மழை காலங்களில் வீடுகளில் தொழுதல்.


மழை காலங்களில் வீடுகளில் தொழவேண்டும்.

கடமையான தொழுகைகளை பள்ளிவாயலுக்கு வந்து நிறைவேற்றுமாரு இஸ்லாம் பணிக்கின்றது. பள்ளிவாயல்கள் அமைக்கப்பட்டதே இறைவனை நினைவு கூர்வதற்கு என்று அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.(பார்க்க 24:34, 2:114)
தொழுகை என்பது இறைவனை நினைவு கூர்வதற்குரிய முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும். இதனால்தான் அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களுக்கு தன்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலைநாட்டுமாரு கூறியதை அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். பார்க்க 20:14)
எனவே ஒவ்வொரு முஸ்லிமும் பள்ளிவாயலுக்கு சென்றே கடமையான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. ஆயினும் மழை போன்ற காரணத்தினால் ஒருவர் வீடுகளில் தொழுது கொள்வதை அங்கீகரித்துள்ளது. இதற்கான ஆதாரங்களை நாம் பார்ப்போம்.
ஆதாரம்:1
மழை காரணத்தினால் வீட்டில் தொழ நபியிடம் அனுமதி கோரிய ஸஹாபி
நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே இறைத்தூதர் அவர்களே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஓர் இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு மறு நாள் சூரியன் உயரும்போது அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே 'உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் (அவ்விடம் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களாக அவர்கள் தொழுகை நடத்திய பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக் நூல் புஹாரீ 425,5401
விளக்கம்
மேற்குறித்த சம்பவத்தில் இத்பான் பின் மாலிக்(ரழி) அவர்கள் பள்ளிவாயலுக்கு மழை காரணமாக வருவது சிரமமாக உள்ளது என்று கூறிய போது அவர் வீட்டில் தொழுது கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளிக்கிறார்கள். எனவே மழை காலங்களில் ஒருவர் வீட்டில் தொழலாம் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக திகழ்கின்றது..
ஆதாரம்:2
மக்காவை அடுத்துள்ள 'ளஜ்னான்' என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். மேலும் 'பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார். அறிவிப்பவர் நாபிஃஉ நூல் புஹாரீ 632
ஆதாரம்:3
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தபோது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல் முஸ்லிம் 1243
ஆதாரம்:4
பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுகள் என்று கூறும்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது 'என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்' என்று நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் நூல் புஹாரீ 901
விளக்கம்
மழையுடைய காலங்களில் சிரமமாக இருந்தாலும் சரி சிரமம் இல்லாவிட்டாலும் சரி வீட்டில் தொழுது கொள்வது சுன்னா என்பதை மேற்குறித்த ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆதாரம்:5
நாங்கள் ஹுதைபிய்யாவின் போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது மழை பெய்தது எங்களின் செருப்புகளின் கீழ்பகுதி கூட நனையவில்லை நபி(ஸல்) அவர்களின் அழைப்பாளர் வீடுகளில் தொழுது கொள்ளுமாரு அழைப்பு விடுத்தார் அறிவிப்பவர்: உஸாமா(ரழி) நூல் அஹ்மத் 20704, இப்னு மாஜா 936,
அபூதாவுதில் 1059 வது இலக்கத்தில் இடம் பெறும் செய்தியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை தினத்தில் இடம் பெற்றதாக வந்துள்ளது.
நஸாயியில் 854 வது இலக்கத்தில் இடம் பெறும் செய்தியில் இச்சம்பவம் ஹுனைன் யுத்த சந்தர்ப்பத்தில் இடம் பெற்றதாக வந்துள்ளது.
இப்னு ஹிப்பானில் 2079 வது இலக்கத்தில் இடம் பெறும் செய்தியில் வீட்டில் தொழுது கொள்ளுமாரு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக இடம் பெற்றுள்ளது.
செருப்புகளின் கீழ்பகுதி நனையாத அளவிற்கு என்றால் சாதாரணமாக மழை பெய்துள்ளதை நாம் புரியலாம். சாதாரணமாக மழை பெய்ததற்கே இச்சட்டம் எனும் போது கடினமான மழை பெய்தால் வீட்டில் தொழுவதை தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
 http://ntjweb.com/இருந்து.......

Comments