லைலதுல் கத்ர் ஓர் நோக்கு

بسم الله الرحمن الرحيم

லைலதுல் கத்ர் ஓர் நோக்கு
அன்புச் சகோதரர்களே! ரமழான் மாதத்தின் 27 வது இரவு வந்து விட்டால் அதுதான் லைலதுல் கத்ர் என்று குறிப்பிட்டுக் கூறி அந்த இரவை மாத்திரம் சிறப்பித்துக் கொண்டாடும் ஒரு நிலை முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது, இது நபி வழிக்கு உற்பட்டதா என்றால்?! 27 வது இரவை மாத்திரம் கொண்டாடுவது நபிவழியல்ல என்பதை நாம் முதலாவது விளங்கவேண்டும்.
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (புஹாரி: 2017, முஸ்லிம்)
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! ‘லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!” என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.  (புகாரி:2021, முஸ்லிம்)
மேலும் நபியவர்கள் அந்த இரவை 21 வது இரவில் கண்டுகொண்டதாக நபித் தோழர்கள் குறிப்பிடும் போது நாம் எப்படி 27 லில் மாத்திரம் தேடலாம்.
  • அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்:நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.  (புஹாரி: 2016)
மேலும் அந்த இரவு இதுதான் என்பது மறைக்கப்பட்டதில் மக்களுக்கு நலவு இருக்கின்றது என்று நபியவர்கள் கூறியிருக்கும் போது, அந்த இரவை குறிப்பிட்டுக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே 27 வது இரவை மாத்திரம் கொண்டாடுவது தவராகவே இருக்கும்.
  • உபாதா இப்னு ஸாமித்(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்:லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!” எனக் கூறினார்கள்.  (புஹாரி: 2023)
அடுத்து; அந்த இரவை எப்படி உயிர்ப்பிப்பது என்றால், நபியவர்கள் உயிர்பித்த பிரகாரமே நாம் உயிர்பிக்க வேண்டும், நபியவர்கள் அந்த இரவை அடைவதற்கெண்று என்ன செய்தார்கள் என்று பார்த்தால் பின்வருமாறு நோக்கலாம்.
1- நபியவர்கள் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்தார்கள்.
  • இப்னு உமர்(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்: “நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!” (புஹாரி: 2025, முஸ்லிம்)
  • ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்: “நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!” (புஹாரி: 2026)
2- தன் வேட்டியை இருக்கக் கட்டிக்கொள்வார்கள். என்றால் படுக்கைக்கு செல்லமாட்டார்கள்.தம் மனைவியரை எழுப்பி விடுவார்கள், இரவை முழுக்கவும் ஹயாத்தாக்குவார்கள்.
  • ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் தன் வேட்டியை இருக்கக் கட்டி  (இல்லறத் தொடர்பை நிறுத்தி)க் கொள்வார்கள்; இரவை உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!”  (புஹாரி: 2024)
3- அந்த இரவை அடைந்தால் நபியவர்கள் சொல்லுமாறு கற்றுக் கொடுத்த வார்த்தை.
  • ஆயிஷா (றழி) அவர்கள் நபிகளாரிடம்: அல்லாஹ்வின் தூதரே! லைலதுல் கத்ர் இதுதான் என்று அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன சொல்லவேண்டும்; என்று கேடக, நபியவர்கள்”اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي” அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ ப்fஃபு அன்னீ என்று கூறு” என்று சொல்லிக் கொடுத்தார்கள். (திர்மிதீ: 3513 ,அஹ்மத்)
குறிப்பு: 1- பொதுவாக நபியவர்கள் தம் மனைவியரை இரவு வணக்கத்தை முடித்துவிட்டு வித்ருக்காகவே எழுப்புவார்கள்.
  • ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்: :நான் நபி(ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள், வித்ரு தொழ எண்ணும்போது என்னை எழுப்புவார்கள். நானும் வித்ரு தொழுவேன்.  (புஹாரி: 997)
2- லைலதுல் கத்ர் இரவை நான் கண்டுகொண்டால் என்ற ஆயிஷா நாயகியின் கேள்வி அடையாளங்களை வைத்து அறிய முடியும் என்பதே. இன்று நாம் குறிப்பிட்டு 27 தான் என்று சொல்வதல்ல.
எனவே இந்த இரவுக்கென்று நபியவர்கள் தராவீஹ் என்று வேராகவும், கியாமுல் லைல் என்று வேராகவும் தொழுதார்களா? அதற்கு ஆதாரம் இருக்கின்றதா??
இந்த இரவை ஹயாத்தாக வென்று நபிகளார் தௌபா மஜ்லிஸ் நடத்தினார்களா? அதற்கு என்ன ஆதாரம்??
மேலும் இன்று நடப்பது போன்று கிளிப் பிள்ளை தௌபா அன்று நடந்ததா? அல்லது நபியவர்கள் ஒவ்வொரு நாளும் அவரவர்கள் சொல்ல கற்றுக் கொடுத்தார்களா?
  • நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தௌபா செய்து மீழுங்கள், ஏனெனில் நான் ஒரு நாளைக்கு நூறு விடுத்தங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகின்றேன். (புஹாரி: புஹாரி, முஸ்லிம்: 2742)
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த. கலக்தனீ. வஅன அப்துக. வஅன அலா அஹ்திக, வ வஃதிக மஸ்ததஃது. அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது. அபூஉ லக பிநிஃமதிக அலய்ய, வஅபூஉ லக பிதன்பீ. பGக்fபிர்லீ. fபஇன்னஹு லா யGக்பிருத் துனூப இல்லா அன்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.  (புஹாரி: 6306)
எனவே நபிகளார் காட்டிக் கொடுக்காத முறையில் தௌபா செய்தால் அது ஏற்கப்படுமா??
மேலும் திக்ரு மஜ்லிஸுகளும், ஸலவாத்து மஜ்லிசுகளும், தௌபா மஜ்லிஸுகளும் ஒலிபெருக்கியில் நடத்தப்படுகின்றது இது சரிதானா??
  • (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.(7:55)
  • (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (7:205)
  • அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும் ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்தி உள்ளத்தால் திக்ரு செய்து கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.  (புஹாரி:6610… ,முஸ்லிம்)
எனவே அன்புச் சகோதரர்களே! நபி வழிக்கு முரணாக நாம் அமல் செய்தால் அவைகள் தட்டப்படும், மட்டுமல்லாமல் நாம் குற்றம் பிடிக்கப்பட்டு நபிகளாரின் கௌசர் நீர்த் தடாகத்திலிருந்தும் விரட்டப்படுவோம்.
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது ஒருவன் எமது ஏவல் (வழிகாட்டல்) இல்லாத ஒரு அமலை செய்தால் அது தட்டப்படும்.  (முஸ்லிம்: 1718)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ ‘(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’  என்பேன். அதற்கு இறைவனால் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது.என்று சொல்லப்படும். உடனே நான் ‘எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!’ என்று (இரண்டு முறை) கூறுவேன்.  (புஹாரி: 6584, 6585,..முஸ்லிம்)
எனவே நபியவர்கள் எப்படி அந்த இரவை ஹயாத்தாகினார்களோ அந்த அமைப்பில் ஹயாத்தாக்கி நாமும் மறுமை வெற்றியை அடைய முயற்சிப்போம். அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக!!
வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.
MURSHID ABBASI

இஸ்லாம் சம்மந்தமான முக்கியமான தகவல்களை அறிய clik செய்யவும்.http://www.murshidabbasi.com

Comments