சிறந்த பொக்கிஷம்

மனைவியை நேசிப்போம்:

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துனைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:21

மனைவி தான் சிறந்த பொக்கிஷம்

ஒரு மனிதன் பெறுகின்ற
பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா ??? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : அபூதாவூத் 1412

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்:

ஒரு மனிதர் நபியவர்களிடம் "மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள்: "நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும், (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும், வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)
நூல் : அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

நிறைகளை மட்டும் பார்ப்போம்:

"இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 2915

Comments