வெசாக் (தன்சல்) உணவும்,இலங்கை முஸ்லிம்கள் நிலையும்.

இலங்கை நாட்டின் பௌத்தர்கள் உட்பட உலகில்
உள்ள பௌத்தர்கள் அனைவரும் நாளை மற்றும்
நாளை மறுநாள் (03,04) ஆகிய இரு நாட்கள்
“வெசாக்” தினத்தை கொண்டாடுகின்றார்கள்.
வெசாக் தின கொண்டாட்டத்தின்
போது பலவிதமான களியாட்ட நிகழ்ச்சிகளையும்
பௌத்தர்கள் நடாத்துவார்கள். இதில்
ஒரு கட்டமாக உணவுகளையும் பரிமாறுவார்கள்
இதற்கு “தன்சல” என்று பெயர் சொல்லப்படும்.
“தன்சல” உணவுகளைப் பொருத்தவரையில்
சில
நேரங்களில் சாப்பாடு சமைத்தும், இன்னும் சில
நேரங்களில் பானங்கள் செய்தும் பரிமாறுவார்கள்.
இந்த உணவுப் பொருட்களை முஸ்லிம்கள்
சாப்பிடலாமா? கூடாதா? என்பதை தெளிவாக நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.
“வெசாக்” கொண்டாட்டத்திற்கான காரணம்.
“வெசாக்” என்ற பெயரில் பௌத்தர்கள் இந்த
இரண்டு நாட்களையும் புனிதமாக
கருதுவதற்கு சில காரணங்கள்
சொல்லப்படுகின்றது.
இதனை விக்கிபீடியா கலைக் கலஞ்சியம்
இவ்வாறு விபரிக்கின்றது.
வெசாக் (இலங்கையில்) அல்லது புத்த பூர்ணிமா
(இந்தியாவில்) ( Wesak ) மே மாத பௌர்ணமி
(முழு நிலா) நாளன்று உலகில் உள்ள
அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக்
கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித
சமய நிகழ்வுகள்
இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை
முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில்
பந்தல்கள், தோரணங்கள் ஒளிக்கூடுகள்
கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
இந்த நாள்
மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக
பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
1. சித்தார்த்த கௌதமர் லும்பினி
(இன்றைய நேபாளம் ) என்னுமிடத்தில்
பிறந்த நாள்.
2. புத்தர் புத்தகயா எனும் இடத்தில் தவம்
புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
3. புத்தர் இறந்த நாள்.
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை
நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள்
நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில்
நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள்
இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
புத்தர் பிறந்த தினம், புத்தர் புத்த
நிலை அடைந்த தினம், புத்தர் இறந்த தினம்
ஆகிய மூன்று நிகழ்வுகளுக்காக “வெசாக்”
தினத்தை பௌத்தர் கொண்டாடுகின்றார்கள் என்ற
கருத்தில் சில மாற்றுக் கருத்துக்களும்
நிகழ்கின்றன. அதாவது “வெசாக்” தினம் புத்தர்
பிறந்த தினத்தை முன்னிட்டு மாத்திரம் தான்
கொண்டாடப்படுகின்றது என்ற பொதுவான
கருத்தும் பேசப்படுகின்றது.
எது எப்படியோ இந்த மூன்று காரணங்கள் தான்
“வெசாக்” தின கொண்டாட்டம் தொடர்பாக
சொல்லப்படுகின்றன.
வெசாக் (தன்சல) உணவை முஸ்லிம்கள்
சாப்பிடலாமா?
வெசாக் (தன்சல) உணவை சாப்பிடுவதைப்
பொருத்த வரையில் இரண்டு கோணங்களில்
இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வெசாக் (தன்சல) உணவைப் பொருத்தவரையில்
பெரும்பாலும் புத்த பெருமானுக்குப் படையல்
செய்வார்கள். அப்படி படைக்கப்பட்ட உணவாக
இருந்தால் அதனை சாப்பிடுவது தெளிவான
ஹராமாகும்.
ஆனால் சில இடங்களில் புத்தருக்குப் படையல்
செய்யாமலும் அந்த
உணவை மற்றவர்களுக்கு பகிருவார்கள்.
உதாரணமாக ஒரு கம்பணி அல்லது பிரபல்யமான
ஒருவர் கொடுக்கும் வெசாக் (தன்சல) உணவாக
இருந்தால் இதில் பெரும்பாலும் (பிரித்)
ஓதி படையல் செய்யும் காரியங்கள்
நடப்பதில்லை. குறிப்பிட்ட பிரபல்யமான நபர் ரிபன்
வெட்டி திறந்துவிடுவார்
அத்தோடு சாப்பாடு பகிர
ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த உணவை பொருத்த வரையில் இது படையல்
செய்யப்பட்ட உணவல்ல. இருப்பினும் புத்தரின்
பிறந்த நாளுக்காக செய்யப்பட்ட
உணவு அதாவது பிறந்த நாள் உணவு.
இதே நேரம் வெசாக் (தன்சல)
கொண்டாட்டத்திற்கு புத்தரின் இறப்பும் காரணம்
என்று பொளத்தர்கள் நம்புகின்றார்கள்.
ஆகவே தன்சல உணவு புத்தரின் இறந்த
தினத்தை கொண்டாடுவதற்காகவும்
சேர்த்தே சமைக்கப்படுகின்றது. புத்தரின் இறந்த
நாளுக்காக செய்யப்படும் உணவு என்று வரும்
போது அது கத்தத்திற்கு சமைக்கப்பட்ட
உணவாகிவிடும்.
எது எப்படியோ படைக்கப்படாவிட்டாலும் இறந்த
நாளுக்காகவும் பௌத்தர்கள்
இதனை கொண்டாடுவதினால், அதற்காக
சமையல் செய்வதினால் வெசாக் (தன்சல)
சாப்பாட்டை சாப்பிடுவது ஹராம் என்றாகிவிடும்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி
, அல்லாஹ் அல்லாதோருக்காக
அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன்
உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார்
வரம்பு மீறாதவராகவும், வலியச்
செல்லாதவராகவும்
நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்;
நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)
அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட
இடத்தில் அரபு மூலத்தில் “உஹில்ல” என்ற
சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள்.
சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள்
சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள்
சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச்
சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள்,
அல்லாஹ் அல்லாத பெயர்
கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற
தடை செய்யப்பட்டவையாகும்.
இறந்தவருக்காக உணவு சமைத்துக் கொடுக்கும்
ஒரு வழக்கத்தை இஸ்லாம் நமக்கு கற்றுத்
தரவில்லை. இரண்டாவது கத்தம்
என்பது இறந்தவரின் பேரால் சமைக்கப்படும்
சாப்பாடு என்ற காரணத்தினால் அது இஸ்லாத்தில்
தடை செய்யப்பட்டதாகும்.
தன்சல உணவுக்கு பணம் கொடுக்கலாமா?
மத நல்லிணக்கம் என்ற பெயரில் தன்சல
சாப்பாட்டுக்கு முஸ்லிம்கள் பணம் கொடுக்கும்
வழக்கம் நம் மத்தியில் காணப்படுகின்றது.
தன்சல சாப்பாடு என்பது மார்க்க ரீதியாக
தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும்
போது அதற்கு நமது செல்வத்தின் மூலம்
உதவுவது என்பது பாவத்திற்கு துணை போவது
மாத்திரமன்றி வரம்ப மீறலுமாகும்.
பாவத்திலும், வரம்பு மீறலிலும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ்
கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
மேற்கண்ட வசனத்தில் பாவத்திற்கும்,
வரம்பு மீறலுக்கும் உதவக்
கூடாது என்று இறைவன் தெளிவாக
குறிப்பிடுகின்றான். ஆகவே தன்சல
சாப்பாட்டுக்கு நாம் பணம் கொடுப்பது தெளிவாக
பாவத்திற்கு துணை போகும் காரியமாகும்.
வெசாக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கலாமா?
வெசாக் தினத்தில் பலவிதமான களியாட்டங்களும்,
கொண்டாட்டங்களும் நடாத்தப்படும் இவற்றிலும்
ஒரு முஸ்லிம் பங்கெடுக்கக் கூடாது. பௌத்த
மக்கள் வணங்கக் கூடிய கற்பனைக் கடவுளின்
நினைவாக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளில்
அதிலும் குறிப்பாக அனாச்சாரங்கள்
நிறைந்திருக்கும் நிகழ்ச்சிகளில் எந்த முஸ்லிமும்
பங்கெடுக்கலாகாது.
……நன்மையிலும் இறையச்சத்திலும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!
பாவத்திலும், வரம்பு மீறலிலும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ்
கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
மேற்கண்ட திருமறை வசனம் பாவத்திற்கும்,
வரம்பு மீறலுக்கும் துணை போகக்
கூடாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது.
வெசாக் தின கொண்டாட்டங்களில்
கலந்து கொள்வதென்பது பாவம் மாத்திரமல்ல
வரம்பு மீறலும் ஆகும்.
வெசாக் கூடு தொங்கவிடுவது கூடாது.
பெரும்பாலான முஸ்லிம்கள் வெசாக்
கூடு செய்து தமது வீடு மற்றும்
வியாபாரா நிலையங்களிலும்
தொங்கவிடுகின்றார்கள். தமது பிள்ளைகளுக்கும்
இதில் ஆர்வமூட்டுகின்றனர்.
தமது பிள்ளைகளை வெசாக்கூடு செய்யும்
போட்டிகளிலும் பங்கு பற்ற
வைத்து பரிசில்களையும் பெற்று பெருமிதம்
அடைகின்றனர். வெசாக் கூடு என்பது மற்ற
மதத்தவர்களின் மதத்தை பிரதிபளிக்கின்ற
ஒன்றாகும். மற்ற மதத்தவர்களின் மத
கிரியைகளை நாம் செய்தால் நாமும் அவர்களைப்
போல் ஆகிவிடுவோம் என்று இஸ்லாம் நமக்குக்
கற்றுத் தருகின்றது.
யார் மற்றொரு சமூகத்திற்கு (மதத்தினருக்கு)
ஒப்பாகிறாரோ அவரும் அவரைச் சார்ந்தவரே.
(அபூதாவூத்)
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் எக்காரணம்
கொண்டும் வெசாக் கூடு செய்வதோ,
தொங்கவிடுவதோ, வெசாக் தின போட்டிகளில்
பங்கெடுப்பதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட
வேண்டிய ஹராமான காரியங்களாகும் என்பதில்
எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
வெசாக் கூடு வியாபாரம் மற்றும் வெசாக்
தினத்தில் பன்சலைகளில் வியாபாரம்
செய்வது போன்றவை கூடுமா?
அனுராதபுர, பொலன்னறுவை, கண்டி,
மிஹிந்தலை ஆகிய இடங்களில் முஸ்லிம்
வியாபாரிகள் வெசாக்கூடு,
பூஜை சாமான்களை வியாபாரமும் செய்கின்றனர்.
இந்த வியாபாரமும் மார்க்கத்தில்
தடை செய்யப்பட்டதாகும்.
தடை செய்யப்பட்ட பொருட்களைப்
பயன்படுத்துவது எவ்வாறு தடை
செய்யப்பட்டுள்ளதோ அது போல்
அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில்
தடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
மக்கா வெற்றியின் போது, ‘நிச்சயமாக
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள்
ஆகியவற்றை விற்பனை செய்வதைத்
தடை செய்துள்ளனர்!’ என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே!
செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப்
பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின்
மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள்
விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்;
ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக்
கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், ‘கூடாது! அது ஹராம்!’ எனக்
கூறினார்கள். மேலும் தொடர்ந்து, ‘அல்லாஹ்
யூதர்களைத்
தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக
! அல்லாஹ் யூதர்களுக்குக்
கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள்
அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச்
சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 2236
ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர்
(ரலி), ‘அவரை அல்லாஹ் சபிப்பானாக!
யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட
போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால்
அல்லாஹ் அவர்களை அழிப்பானாக’
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறியதை அவர்கள் அறியவில்லையா?’
என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2223
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த
பொருட்கள் பயன்படுத்தத்
தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை
விற்பனை செய்வதும்
கூடாது என்பதை அறியலாம்.
வெசாக் கூடு, பகனை, பூஜை பொருட்கள்
ஆகியவற்றுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும்
எவ்வித தொடர்பும் இல்லை. அவை மாற்றுமத
கலாசாரங்களாகும். மாற்று மதத்திற்கு உரிய, மத
காரியங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தும்
பொருட்களை விற்பனை செய்வதை ஒரு போதும்
மார்க்கம் அனுமதிப்பதில்லை. அந்த வகையில்
பன்சலைகளின் முன்னால் முஸ்லிம் வியாபாரிகள்
குறித்த
வியாபாரத்தை செய்வது தடை செய்யப்பட்ட
காரியமாகும்.
“பக்தி கீ” பாடலாமா?
சிங்களப் பாடசாலைகளில் நம் முஸ்லிம்
மாணவர்கள் ‘பக்தி கீ’ எனும் அவர்களது வெசாக்
தின பாட்டுக்களைப் பாடும் நிகழ்ச்சிகளிலும்
பங்குபற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சிகளில்
பங்கு பற்றுவதோ பக்தி கீ
பாடுவதோ மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட
ஒன்றல்ல. இதில்
நமது பிள்ளைகளை கலந்து கொள்ளச்
செய்வது நாம் இணை வைப்புக்குத்
துணை போவதாகும். காரணம் அந்தப் பாடலில்
இணை வைக்கும் கருத்துக்கள் தாராளமாக
பொதிந்திருக்கின்றன.
ஆகவே வெசாக் தினம் என்பது முற்றிலும்
இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லாத பௌத்த
மக்களின் விழாவாகும் அதில் எக்காரணம்
கொண்டும் ஒரு உண்மை முஸ்லிம்
பங்கெடுக்கலாகாது என்பதே தெளிவான
முடிவாகும்.


நன்றி  :ரஸ்மின்  மவ்லவி

Comments