குர்ஆன் இறங்கிய வரலாறு:


குர்ஆன் இறங்கிய வரலாறு:

அல்லாஹ் அருளிய இவ்வேதத்திற்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது. திருமறையிலே பல இடங்களில் குறிப்பிடப்படும் 'குர்ஆன்' என்ற பெயரே சிறப்புமிகு பெயராக விளங்கி வருகிறது.

'குர்ஆன்' என்ற அரபிச் சொல்லுக்கு 'ஓதப்பட்டது', 'ஓதக்கூடியது', ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக 'ஓதப்பட்ட' இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி 'ஓதவேண்டியது' என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் 'ஓதப்படுவதும்' பொருத்தமாக இருக்கிறது.

நபிகள் பெருமானார் அவர்கள் நாற்பதாவது வயதிலே, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் தியானித்திருந்த நேரத்தில் ஓர் இரவில், திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவுக்கு 'லைலத்துல் கத்ர்' என்று பெயர். இச்சம்பவம் ரமலான் மாதத்தின் பிந்திய இரவில் நடைபெற்றது. முதன் முதலாக இறங்கிய வசனம் 'இக்ரஃ'-ஓதுவீராக! என்ற வசனம்தான். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் தோன்றி, இவ்வசனத்தை ஓத சொன்னார்கள். நான் ஓதக் கூடியவனாக இல்லையே என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மீண்டும்; 'ஓதுவீராக!' எனக் கூற அப்போதும் அதேபோன்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக' என்று சொன்னதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓத ஆரம்பித்தார்கள். இச் சம்பவத்தை தமது மனைவியிடம் கூறினார்கள். கதீஜா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள்'இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்' என்று சொன்னார்கள்.

மேலும் உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்த மார்க்க அறிஞராக இருந்தார்கள்.'நீங்கள்; இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்' உங்களை உங்கள் சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றுவார்கள் என்றும், தங்களிடம் வந்தவர்கள் நாமூஸ் என்னும் வானவர்கோன் ஆவார்கள். இவர்கள்தான் முந்தைய நபிமார்களுக்கு வேதங்களை கொண்டு வந்தவர்கள் என்று முந்தைய வேதங்களில் இருந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

இந்நிகழ்ச்சி மூலமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்.
குர்ஆனானது சிறுக சிறுக அப்போதைப்போதைக்கு 23 வருடங்கள் இறக்கப்பட்டு பூர்த்தியாயிற்று
http://www.kayalpatnam.in/இருந்து....

Comments