சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும்


சர்வதேசப் பிறை விடயத்தில், அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை விடுத்து, பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களான இஹ்வானிகளும், தனிமனிதர்களை கண்மூடிப் பின்பற்றும் தப்லீக்வாதிகளும், மார்க்கத்தை விட்டு வெளியேறிய கப்றுவணங்கிகளும் தவ்ஹீத்வாதிகளை மிகப்பெரும் பாவிகளாக சித்தரித்து வந்த காலம் சென்று, தவ்ஹீத்வாதிகள் என அறியப்படுகின்ற சில சகோதரர்கள் சர்வதேசப் பிறையை
சரிகண்டவர்களை மிகத் தாறுமாறாக விமர்சிக்கின்ற நிலமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
மத்ஹபுவாதிகளையும், மன்ஹஜே (சரியான கொள்கை) இல்லாதவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட சபைகளை நாங்கள் நிராகரித்து சர்வதேசப் பிறையை சரிகண்டமையால் நாம் எதிர்நோக்கிய மிகப்பெரும் விமர்சனம் ‘ஹவாரிஜ்கள்’ (இஸ்லாத்தில் முதன் முதலில் கிளரச்சி செய்து வெளியேறியவர்கள்) என்பதாகும். மேலும், அறிவீனர்கள், மனோ இச்சைக்காரர்கள் போன்ற விமர்சனங்களையும் எதிர்நோக்கினோம்.
ஆனாலும், தாம் அடையப்போகும்(?) இஸ்லாமிய கிலாபத்திற்கு உகந்தது சர்வதேசப் பிறைதான் என யூசுப் கர்ழாவி போன்றோர் வலியுறுத்தியும், மத்ஹபு நூற்களில் சர்வதேசப் பிறைக்கு சாதகமான கருத்துக்கள் நிறைந்திருந்தும், தான் அடைய விரும்புவது கணிப்பு அடிப்படையிலான பிறை அல்லது பிராந்தியப் பிறை என்றிருந்தும் தங்களுக்குள் ஆயிரமாயிரம் முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஸுன்னா வலியுறுத்துகின்ற சர்வதேசப் பிறையை மறுப்பதுதான் முழுமையான  மனோ இச்சையாகும்.
இவர்கள் தமக்குள் பாரிய கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தும் தேசியப் பிறையென எவ்வித அடிப்படையுமற்ற பிறையையே முன்னிலைப் படுத்துகின்றனர். தனிப்பட்ட முறைகளில் கேட்டுப்பார்த்தால் அவர்களது உண்மைநிலை புலப்படும். இங்கு எம்மோடு உடன்பாடான, அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே எமது கொள்கை என்ற நிலைப்பாட்டில் உள்ள சில சகோதரர்களும் சர்வதேசப் பிறையை விமர்சிக்கின்றனர். அவ்வாறு விமர்சிக்கும் போது ஒரு தடவை ஊருக்கு ஊர் பிறை என்றும், ஒரு தடவை மாநிலத்திற்கோர் பிறை என்றும், மற்றோர் தடவை நாட்டுக்கு ஓர் பிறை என்றும், தானும் குழம்பி மற்றவர்களையும்குழப்புகின்றனர். எனவே, மாற்றுக் கருத்துள்ள நமது சகோதரர்கள் முன்வைக்க கூடிய முக்கியமான சில விமர்சனங்களையும்  அவற்றுக்கான விளக்கங்களையும் நோக்குவோம்.
வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்கலாமா?
‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)
தூர, பிரதேச, கால எல்லைகளைக் கருத்திற் கொள்ளாது பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்பதற்கு மேலுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியும் ஒரு ஆதாரமாகும். ஆனால், அண்மை காலத்தில் மேலுள்ள நபிமொழியிலிருந்து சில தவறான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதன் உண்மை நிலை தொடர்பாக நோக்குவோம்.
விமர்சனம்:
வாகனக் கூட்டத்தினர் தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதனால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்களது தொழும் திடலுக்கு மறுநாள் செல்லுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகின்றது. பிறை பார்த்தவர்களுக்குதான்  அந்த கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த ஊர் மக்களுக்கு அல்ல!
விளக்கம்:
குறித்த நபிமொழியில் வாகனக் கூட்டத்தினர் நோன்பு நோற்றதாக கிடையவே கிடையாது. மேலும்,  நோன்பு நோற்றிருந்தவர்களையே நோன்பை விடுமாறுஏவ வேண்டும். வாகனக் கூட்டத்தினர் நோன்பு நோற்றிருந்தார்கள் என்பது நமது யூகமே அன்றி வேறில்லை. வாகனக் கூட்டத்தினரிடம் அழ்ழாஹ்வின் திருத் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்றுள்ளீர்களா? என வினவவுமில்லை. மாறாக, நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என வாகனக் கூட்டத்தினர் கூறவுமில்லை. இவ்வாறான நிலையில் நபிகளார் நோன்பை விடுமாறு கட்டளையிட்டது வாகனக் கூட்டத்தினருக்கே என வாதிடுவது தவறான வாதமாகும்.
அடுத்து, வாகனக் கூட்டத்தினர் மார்க்கத் தீர்ப்பு பெற வந்ததாக நபிமொழியில் இடம் பெறவில்லை. மாறாக, பிறை பார்த்ததாக சாட்சியமளிக்கவே வருகை தந்துள்ளதாக குறித்த நபிமொழி கூறுகின்றது. மேலும், ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909) என்கின்ற நபிமொழியின் முற்பகுதியை அறிந்தவர்கள், அதன்படி நோன்பு நோற்றவர்கள், அதன் பிற்பகுதியை அறியவில்லை எனவும், நோன்பு நோற்றுக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக வந்தனர் என்பதும் ஏற்புடைய வாதமல்ல.
மேலும், குறித்த நபிமொழியானது ‘நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்’ என்று ‘தன்மை’ நிலையில் ஆரம்பிக்கின்றது. ‘நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்’ என்று வாகனக் கூட்டத்தினரும் ‘தன்மை’யில்  பதிலளிக்கின்றார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்விரு சாராரையும் இணைத்து, அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என பொதுவாக நபிமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்னும் சற்று விரிவாக நோக்குவோமாயின், ஒரு விடயத்தை ஆரம்பத்தில் தன்மையில் கூறிவிட்டு பின்னர், முன்னிலையிலோ, படர்க்கையிலோ கூறுகின்ற வழக்கம் பொதுவாக எல்லா மொழி நடைகளிலும் உண்டு. இதனை அருள் மறைக் குர்ஆனிலும் காணமுடியும்.
‘கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி ‘இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்’ என்று அழ்ழாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.’ (அல்குர்ஆன் 10:22)
மேலுள்ள அருள்மறை வசனத்தில் ‘முன்னிலை’யில் குறிப்பிடப்பட்டுள்ள ‘நீங்கள்;’ என்பது யாரைக் குறிப்பிடுகின்றது? ‘அவர்களை’  என்று ‘படர்க்கை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது யாரைக் குறிப்பிடுகின்றது. இரண்டும் ஒரே சாராரையே குறிப்பிடுகின்றது.
அதனைப் போன்றே மேலுள்ள நபிமொழியில் அறிவிப்பாளர் அபூஉமைர் (ரஹ்) கூறுகையில், எனது சிறிய தந்தை எனக்கு சொன்னார் என்று ஆரம்பிக்கின்றார். அறிவிப்பாளர் அபூ உமைர் (ரஹ்), ‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்.’ என்று இங்கு குறிப்பிடுவது நபித்தோழர்களை ஆகும்.
அதே போன்று அறிவிப்பாளர் ‘அவர்களது நோன்பை விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்கள்’ என்று குறிப்பிடுவது நோன்பு நோற்றிருந்தவர்கள் அனைவரையும் என்பதையும், ‘அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்பது அனைத்து மக்களையுமே குறிப்பிடுகின்றது என்பதனையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மேலும், குறித்த நபிமொழியானது பிறைத் தகவல் உலகின் எப்பாகத்தில் இருந்து வந்தாலும் தூர, பிரதேச வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது தகவலை எற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. சாட்சியமளித்த வாகனக் கூட்டத்தினரிடம் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று விசாரிக்காது அவர்களது சாட்சியத்தை ஏற்று நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிடுகின்றார்கள். நேற்று மாலை பிறை பார்த்த வாகனக் கூட்டத்தினர் மறுநாள் பகலின் கடைசி நேரத்தில் அதாவது சுமார் 20 மணி நேரத்தின் பின்னர் வந்து சாட்சியமளிக்கின்றார்கள்.
நோன்பு திறக்க சில மணி நேரங்களே இருக்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
எனவே, இந்நபிமொழியானது உலகின் எப்பாகத்திலிருந்து தகவல் கிடைத்தாலும் அத்தகவல் தாமதமாகக் கிடைத்தால் கூட அதனை ஏற்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஏற்று அமுல்படுத்த வேண்டும்; என்கின்ற சர்வதேசப் பிறைக்கே வலுவான ஆதாரமாக அமைகின்றது.சிரியாவில் பிறை பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாதா?
‘உம்மு ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்த போது ரமழான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன். பிறகு அந்த (ரமழான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துழ்ழாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது ‘நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘நாங்கள்  வெள்ளியன்று பிறை கண்டோம்.’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீயே அதைக் கண்டாயா?’  என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்.’ என்று கூறினேன். அதற்கு அப்துழ்ழாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள், ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமழான் மாதத்தின்) எண்ணிக்கையை  முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறைiயைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான், ‘முஆவியா( ரழி) அவர்கள் (முதல் கண்டு), நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?’ என்று கேட்டேன். அதற்கு, இல்லை. இப்படித்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்:  குறைப் பின் அபீ முஸ்லிம் (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1983)
நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என வாதிடுகின்ற மார்க்க அறிஞர்களும், ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என வாதிடுகின்ற மார்க்க அறிஞர்களும் எடுத்து வைக்கின்ற பிரதான ஆதாரம் மேலுள்ள நபிமொழியேயாகும். இதன் உண்மை நிலை தொடர்பாக நோக்குவோம்.
விமர்சனம்:
தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குறைப் (ரஹ்) கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரழி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காணவேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.
இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள். எனவே, சிரியாவில் பார்த்த பிறை மதீனாவிற்குப் பொருந்தாது என வாதிடுகின்றனர்.
விளக்கம்:
மேற்படி நபிமொழியை ஆதாரமாகக் காட்டக் கூடியவர்கள் ஒருபோதும் இதனை நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில், குறித்த சம்பவம் இடம் பெற்ற காலப்பகுதியில் ஷாமும் (சிரியா), மதீனாவும்  ஒரே ஆட்சியின் கீழ், ஒரு நாட்டின் இரு மாகாணங்களாகவே காணப்பட்டன. எனவே, மேற்குறித்த நபிமொழியில் இருந்து சட்டம் எடுப்பதாக இருந்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு பிறை, மேல் மாகாணத்திற்கு ஒரு பிறை, வட மாகாணத்திற்கு ஒரு பிறை என்றுதான் சட்டம் வகுக்க முடியும் அல்லது இரு நகரங்களுக்கிடையிலான தூரத்தைக் கவனத்திற் கொண்டு சுமார் 1500கி.மீக்கு குறைவான தூரத்திலிருந்து கிடைக்கின்ற பிறைத்தகவலை ஏற்கலாம் என்ற கருத்துக்காவது குறைந்த பட்சம் வரவேண்டும்.மாறாக, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஒரு போதும் மேலுள்ள நபிமொழி ஆதாரமாக அமைய முடியாது என்பதனை மனதில் இருத்தியவர்களாக குறித்த செய்தியின் விளக்கத்தினை நோக்குவோம்.
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான பொன்மொழிகளும் மாத்திரமே ஆகும். அதற்கு மாற்றமாக கண்ணியமிகு நபித்தோழர்களின் சுய ஆய்வுகளாக இருந்தாலும்  அது ஒரு போதும் இஸ்லாத்தின் சட்ட மூலாதாரமாக அமைய முடியாது. அழ்ழாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட வஹியை மாத்திரமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
‘(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!’ (அல்குர்ஆன் 06:106) மேலும் பார்க்க: (அல்குர்ஆன் 02:38,24:51, 24:54,03:31,08:46,06:153,04:59, 33:36, 05:030). மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்களுக்கு, அவர்களது செயற்பாடுகள் விளக்கமாக அமையும். உதாரணமாக, ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அழ்ழாஹ்வின் தூதரே! இரவு தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்று கூறினார்கள்.’   (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1137)
மேலுள்ள நபிமொழியில் இரண்டிரண்டாக தொழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது பதினொறு ரக்அத்களை இரண்டிரண்டாக தொழுவதையே என்பதற்கு  கீழுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடு  விளக்கமாக அமைகின்றது.
‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)
இது போன்றே ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்று கூறிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் தகவல் எங்கிருந்து வந்தாலும் தூர, பிரதேச வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது ஏற்க வேண்டுமென தெளிவுபடுத்துகின்றன.
இப்போது குரைப் (ரஹ்) அவர்களின் செய்தியை நோக்குவோம். ‘இல்லை. இப்படித்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘இப்படித்தான்’ என்கின்ற  சொல் எங்கு நோக்கி மீள்கின்றது என்று சற்று நுணுக்கமாக நோக்குவோமாயின், இப்படித்தான் என்கின்ற சொல் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறிய, ‘நாங்கள் (ரமழான் மாதத்தின்) எண்ணிக்கையை  முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறைiயைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’ என்கின்ற வசனத்தை நோக்கியே மீள்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
அதாவது, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),                 நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909) என்கின்ற நபிமொழியை எடுத்துக்கூறி, ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர் களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்கின்ற நபிமொழியை தனது ஆய்வின் அடிப்படையில் மறுத்து விடுகிறார்கள்.
இப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையான வஹியை ஏற்பதா? அல்லது கண்ணியமிகு நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஆய்வின் முடிவை எடுப்பதா? என்ற வினாவிற்கு வஹியை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என அருளாளன் அழ்ழாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான்.
மேலும், பிறைத் தகவல் ரமழானின் இறுதிப் பகுதியிலேயே கிடைக்கின்றது. நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களும் ஷாம் வாசிகளும்  அடுத்த பிறையைப் பார்த்து மாத நாட்களின் எண்ணிக்கையை 29 ஆக பூர்த்தி செய்து விட்டு பெருநாள் கொண்டாடினால், ஒரு நாள் பிந்தி  பிறை பார்த்தவர்கள் 28 நாட்களில் மாதத்தை நிறைவு செய்ய வேண்டி ஏற்படும் என்பதனால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909) என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு குரைப் (ரஹ்) அவர்களின் தகவலை நிராகரிக்கின்றார்கள்.
அல்லது, குறித்த  ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்கின்ற நபிமொழி  நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கிடைக்காது இருந்திருக்கலாம். இதனையும் நாம் சுய யூகத்தின் அடிப்படையிலோ, கற்பனையிலோ கூறவில்லை. மாறாக, நபிமொழிகளை ஆய்வு செய்கையில் இத்தகைய முடிவுக்கே ஒருவர் வர முடியும். ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு 13 வயது ஆகும். உஹது யுத்தம் நடைபெற்ற போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 05 வயது சிறுவர்களாயிருந்தார்கள். உஹது யுத்தத்தில் கலந்து கொள்ளாத நபித்தோழர் அவர்கள் உஹது யுத்தம்  தொடர்பான பல செய்திகளை அறிவித்துள்ளார்கள். அதாவது குறித்த செய்திகளை உஹது யுத்தத்தில் கலந்து கொண்ட மூத்த நபித்தோழர் களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். மேலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து கேட்ட நபிமொழிகளில் இருந்து ஆய்வு செய்வார்கள். எனவே, தமது பிரதேசங்களுக்கு அப்பாலிருந்து வந்த பிறைத்தகவலை நபி (ஸல்) அவர்கள் ஏற்று செயற்பட்ட செய்திகள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தெரியாதிருக்கலாம் அல்லது மறந்திருக்கலாம் அல்லது தமது ஆய்வின் அடிப்படையில் குரைப் (ரஹ்) அவர்களின் தகவலினை நிராகரித்திருக்கலாம். மேலும், மனிதர்கள் என்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கு பல்வேறு செய்திகள் கிடைக்காதிருந்திருக் கின்றது என்பதனை பின்வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றது.
அனுமதி கோருதல்
‘உமர் (ரழி) அவர்கள் (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூமூசா (ரழி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள் உமர் (ரழி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூமூசா (ரழி) அவர்கள் திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரழி) அவர்கள், அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்! என்றார்கள். அவர் திரும்பிச் சென்றுவிட்டார்! என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரழி) அவர்கள் அபூமூசா (ரழி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர் என்று உமர் (ரழி) அவர்கள் கேட்டபோது) அபூமூசா (ரழி) அவர்கள், இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்! எனக் கூறினார்கள். உமர் (ரழி) அவர்கள், இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்! எனக் கேட்டார்கள். உடனே அபூமூசா (ரழி) அவர்கள் அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், நம்மில் இளையவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்ல மாட்டார்கள்! என்றனர். அபூமூசா (ரழி) அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (அபூசயீத் (ரழி) அபூமூசா (ரழி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்துகொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்! என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: உபைத் பின் உமைர் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2062,6245)
அனுமதி கோருதல் மூன்று தடவை என்கின்ற சட்டம் மனிதன் என்ற ரீதியில் கண்ணியமிகு நபித்தோழர் உமர் (ரழி) அவர்களுக்கு தெரியாதிருந்திருக்கின்றது. மேலும், ‘(வெளியே சென்று) கடைவீதிகளில்நான் வியாபாரம் செய்துகொண்டிருந்தது என் கவனத்தை திசை திருப்பிவிட்டது போலும்!’ என்று அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணம்
‘(நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்கர் (ரழி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரழி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரழி) மீண்டும் மறுக்கவே அபூபக்கர் (ரழி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரழி) பக்கமிருந்து அபூபக்கர் (ரழி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள், உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக, முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக, அழ்ழாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான். மேலும், அழ்ழாஹ் கூறுகிறான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அழ்ழாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அழ்ழாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144) என்றார்கள். அழ்ழாஹ்வின் மீதாணையாக! அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அழ்ழாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்கர் (ரழி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்துகொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1242,,3670)
இது போன்று மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் மிகப்பெரும் நபித்தோழர்களுக்கு கூட பல்வேறு செய்திகள் கிடைக்காதிருந்திருக்கின்றன என்பதை நபிமொழிக் கிரந்தங்களில் காணக்கிடைக்கின்றன. மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். 1.அழ்ழாஹ்வின் வேதம் 2. அவனது தூதர் (ஸல்) அவர்களது வழி முறைஎன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்-318)
இப்போது பிறை தொடர்பான அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயரிய வழிகாட்டலை நோக்குகையில் ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.’ என்று கூறிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூர, பிரதேச எல்லைகளை பொருட்படுத்தாது பிறைத் தகவலை ஏற்று அமுல்படுத்தியுள்ளார்கள்.
‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)
ரமழானை அடைவது…
‘இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை   அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.’ (அல்குர்ஆன் 02:185)
விமர்சனம்:
உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
விளக்கம்:
மேற்படி அருள்மறை வசனத்தில் ‘ஃபமன் ஷஹித’  ‘யார் அம்மாதத்தை அடைகிறாரோ’ என்று  இறைவன் கூறுவதனால் ரமழான் மாதத்தை அடையாதோரும் இருப்பார்கள் என வாதிடுகின்றனர். இதனை இலகுவாக ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக, கட்டார் நாட்டில் மாலை 6.30 மணிக்கு தலைப்பிறை தென்படுமாயின், தலைப்பிறையை கண்ட கட்டார் முதலில் ரமழானை அடைகின்றது. தகவல் கிடைக்காத யாரும் உலகில் அப்போது ரமழானை அடையவில்லை. தகவல் கிடைக்கும் போது உலகில் யாரெல்லாம் ஷஃபானை 29 ஆக பூர்த்தி செய்துள்ளார்களோ அவர்கள் இப்போது ரமழானை  அடைவார்கள்.
கட்டாரில் மாலை 6.30 மணிக்கு தலைப்பிறை தென்படுகையில், இலங்கையர்களாகிய நாம் இரவு 9.00 மணியில் இருப்போம். இப்போது கட்டாரில் இருந்து  இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால் நாம் ரமழானை அடைவோம். அதாவது: முதலில் கட்டார் மாதத்தை அடைகின்றது. தகவல் கிடைத்தன் பிற்பாடு நாம் மாதத்தை அடைகின்றோம்.
மேலும், பிறை கண்டு மாதத்தை அடைந்தவர்கள் உடனடியாக நோன்பை ஆரம்பிப்பதில்லை. மாலை 6.30 மணிக்கு பிறை தென்பட்டாலும் கிட்டத்தட்ட சுமார் 10 மணிநேரத்தின் பின்பே நோன்பை ஆரம்பிக்கின்றோம். அவ்வாறாயின் பிறை கண்ட நேரத்திற்கும் ஸஹரிற்கும் இடைப்பட்ட நீண்ட நேரத்தின் அர்த்தம் என்ன? பிறைத் தகவலை ஏனையோரும் ஏற்று மாதத்தை ஆரம்பிப்பதற்காகவே இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். என்பதனைப் புரிந்து கொள்ளலாம். அத்துடன் உலகில் பிறைத்தகவல் சென்றடைய முடியாத இடங்களில் வாழும் முஸ்லிம்களும் மாதத்தை அடையாமல் இருப்பார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சர்வதேசப் பிறை நடைமுறைச் சாத்தியமற்றதா?
விமர்சனம்:
சவூதியில் மாலை 7.00 மணியாக இருக்கும் போது அங்காரா (அமெரிக்கா) பிரதேசத்தார் காலை 7.00 மணியை அடைந்திருப்பார்கள். அதாவது, இவர்கள் ரமழானின் முதல் நாள் பகலை அடைந்து விட்டனர். இவர்கள் என்ன செய்வது? எனவே, சர்வதேசப் பிறை நடைமுறைச் சாத்தியமற்றதாகி விடுகின்றதே என ஒரு வாதத்தினை முன் வைக்கின்றனர்.
விளக்கம்:
இப்பூமியின் சுழற்சியின் அடிப்படையில் இந்த நேர வித்தியாசம் உலகம் முழுவதும் இரவு 12 மணி நேரம், பகல் 12 மணி நேரம் ஆக மொத்தத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் அதாவது: ஒரு நாளிற்கு மேல் செல்லாது.  எனவே, மாற்றுக் கருத்துள்ளவர்களின் வாதத்தின் அடிப்படையில் மிக கூடிய நேரமான 12 மணி நேரத்திற்கு பிறைத் தகவலை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு வஹியின் ஒளியில் தீர்வைக் கண்டுவிட்டால் 12 மணி நேரத்திற்கு குறைந்த நேரத்தில் தகவலை ஏற்று செயற்படுத்துவது மிக இலகுவான, நடைமுறைச் சாத்தியமான விடயமாகிவிடும்.
இதற்கும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியில் எமக்கு மிக அழகிய வழிகாட்டல் கிடைக்கின்றது. ரமழான் நோன்பு கடமையான நோன்பாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர், ஆரம்பத்தில் ஆஷுரா நோன்பானது கடமையான நோன்பாகக் காணப்பட்டது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஆஷுரா நோன்பை விரும்பியவர் நோற்கவும், விரும்பியவர் நோற்காதிருக்கவும் செய்யலாம் என்கின்ற இறைகட்டளை விதிக்கப்படுகின்றது.
‘ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (ஆஷுரா நாள்) அன்று நோன்பு நோற்குமாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள். ரழமான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் நாடியவர் ஆஷுரா நாளன்று நோன்பு நோற்றனர். நாடியவர் (அதை) விட்டு விட்டனர்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2070)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ‘நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘இது ஒரு மகத்தான நாள். இந்த நாளில்தான் மூஸாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான்.
எனவே, மூஸா(அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.’ என்று கூறினர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களை விட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்.’ என்று கூறினார்கள். பின்னர், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2083) ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளன்று ‘அஸ்லம்’  குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும். சாப்பிட்டு விட்டவர், இரவு வரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்’ என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸலமா பின்த் அல்அக்வஉ (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2090)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அழ்ழாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது, கம்பளியிலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது  நோன்பு துறக்கும் வரை  (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விiளாட்டுப் பொருளைக் கொடுப்போம்.’ (அறிவிப்பவர்: ருவய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2091)
மேலுள்ள நபிமொழிகளிலிருந்து ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் ஆஷுரா நோன்பு கடமையான நோன்பாக இருந்தது. ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிடுகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று கட்டளையிடுகின்றார்கள்.  பின்னர், ஆஷுரா நோன்பு கடமையான நோன்பு என்பதிலிருந்து, விரும்பியவர் நோன்பு நோற்கலாம். நாடியவர் (அதை) விட்டு விடலாம் என கட்டளை விதிக்கப்பட்டு, ரமழான் நோன்பு கடமையான நோன்பாக்கப்படுகின்றது.
எனவே, மேலுள்ள நபிமொழிகளிலிருந்து, இருபத்தொன்பதாம் நோன்பை நிறைவு செய்திருப்பவர்களுக்கு, மறுநாள் பகல் வேளையில் தகவல் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சிய பகுதியை நோன்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே, அந்த வகையிலும் சர்வதேசப் பிறையே நடைமுறைச் சாத்தியமானது என்பது தெளிவாகின்றது. கிராமத் தகவலும் நகரத் தகவலும்
‘ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம்’ என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்-2339, அஹ்மத்-18844)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளை யிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)
விமர்சனம்:
குக்கிராமத்து பிறை என்பதினால்தான் ‘கிராமப்புறத்து அரபிகள்’ என்று நபிமொழியில் வந்துள்ளது. உண்மையில் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை ஏற்பவர்கள் என்றால் எப்படி இவ்வார்த்தையை உங்களுக்கு ஏற்றவாறு திருப்புவீர்கள் என வாதிடுகின்றனர்.
விளக்கம்:
சர்வதேசப் பிறையை மறுக்கின்ற பலர் இவ்வாதத்தையே முன்வைக்கின்றனர். இவ்வாதத்தை சர்வதேசப் பிறைக்கு எதிராக முன்வைக்க கூடிய சகோதரர்கள் இவ்வாதம் உள்நாட்டுப் பிறைக்கும் எதிரானது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கிராமவாசிகள் வந்து தகவல் சொன்னதால் நகரங்களை அண்டியுள்ள கிராமப் புறங்களையே குறிக்கும் என வாதிடுகின்றனர். குறித்த நபிமொழிகளில்; ‘கிராமங்களிலிருந்து’ வரும் தகவலை மாத்திரம்தான் ஏற்க வேண்டும் என கட்டளையிடப்படவில்லை. மாறாக, ‘வரும் பிறைத் தகவலை ஏற்கலாம்’ என்கின்ற செய்தியே குறிப்பிடப்படுகின்றது. மேலும் செய்தியைக் கொண்டு வந்தவர்களை அடையாளங் காட்டுவதற்காகத்தான் ‘கிராமவாசிகள்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஏனெனில், செய்தியைக் கொண்டு வந்தவர்கள் கிராமவாசிகள். மேலும், அபூதாவுத், அஹ்மத், தாரகுத்னி போன்ற நபிமொழிக் கிரந்தங்களில் ‘கிராமப்புறத்தவர்களின் தகவல்’ என்று இடம் பெறும் அறிவிப்புக்களை பின்வரும் நபிமொழி தெளிவாக விளக்குகின்றது.
‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (ரழி), நூல்: நஸயி-2116)
எனவே, சில நபிமொழிகளில் اعرابي (கிராமப்புறத்து மனிதர்கள்) என இடம்பெற்றிருப்பது தகவல் கொண்டு வந்தவர்களை அடையாளம் காண்பிப்பதற்காகவே இடம்பெற்றுள்ளது. இதனையே  ما خرج مخرج الغالب فلا مفهوم له   என்கின்ற ‘பரவலான வழமையையோ, அன்றைய நடைமுறையையோ  குறிக்கப்பயன்படுத்தப்பட்ட சொல், வாசகம் சட்டமியற்றப் பயன்படுத்தப்படமாட்டாது’ என்ற விதியும் உறுதி செய்கின்றது. இதனை அல்குர்ஆன் 4:23வது வசனம் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். மேற்படி வசனத்தில் திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட வர்களைப் பற்றிக் கூறிக்கொண்டு வருகின்ற இறைவன், ‘நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள்’ என்று குறிப்பிடுகின்றான். முன்னர் செய்த திருமணத்தின் மூலம் பெறப்பட்ட பெண் குழந்தைகள் தமது பொறுப்பில் இல்லாவிட்டால் கூட அவர்களை திருமணம் செய்யக்கூடாது என்பதுவே இஸ்லாமிய சட்டமாகும். அதே போன்றுதான் நபிமொழியில் இடம்பெற்றுள்ள ‘கிராமப்புறத்து மனிதர்’ என்கின்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்,  4 சதுரகிலோமீற்றர் அல்லது 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட கிராமத்தகவல் 100 சதுர கிலோமீற்றர்  பரப்பளவினைக் கொண்ட நகரத்தவர்களைக் கட்டுப்படுத்தும் என்றால், 100 சதுர கிலோமீற்றர் நகரத்தின் தகவல் ஒரு நாட்டை கட்டுப்படுத்தாதா? ஒரு நாட்டின் தகவல் முழு உலகையும் கட்டுப்படுத்தாதா? ஏனெனில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ என்று பொதுவாகத்தானே கட்டளையிட்டுள்ளார்கள்.அத்துடன் குறித்த நபிமொழியில் காணப்படும் ‘கிராமவாசிகள்’ என்ற பதம் குறித்த நகரங்களை அண்டிய கிராமங்களில் வசிப்பவர்களைத்தான் குறிக்கும் என்பதில்லை. மாறாக, தூரநகரங்களை அண்டிய கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் பயன்படுத்தப்படும்.
மேலும், நாம் ஏலவே, ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு நபிமொழிகளை அணுகுவதாலேயே இவ்வாறான விபரீதமான நிலைப்பாடுகளை எடுக்க நேரிடுகின்றது. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஏனைய பொன்மொழிகளையும் இணைத்து நோக்குகையில் கிராமத் தகவல், நகரத் தகவல் என பாகுபடுத்தாது தகவல் எங்கிருந்து வந்தாலும் அதனை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று அமுல்படுத்த வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம்.
விமர்சனம்:
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வித வெளித் தகவலையும் பெற முயற்சிக்கவில்லை என்று கூறக்கூடிய சகோதரர்கள், நீங்கள் தொழிநுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் பின்னர்தானே இவ்வாறு செயற்படுகின்றீர்கள். அவ்வாறெனில், முன்னொரு காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த பிறையையா இப்போது நடைமுறைப்படுத்துகின்றீர்கள்? தொலைபேசி மற்றும் ஏனைய தொழிநுட்ப வசதி இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் என வாதிடுகின்றனர்.
விளக்கம்:
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வித வெளித் தகவல்களையும் பெற முயற்சிக்கவில்லை எனக் கூறினால் பிறை கண்டவர்கள் தகவல் சொல்வது என்பது வீணாகிப் போகின்றது. அவ்வாறு வீணான விடயத்தை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏவமாட்டார்கள். வெளிநாட்டுத் தகவலைப் பெற முயற்சிக்க கூடாது எனக் கூறுவோரே உண்மையில் அம்முயற்சியை எடுக்கின்றனர். இரவு 08.30 மணிவரை ‘கௌன்டர்’ திறந்திருக்கும். எம்மாவட்டத்திலாவது பிறை கண்டால் குறித்த இலக்கத்திற்கு தகவல் சொல்லுங்கள் என்று கூறுவோர் நாங்களா? நீங்களா? என்பதை சிந்திக்க வேண்டும். சிறிய நாடுகளுக்கு நிகரான ஒரு மாநிலத்திற்கு ஒரு பிறையைப் பிரகடனம் செய்து கொண்டு பல நூறு கி.மீ.களுக்கு அப்பால் தகவல் பெறுவது மட்டும் எந்தவகையில் நியாயம்? கருத்தில் உறுதியானவர்கள் என்றால்  நீங்கள் அந்தந்த ஊர்களோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டாமா?
விமர்சனம்:
‘உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள போது, சர்வதேச ரீதியில் தகவலை அறிய முற்பட்டால் இந்நபிமொழிக்கு வேலையில்லாமல் போய்விடுகின்றது என வாதிடுகின்றனர்.
விளக்கம்:
இந்த நபிமொழியைத் தவறாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே இவ்வினா எழுகிறது. மேலும், தலைப்பிறை தென்படும்; நேரம், தோன்றும் பிரதேசம், வெற்றுக் கண்களுக்கு தென்படும் நேரம் போன்ற விடயங்களை முன்கூட்டியே கணித்து அதன் அடிப்படையில் செயற்படுபவர்கள் இவ்வாதத்தினை முன்வைப்பதானது ஆச்சரியமானது. அடுத்து, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுஙகள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909) என்ற நபிமொழியானது பிறை தென்படும் இடமெல்லாம் மேகமூட்டம் காணப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. மாறாக, முதன் முதலில் எங்கு பிறை தென்பட வேண்டுமென இறைவன் நாடியுள்ளானோ அங்கு மேகமூட்டமாய் இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்வதையே குறிக்கின்றது.
விமர்சனம்:
இன்று சர்வதேச ரீதியாக தகவல் மூலம் நீங்கள் பெற முயற்சிக்கும் பிறையானது நாளையோ, அல்லது மறுதினமோ உங்கள் பகுதிக்கு தெரியுமல்லவா? இவ்வாறிருக்கையில் முந்திக் கொண்டு நீங்கள் பிறைத் தகவலைப் பெறுவது உங்களை நோக்கி நாளை வரும் பேரூந்தை நேற்றோ, இன்றோ துரத்திச் சென்று பிடிப்பது போன்றல்லவா உள்ளது என வாதிடுகின்றனர்.
விளக்கம்:
இவ்வாதத்தினை முன்வைக்க கூடிய சகோதரர்கள் முதலில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். (உங்களது வாதத்தின் அடிப்படையில்) இலங்கையின் வட மாகாணத்தில் இன்று தென்படுகின்ற பிறை மறுநாள் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென்மாகாணத்தில் தோன்றும் வரை காத்திருக்கலாமே. அவ்வாறு தென்படாத பட்சத்தில் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து விட்டு நோன்பு நோற்கலாம் அல்லது பெருநாள் கொண்டாடலாம். நூறு அல்லது நூற்றி ஐம்பது கி.மீற்றர்களுக்கு நாம் ஏன் முந்திக் கொண்டு அவசரப்பட வேண்டும். நாளை தோன்றினால் அப்பகுதி மக்கள் நோன்பு நோற்பார்கள்தானே! அல்லது நீங்கள் நபிமொழியை பின்பற்றுவதாக இருந்தால் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் என வரையறைகளை விதிக்காது, நபிமொழிகளின் அடிப்படையில் நிரூபணமான  சர்வதேசப் பிறையை பின்பற்றுங்கள். மாறாக, தகவல் பெறுவதற்கு வரையறைகளை விதித்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.
விமர்சனம்:
தலைப்பிறையானது பிறந்து ஒரு சில நிமிடங்கள்தான் பார்வைக்குத் தோன்றும். எனவே, எப்பகுதியில் முதலில் தெரிந்ததோ அவர்களுக்குத்தான் அது பொருந்தும். நள்ளிரவுக்கு அப்பாலும் தகவலை ஏற்க முடியாது என வாதிடுகின்றனர்.
விளக்கம்:
உங்கள் வாதத்தின் அடிப்படையில் இரவு 08.30 மணிக்குள் தகவல் வந்தால் மாத்திரம்  ஏற்போம் என வாதிடுவது சரியா? உங்கள் விதிப்படி புத்தளத்தில் பிறைகண்டு அங்குள்ள பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு வந்து சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு காட்டுவதற்கு அவகாசம் இருக்குமா?  இல்லை அவர் நம்பகமான முஸ்லிம் என்பதை மட்டும் வைத்து அறிவிப்பீர்களா? வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயியோ, கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களோ பிறை கண்டதாக தாமதித்து வந்து சொன்னால் தகவலை ஏற்பீர்களா? அல்லது ‘கௌன்டர் குளோஸ்ட்’ என்று கூறி மறுப்பீர்களா? தகவலை ஏற்க முடியுமென்றால் நாம் ஏற்பது மாத்திரம் எவ்வகையில் தவறாகும்? எனவே, நள்ளிரவல்ல சுபஹுக்கு தகவல் வந்தாலும் அல்லது சுபஹுக்கு பின்னர் பிறை தகவல் வந்தாலும் அதனை ஏற்க வேண்டும் என்பதே நபிமொழியாகும்.
விமர்சனம்:
29ம் நோன்பு முற்றுப் பெற்று பிறையைத் தேடியும் கிடைக்காமல் 30ம் நோன்பு நோற்றிருக்க, உலகில் எங்கிருந்தோ வந்த தகவல் அடிப்படையில் காலையில் அல்லது பகல் நேரத்தில் நோன்பை விடச் சொன்னால் நியாயமாகுமா?
விளக்கம்:
29வது நோன்பை நிறைவு செய்த பின்னர் பிறை கண்ட தகவல் கிடைக்குமாக இருந்தால் நோன்பை விட்டுவிட வேண்டும் என்பதுவே நபிமொழியில் நிரூபணமான விடயமாகும். நாம் வெளிநாட்டுத் தகவலின் அடிப்படையில் நோன்பை விடுவதா? இது என்ன புதிய விடயம் என வியக்கின்றனர். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றிருக்கையில் பிறை கண்ட தகவல் கிடைத்ததும் நோன்பை விட்டு விட்டு தொழுகைக்குச் செல்லுமாறு ஏவியுள்ளார்கள். எமது நாட்டிலும் தொலைபேசி மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஏற்பட முன்னர் இவ்வாறுதான் செயற்பட்டுள்ளார்கள். நோன்பு நோற்பதற்கு முன்னரே, அதாவது இரவு 8.30க்குப் பிறகு வந்த செய்தியை ‘கௌன்டர் குளோஸ்ட்’ என்று கூறி ஏற்காமலிருப்பது பாவமான காரியமாகும். நேரம் சென்று அறிவித்தால் மக்கள் பெருநாள் ஏற்பாடுகள்
செய்வது சிரமமாகிவிடும் என்பது காரணமா? அல்லது மனோ இச்சையா? பிடித்த நோன்பை பிறை கண்ட தகவல் கிடைத்தால் விடவேண்டுமென்பதுவே ஸுன்னாவாகும்.
விமர்சனம்:
‘நோன்பு நீங்கள் நோற்கும் நாளில்தான். நோன்பை விடுவதும் நீங்கள் விடும் நாளில்தான். உழ்ஹிய்யா (ஹஜ்ஜுப் பெருநாள்) நீங்கள் கொடுக்கும் தினத்தில்தான் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி) என தெட்டத் தெளிவாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்க மக்களை விட்டும் தனித்துப் பெருநாள் கொண்டாடுவது ஹதீஸுக்கு முரணானதல்லவா?
விளக்கம்:
மேலுள்ள நபிமொழியிலிருந்து சில சகோதரர்கள் தமது மனோ இச்சைக்கு ஏற்றவாறு பல்வேறு வாதங்களை முன்வைக்கின்றனர். ஊருக்கு ஊர் பிறை, நாட்டுக்கொரு பிறை, கணிப்பின் அடிப்படையில் பிறையைத் தீர்மானித்தல் போன்றன அல்குர்ஆன், ஆதாரபூவர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தவறானவைகளாகும். மேலும், தமக்கு ஏற்றவாறு நாடுகளை ஊர்களாக கருதிக் கொள்வதும் தவறானதாகும். ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் இலங்கை முழுவதற்கும் ஒரே பிறையை அமுல்படுத்த முடியும் என கூறுகின்றனர். இவர்கள் கூறுவது போன்று முழு இலங்கையையும் ஒரு ஊராகக் கருத முடியுமா?
இன்று பிறையை வெற்றுக் கண்ணால் பார்க்காது கணிப்பின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என சிலர் வாதிடுகின்றனர். வேறு சிலரோ வலயத்திற்கு ஒரு பிறை என வாதிடுகின்றனர். எனவே, மக்கள் இவற்றை சரிகண்டால் இதனை அமுல்படுத்த முடியுமா? எனவே, மக்கள் எப்படி நோன்பை, பெருநாளை ஆரம்பிக்க வேண்டுமென அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் கூறப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே அவற்றை அமுல்படுத்த வேண்டும். மக்கள் நோன்பு நோற்கும் நாள் என்று கூறி நாம் நினைத்தவாறு வியாக்கியானம் கொடுக்காது,  இஸ்லாம் காட்டிய வழிமுறையிலேயே மக்கள் ஒன்று சேர வேண்டுமென்பதையே மேலுள்ள நபிமொழி விளக்கி நிற்கின்றது.
எனவே, நபிவழியில் எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!

மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)

Comments