இஸ்லாமிய இல்லங்கள்


இஸ்லாமிய இல்லங்கள் உருவாவதில்முஸ்லிம் பெண்களது பணி
 
விவாகரத்துக்கள், பாலியல் குற்றங்கள், இளம் விதவைகளின் அவலங்கள், தந்தையற்ற குழந்தைகள், முகவரியற்ற குடும்பங்கள், இளவயதுக் குற்றவாளிகள், பெண்கள்-சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதைவஸ்துப் பாவனை, வயது வந்தும் திருமணம் செய்யாமை போன்ற விவகாரங்கள் சர்வதேச ரீதியாக காலங்காலமாகப் பேசப்பட்டு பின் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்ட பிரச்சினைகளாகக் காணப்படுகின்ற போதும்... 
என்றுமே கேட்டிராத அளவுக்கு இவை எமது சமூகத்தையும் படிப்படியாகவும் பரவலாகவும் ஆக்கிரமித்துக் கொள்வது பற்றித் தெரிய வரும்போது எமது அறிவுக்கெட்டிய வகையில் இது பற்றி சில கருத்துக்களையாவது முன்வைப்பது கடமை எனத் தோன்றுகிறது.
சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேச எடுத்துக் கொண்டால் சமூகம் கெட்டு விட்டது என இலகுவாகக் கூறி விடுகின்றோம். அதேநேரம் சமூகத்தின் பிரதிநிதிகள் யார்? என்ற வினாவை எழுப்பிப் பார்ப்போமானால், நாமேதான் என்ற விடையே அதற்குக் கிடைக்கும்.
ஒவ்வொரு தனி மனிதனும் அங்கத்துவம் வகிக்கும் சமூகத்தின் உருவாக்கம் குடும்ப உருவாக்கத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. சமூகத்தின் இயக்கம், சமூகத்தின் ஒழுக்கம், சமூகத்தின் எழுச்சி, சமூகத்தின் வீழ்ச்சி யாவுமே குடும்பங்களிலிருந்துதான் தோற்றம் பெறுகின்றன.
எனவேதான் இஸ்லாம் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சிறப்பான சமூகத்துக்கு அடித்தளமிடும் வகையில் இஸ்லாமிய குடும்பக் கொள்கை அமைகிறது. சிறப்பான குடும் பங்களை உருவாக்குவதற்கான சட்டங்களை வழங்கும் வழி முறையாகவும் ஒழுக்கமான சமூகக் கட்டுக்கோப்பிற்கு ஆதாரமாக அமையும் சமூக சட்டங்களைத் தரும் வாழ்க்கை முறையாகவும் அமைந்துள்ளது.
சமூகத்தின் தூண்களாக விளங்கும் குடும்பங்கள் தூய்மையான இஸ்லாமியக் குடும்பங்களாக அமையும்போது மட்டுமே ஒழுக்கமான சமூகம் ஒன்றைக் கட்டி எழுப்ப முடியும் என்பதே இஸ்லாமியக் கோட்பாடு ஆகும். குர்ஆன் வழிநின்று நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவதானால் முஸ்லிம் சமூகத்திலுள்ள வீடுகள் எல்லாம் இஸ்லாமிய மணம் கமழும் இல்லங்களாக உருவாவது இன்றியமையாதது ஆகும்.
அப்படியானால், இஸ்லாமிய  இல்லங்களை உருவாக்கும் இலட்சியத்தையும் பொறுப்பையும் பணிiயும் இஸ்லாம் யாருடைய கையில் ஒப்படைத்துள்ளது?
நிச்சயமாக பெண்களாகிய எமது கைகளில்தான்!
மேற்குலக நாரிகம் ‘‘இஸ்லாமியப் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்’’என எவ்வளவுதான் கூக்குரலிடுகின்றபோதும் இஸ்லாத்தில் குர்ஆன், ஸுன்னா சட்டதிட்டங்களினுடாக ஒரு முஸ்லிம் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு மகத்தானது அந்தப் பொறுப்பு அவளை உயர்ந்த ஸ்தானத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால், அப்பொறுப்பை அவள் சரிவர நிறைவேற்றுகின்ற நிலையிலேதான் அந்த உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவும் அதனை வெளி உலகிற்கு பகிரங்கப் படுத்தவும் முடியும்.
அந்தப் பொறுப்புக்கள் பற்றி, அவற்றின் பெறுமதி பற்றி நாம் அறியாமல் இருப்பதால் அல்லது அலட்சியமாக விட்டு விட்டதால் இஸ்லாமிய சமூக உருவாக்கத்துக்குப் பெண்களின் பங்களிப்பு, அவர்களது சமூக அந்தஸ்து என்பன வேற்று மதத்தவர்களது பார்வையில் மட்டுமல்ல எமது சமூகத்தின் மத்தியில்கூட மங்கி மறைந்து வருகின்றது.
குடும்ப வாழ்வில் சிதைவுகளும் சமூக வாழ்வில் சீர்கேடுகளும் இன்றைய உலக நாகரிகமாகிவிட்ட பரிதாப நிலைமைகளைப் பார்த்துக் கொண்டே நாம் இன்னுமின்னும் எமது பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டிருக்க முடியாது.
இன்று இஸ்லாமியப் பெண்கள் சமூகம் இலட்சியத்தை முன்னெடுத்தல், பொறுப்புக்களைச் சுமந்து குடும்ப நிருவாகத்தைச் சரியாக நிறைவேற்றுதல் என்பன அவசரமானதும் அவசியமானதுமான பணியாகும்.
இக் காரியத்தை, இறைவன் ஏற்றுக் கொள்ளும் வகையில்... அல்குர்ஆன் கூறும் வாழ்வை அமுல் நடத்தும் வகையில்... நபிகளார் காட்டித்தந்த வழிமுறைகளை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில்... மறுமையில் நற்கூலியைப் பெறும் தகுதியை அடையும் வகையில் செய்து கொள்வதற்காக நாமெல்லாம் ஒன்றிணைந்து எம்மிடத்திலே நடத்தை மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக எமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை நிதமும் படித்துக் கொள்வதோடு கடமைகளை இறையச்சத்தோடு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதும் இன்றியமையாதது.
ஆணையும் பெண்ணையும் சிறப்பாற்றல்களோடு படைத்த அல்லாஹ் அவர்களுக்கு சிறப்புரிமைகளையும் வழங்கியுள்ளான். சமூக வாழ்வில் சமநிலைத்தன்மை பேணப்படுவதற்கே அவன் இவ்வாறு இயற்கையான இயல்புகளை ஏற்படுத்தியுள்ளான்.
பெண்கள் அறிவாற்றலை மிகைத்து நிற்கும் சக்தி பெற்ற மன உணர்ச்சியுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் ஆண்களோ மண உணர்வுகளை வெல்லும் அறிவாற்றலுடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.உணர்ச்சிவசப்படும் பெண் பலவீனமானவள்என எடைபோடுவதோடு சமூகம் நின்றுவிடுகிறது. இங்குதான் நாம் பிழை விடுகிறோம். உளவியல் ரீதியாக பிள்ளை வளர்ப்புக்குத் தேவையான இயல்பை இறைவன் பெண்ணில் ஏற்படுத்தியுள்ளான். அது ஒரு தாய்க்குள் பொதிந்துள்ள தன்மையே ஒழிய பலவீனமன்று.
ஒரு பெண் தன் பிள்ளையைக் கருவில் சுமந்த நாள் முதல் தான் கண்மூடும் வரையிலுமே அப்பிள்ளை எவ்வயதில் இருப்பினும் அதன் நலனில் அக்கறை உள்ள வளாகவும் அதன் நடத்தையில் வழிகாட்டும் தகைமை உள்ளவளாகவும் தடம்புரண்டு செல்லாமல் பாதுகாக்கும் சக்தியுடையவளாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், குடும்பப் பெண்ணிடம் உள்ள கொள்கையும் இலட்சியமும் நிச்சயமாக அடுத்த பரம்பரைக்கு கடத்தப்படும். பரம்பரை பரம்பரையாக உருவாகும் பெண்கள் இஸ்லாமியத் தாய்மார்களாக அமைய வேண்டுமென்பதே இஸ்லாத்தின் இலட்சியமாகும்.
ஒரு முஸ்லிம் பெண்ணின் உன்னத பொறுப்புக்கள் சமூகத்துக்கு அடித்தளமிடும் குடும்ப அமைப்பில் ஆரம்பிக்கின்றன. ஒரு முஸ்லிம் பெண் இன்றி ஒரு முஸ்லிம் குடும்பம் உருவாவது சாத்தியமில்லை ஓர் இஸ்லாமிய இல்லம் ஒழுங்கமைக்கப்படுவதும் சாத்தியமில்லை. ‘‘பெண் தன் கணவனது வீட்டையும் அவனது பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்புடையவளாக இருக்கிறாள்’’ (அல்புகாரி, முஸ்லிம்) என்ற நபிவாக்கை நினைவிற் கொண்டு முஸ்லிம் பெண்கள் தமது கடமைகளை நெறிப்படுத்திக் கொள்வது அவசியம்.
சமூகம் என்பதும் குடும்பம் என்பதும் வெறுமனே அங்கத்தவர்களின் எண்ணிக்கையோடு முழுமை பெறும் அலகுகள் அல்ல, அங்கு இடம்பெறும் அங்கத்தவர்களது சமூக உறவுகள், தொடர்புகள் என்பன பரஸ்பரம் ஒழுங்குபடுத்தப்பட்டு சீரமைக்கப்படுதல் அத்தியவசியமாகும். மனிதன் உருவாக்கிய சட்டங்களால் இந்த ஒழுங்கும் சீரமைப்பும் நிலைநின்ற வரலாறு உலகில் எங்குமே பதியப்படவில்லை. மாறாக, சமூகங்களின் சீரழிவுகளுக்கான இறுதி விளைவுகளையே படித்தறிந்துள்ளோம் இன்று கண்ணாரக் கண்டு கொண்டிருக்கிறோம்.
எனவே, இஸ்லாமியக் குடும்ப உறவுகள், சமூக உறவுகள், அவற்றைத் தொடர்புபடுத்தும் குர்ஆனின் கட்டளைகளாலும் கருத்துக்களாலும் சட்டங்களாலும் நிலைபெறுவதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இஸ்லாமிய இல்லத்தை நிருவகிப்பதைப் பொறுப்பெடுத்துள்ள ஒரு பெண், இதனை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படையில் சிந்தித்து, குடும்ப அங்கத்தவர்களின் தொடர்பைப் பேணுவதில் வழிகாட்டல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தானும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நோக்குகையில், குர்ஆனின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள முயற்சிக்காத, நபிகளார் வாழ்வையும் வாக்கையும் தேடித் தெரிந்து அவற்றைப் பின்பற்றுவதில் உறுதி கொள்ளாத ஓர் இஸ்லாமியப் பெண் எவ்வாறு தனது பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, இஸ்லாமிய அறிவும் இறையச்சமும் இறை பொருத்தத்தை நாடிய உழைப்பும் முஸ்லிம் பெண்கள் நாளுக்கு நாள் கூட்டிக் கொள்ள வேண்டிய அம்சங்களாகும். ஒரு பக்கம் பொறுப்புகள் அதிகரிக்க மறுபக்கம் சமூக வாழ்வின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்க  எமது இஸ்லாமிய சிந்தனையின் தரமும் இஸ்லாமிய வாழ்வொழுங்கின் மீதுள்ள பற்றுதலும் அதிகரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம் பெண்ணின் முதன்மையான கடமை வீட்டுப் பணிகளே என்பதால் அவள் அதிக நேரம் அந்த வீட்டிலே கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒழுக்கமான ஒரு சமூகத்தை அமைப்பற்கு பெண்களுக்கு இஸ்லாம் விடுக்கும் அழைப்புப் பணியாக இதனை நாம் கருதி சிரமேற்கொள்ள வேண்டும். கூடுதலான நேரத்தை வீட்டில் கழிப்பதன் மூலம் கணவனைக் கவனிக்கவும் பிள்ளைகளைப் பராமரிக்கவும் செவ்வனே குடும்ப நிர்வாகத்தை நடத்தவும் திட்டமிடவும் முடியும். ஒரு பெண் கணவனைத் திருப்திப்படுத்துகையில் அவள் இறைவனின் திருப்தியைப் பெறும் தகுதி பெறுகிறாள்.
‘‘ஒரு கணவன் திருப்தியடையும் விதமாக மரணித்துவிட்ட மனைவிக்கு நிச்சயம் சுவர்க்கம் கடமையாகிறது’’ (அத்திர்மதி) என்ற ஹதீஸ் கணவரின் திருப்தி இறைதிருப்தி என்பதை தெளிவுபடுத்துகிறது.
பண்பு தவறாமல் பணிகளை நிறைவேற்றிச் செல்வது ஈமானுடன் தொடர்புடைய விடயம். இன் பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் ஒரே விதமாகப் பணி புரிய முடியும் என்றால், அல்லாஹ்வுக்காக, அவனது திருப்திக்காக, அவனது கட்டளைகளை ஏற்று பொறுமையோடு கடமையாற்ற முடியும் என்றால், மறுமையில் நற்கூலி கிடைக்கும் எனும் ஈமானிய உணர்வுடன் மட்டும் செயலாற்ற முடியும் என்றால்... அதுவே ஒரு மனிதனிடத்தில் காணப்படக் கூடிய அதி உன்னத நிலையாகும்.
இத்தகைய உறுதியானதும் தூய்மையானதுமான ஈமானின் தரத்தை அடைவதற்கு முயற்சி செய்வது, இஸ்லாமிய இல்லங்களை உருவாக்கும் பொறுப்பைச் சுமந்துள்ள நமது பெண்கள் அனைவரதும் பொறுப்பாகும்.
இன்றைய சமூகத்தின் முஸ்லிம் பெண் கணவனுக்குப் பணிவிடை செய்கிறாள் பிள்ளைகளை வளர்க்கிறாள் வீட்டு வேலைகளைக் கவனிக்கிறாள் ஓய்வின்றி உழைக்கிறாள் போதாததற்கு வீட்டுக்கு வெளியிலும் பல சுமைகளைச் சுமந்து கொள்கிறாள். ஒரு மனைவி கணவனைக் கவனித்தல் என்பதும் தாய் குழந்தைகளைப் பராமரித்தல் என்பதும் காலையிலிருந்து மாலை வரை சமையல் செய்வதோடும் வீட்டைத் துப்புரவு செய்து அலங்கரிப்பதோடும் அவர்களுக்கான துணிமணிகளைத் தயார் செய்வதோடும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று திருப்பி அழைத்துக் கொண்டு வருவதோடும் முடிந்து விடுவதைக் காண்கிறோம்.
வித விதமான உணவு தாயரிப்பதற்கும் நவநாகரிக உணவு மாதிரிகளை அறிமுகப்படுத்துவதற்கும் நாம் சமயலறையில் அதிக நேரத்தை செலவழிக்கிறோம். இப்படி எல்லாம் செய்தும், பிள்ளைகள் சாப்பிடாமல் இருப்பது பற்றியும் பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் உணவைத் திருப்பி எடுத்து வருவது பற்றியும் முறைப் பட்டுக் கொள்ளாத தாயொன்றைத் தேடிப் பிடிப்பது அரிது. அத்துடன் பிள்ளையுடன் சேர்ந்து பாடசாலைக்கும் டியூஷன் வகுப்புகளுக்கும் அலையும் பெண்களின் புதுப் பணியால் அவர்களுக்கு ஓய்வேயில்லை.
இவ்வாறாக ஒரு குடும்பப் பெண்ணின் முழு நாளினதும் பணி நிறைவுறும் நிலைக்கு எம் இஸ்லாமிய இல்லங்கள் தள்ளப்பட்டுள்ளன.
வீடுகளிலிருந்து காலையில் கலைந்து செல்லும் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்து பேசும் சந்தர்ப்பங்களை நாம் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். பள்ளிவாசலுக்கு குர்ஆன் ஓதப் போகும் ஒன்றுடன் மட்டும் பிள்ளைகளுக்கு சமயக் கல்வி வழங்குவது போதுமானதாகாது. குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபடுவதையும் குர்ஆன் ஓதி விளக்கம் பெறுவதையும் ஹதீஸ்களைத் தேடிப் பெற்று மனனம் செய்வதையும் கட்டாயக் கடமைகளாக ஏற்று நடத்தும் அன்றாட வாழ்க்கைக்கு, குடும்ப நிருவாகி திட்டமிட வேண்டியது கட்டாயமாகும்.
நபிகளாரதும் ஸஹாபிகளதும் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, இஸ்லாமிய சமூகத்தின் சமகால நிகழ்வுகள், பிரச்சினைகள், இஸ்லாமிய நாடுகளின் நிலை என்பவை குறித்து அனைவரும் நேரம் ஒதுக்கி கலந்துரையாட வேண்டும். தகுதிக்கேற்ப வீட்டில் ஒரு நூலகம் அமைப்பதும் இன்றியமையாத தேவையாகும்.
பாடசாலையிலிருந்தும் வேலையிலிருந்தும் உடல் களைத்து வரும் பிள்ளைக்கும் கணவனுக்கும் களைப்பைப் போக்க உடனடியாக குளிர்பானத்தையோ சுடச் சுட தேநீரையோ வழங்கி மகிழ்கிறோம். அது போல அவர்களது உளச் சோர்வு, உள்ளார்ந்த களைப்பு என்பவற்றைப் போக்கி உள அமைதியை ஏற்படுத்த, இஸ்லாமியமயப்பட்ட வீட்டுச் சூழல் ஒன்றைக் கட்டி எழுப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குடும்பக் கட்டுக்கோப்பினை ஒழுங்கமைக்கும் முயற்சியிலே பெண் அதிகமான சந்தர்ப்பங்களில் களைத்துப் போகிறாள். உண்மைதான், கணவனின் இயல்புக்கும் தனது இயல்புக்குமிடையே உருவாகும் முரண்பாடுகளை அவள் நிதமும் சந்திக்க வேண்டி ஏற்படுகிறது பிள்ளை களிடம் காணக்கூடிய தனியாள் வேறுபாடுகளுக்கிடையே வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை நிதமும் ஏற்படுத்த வேண்டியுள்ளது குடும்ப பந்தங்களுக் கிடையே சமரசமான, சந்தோஷமான சூழ்நிலையைப் பேண வேண்டியுள்ளது.

Comments