்தை வலுப்படுத்துகின்றது.

எனவே பெண்கள் கால்களை திறக்கலாம் என்பதைத்தான் உம்மு ஸலமாவின் ஹதீஸ் அற்புதமாக விளக்குகின்றது. மாற்றுக்கருத்திலுள்ளவர்கள் கருதுவது போல் இந்த ஹதீஸ் பெண்கள் கால்பாதங்களை மறைப்பதற்கான ஆதாரமாக ஒரு போதும் இல்லை. மறைப்பதற்கான ஆதாரமாக இந்த ஹதீஸை கருதும் அனைவரும் பெண்கள் கால்பாதங்களை முழுமையாக மறைப்பது அவசியம் என்று வாயளவில் கூறிக் கொண்டிருப்பார்களே தவிர அதை சரியாக நடைமுறைப்படுத்திக் காட்டமாட்டார்கள்

பாதம் மறைப்பது பற்றிய சந்தேகங்களும் தெளிவுகளும்

1-பெண்கள் தொழுகையில் கால்பாதங்களை மறைப்பது அவசியமா?

தொழுகையில் பெண்கள் கால்பாதங்களை மறைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அபூதாவுத் உட்பட சில ஹதீஸ்கிரந்தங்களில் பெண்கள் தொழுகையில் கால்களை மறைப்பது பற்றி ஒரு செய்தி உள்ளது. அது பலவீனமான செய்தியாகும். தேவைப்பட்டால் அதையும் விரிவாக வழங்குவோம்.

எனவே தொழுகையிலோ அல்லது தொழுகைக்கு வெளியிலோ பெண்கள் கால்பாதங்களை அவசியம் மறைக்க வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற கூற்று என்பது நிரூபணமாகின்றது.

2-நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் சொக்ஸ் அணிந்து பாதங்களை மறைத்திருக்கமாட்டார்களா?

பதில்: இன்றைய காலத்தில் நமது பெண்கள் அணியும் சொக்ஸ் வழக்கம் அன்று நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. ஹுப் என்று ஆண்கள் அணியும் ஒரு வகையான காலணிதான் அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. ஹுப் என்பதை பிரயாணிகளாக இருக்கும் ஆண்கள் அணிந்ததாகத்தான் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பெண்கள் அணிந்ததற்கு ஆதரம் இடம் பெறவில்லை.

ஹுப் காலணியின் படம்

wr3

பெண்கள் அணியும் வழக்கம் அன்று இருந்திருந்தால் கால்பாதங்கள் தெரியுமே? என உம்மு ஸலமா(ரழி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பதையும் நாம் வகனத்திற் கொள்ள வேண்டும்.

சந்தேகம்:2 பெண்கள் கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று குர்ஆன் கூறுகின்றதே! இதிலிருந்து பெண்கள் கால்பாதங்களை மறைக்க வேண்டும் என விளங்க இயலாதா?

தெளிவு: பெண்கள் கால்களை அடித்து நடக்க வேண்டாம் என குர்ஆனில் கூறப்பட்டது முற்றிலும் உண்மையே! ஆதை நாம் மறுக்கமாட்டோம். ஆல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

பெண்கள் தாங்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டும் என்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்(24:31)

இந்த வசனத்தை வைத்து பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என சிலர் வாதிடுகின்றனர். இது உண்மையில் தவறான சிந்தனையால் ஏற்பட்ட விளைவாகும்.

பெண்கள் கால்களால் அடித்து நடக்க வேண்டாம் என்பது அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற கருத்தில் சொல்லப்பட்ட வசனமாகும். அதனால்தான் அல்லாஹ் தொடர்ந்து கூறும் போது 'மறைத்து வைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட' (இவ்வாறு கால்களால் அடித்து நடக்க வேண்டாம்) என்று மிகத் தெளிவாகக் கூறுகிறான். கொலுசு என்ற அலங்காரத்தை அன்னிய ஆடவரின் பார்வையிலிருந்து பெண்கள் பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த வசனத்திலிருந்து நாம் விளங்கலாமே ஒழிய பெண்கள் பாதங்களை மறைப்பதற்கான ஆதாரமாக இது ஒரு போதும் அமையாது.

சந்தேகம்:3

மழை காலங்களில் ஆடையில் அசுத்தம் பட்டால் மண் அதைத் தூய்மைப்படுத்தும் என நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணுக்கு கூறியதாக சிலர் கூறுகின்றனர். இந்த ஹதீஸ் உண்மையாயின் பெண்களின் ஆடை நன்றாக கீழே இறங்கினால்தானே இது சாத்தியப்படும்?

தெளிவு:

'மழை காலங்களில் ஆடையில் அசுத்தம் பட்டால் மண் அதைத் தூய்மைப்படுத்தும்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் அபூதாவுதில் இப்படி ஒரு ஹதீஸ் உள்ளது.

நான் (நபிகள்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பள்ளிக்கு வர நாற்றம் நிறைந்த ஒரு பாதைதான் எங்களுக்கு உண்டு. மழை பெய்தால் நாங்கள் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதை விட நல்ல பாதை அதற்குப் பிறகு இல்லையா? என்று வினவினார்கள். நான்; ஆம் என்றேன். இது அதற்குப் பகரமாகி விடும் என்று பதிலளித்தார்கள். நூல்: அபூதாவுத் 384

பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸை வைத்தும் சிலர் வாதம் புரிகின்றனர். இவர்களது வாதம் என்னவெனில் நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட பெண்ணின் ஆடையில் அசுத்தம் படுமளவிற்கு அவரது ஆடை கீழே இறங்கியுள்ளது. அதனால்தான் அந்தப் பெண்மனி அதற்கான தீர்வைக் கேட்கிறார். எனவே இதிலிருந்து பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என விளக்கம் அளிக்கின்றனர்.

ஒரு ஹதீஸ் இடம் பெற்றால் அதை ஆழமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அவசரக்குடுக்கையாக முடிவெடுத்து விடுகின்றனர். தங்களது வாதத்திற்கு சான்று உள்ளதா? என்று மட்டும்தான் இவர்கள் பார்க்கின்றனர். ஹதீஸின் உண்மையான கருத்தை இவர்கள் கவனிப்பதில்லை.

இந்த ஹதீஸ் பெண்கள் பாதங்களை மறைப்பது பற்றிப் பேசவில்லை. பாதையில் நடந்து வரும் போது செருப்புகளில் அழுக்குகள் பட்டால் அதற்கான தீர்வு என்ன என்பதை விளக்கும் ஹதீஸாகவே இது உள்ளது. செருப்புகள் என்று ஹதீஸ் இடம் பெறாவிட்டாலும் இது செருப்புகளைத்தான் குறிக்கின்றது என்று விளங்குவதற்கு இந்த ஹதீஸில் முகாந்திரம் உண்டு.

பொதுவாக பாதையின் அழுக்குகள் முதலில் செருப்புகளில்தான் படும். இவ்வாறு செருப்புகளில் அழுக்குகள் பட்டால் அழுக்குப்பாதையிலிருந்து நல்ல பாதைக்கு வந்தவுடன் நல்ல பாதையிலுள்ள மண் அதைப் போக்கி விடும். ஏனெனில் சகதிக்குள் எவரது ஆடை பட்டாலும் அவற்றை மண்ணைக் கொண்டு யாரும் நீக்குவதில்லை. ஆனால் செருப்புகளில் சகதி படும் போது தூய்மையான மண்ணில் நடந்து சென்று அவற்றை நீக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு நடக்கும் போது அதில் பட்ட அழுக்குகள் தானாகவே நீங்கி விடும் என்பதில் சந்தேகமில்லை.

சந்தேகம்:3

நான் ஆடையின் ஓரத்தை தொங்க விட்டுக் கொண்டு அசுத்தமான இடத்தில் நடந்து செல்லும் பெண்ணாவேன் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் கூறினேன். ஆதற்கு அவர்கள் பின்னால் வரும் (சுத்தமான) பாதை அதை சுத்தப்படுத்தி விடும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று பதிலளித்தார்கள் என்று அபூதாவுதில் இடம் பெறும் ஹதீஸ் பெண்கள் பாதங்களை மறைப்பது பற்றி பேசுகின்றதா?

தெளிவு: பாதங்களை மறைக்க வேண்டும் என்ற கருத்தை இந்த ஹதீஸ் வழங்கவில்லை. அதுமாத்திரமல்ல இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதும் கிடையாது. இச்செய்தியை உம்மு ஸலமா(ரழி) அவர்களிடமிருந்து அறிவிப்பு செய்யும் பெண்ணின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. ஆதலால் இதை ஏற்க இயலாது.

எனவே பெண்கள் கால்பாதங்களை தொழுகையிலோ அல்லது தொழுகைக்கு வெளியிலோ திறந்து கொள்ளலாம். அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமல்ல. இஸ்லாம் அனுமதித்த ஒரு விடயத்தை தடைசெய்வதற்கு எந்த மார்க்க அறிஞருக்கும் உரிமை கிடையாது என்பதை இறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

******குறிப்பு:    பெண்கள் பாதங்களை மறைப்பது தொடர்பில் கடந்த 22.10.2014 அன்று ஜமாஅத் தலைமையகத்தில் ஆய்வுக் கூட்டமொன்று நடைபெற்றது. காலை 6:30 மணி தொடக்கம் இரவு 8:30 மணிவரை நடைபெற்ற ஆய்வில் 'பெண்கள் பாதங்களை மறைப்பது அவசியமில்லை' என்ற முடிவே இறுதியாக எட்டப்பட்டு மக்களுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளை வாசகர்களுக்காக ஆதாரங்களுடன் தொகுத்து இங்கு வழங்குகிறோம். நாம் வெளியிடும் கருத்துக்களை கண்மூடித்தனமாக நம்பிவிடாமலும் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விடாமலும் நியாயமாக சிந்தித்து முடிவெடுக்குமாரு வாசகர்களை வேண்டுகிறோம்.******

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு

Comments