குடும்ப உறவைச் சேர்த்து வாழ்வோம்!



குடும்ப உறவைச் சேர்த்து வாழ்வோம்!

இஸ்லாத்தில் குடும்ப உறவைச் சேர்ந்து வாழும்படியும் அதன் அவசியம்படியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் புனித குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே வலியுறுத்தியிருக்கின்றன.
இன்று எம் மத்தியில் அதிகமானோர் குடும்ப உறவைத் துண்டித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குடும்ப உறவைவிட நண்பர்களும் பிரபலர்களுமே இவர்களால் மதிக்கப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இரத்த உறவு என்பது, அல்லாஹ்வின் அர்ஷோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு உருவகப்படுத்தி விளக்கியுள்ளார்கள்.
இரத்த உறவானது அல்லாஹ்வின் அர்ஷ¤டன் தொடர்பு பட்டிருக்கும். (அந்த அர்ஷின் அருகிலிருந்து) இரத்த உறவு சொல்லும் ‘யார் என்னைச் சேர்ந்து நடந்து கொள்கின்றாரோ அல்லாஹ்வும் அவருடனான தொடர்பைப் பேணிக்கொள்கின்றான். யார் என்னைத் துண்டித்து வாழ்கின்றாரோ அல்லாஹ்வும் அவருடனான உறவைத் துண்டித்துக் கொள்கின்றான். (புஹாரி)
தனக்குரிய அருட் பாக்கியங்கள் (ரிஸ்க்) விரிவாக்கப்பட்டு தனது ஆயுட் காலம் நீடிக்கப்பட வேண்டும் என்று யார் விரும்புகின்றாரோ, அவர் தனது இரத்த உறவுகளைச் சேர்ந்து நடந்து கொள்ளட்டும். (புஹாரி, முஸ்லிம்).
அல்லாஹ்வினுடைய நேசத்தைப் பெறுவதற்காக இன பந்துக்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் யாசகர்களுக்கும்… செல்வத்தை கொடுத்து (உதவி செய்வீராக) (அல்குர்ஆன் 2:177).
பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து உறவைப் பேணுபவன் பூரணமாக உறவைப் பேணுபவனாக இருக்க மாட்டான். தனது உறவினர்கள் உறவை முறித்துக் கொள்ள முற்பட்டாலும் அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தி அவர்களுக்கான உரிமைகளை வழங்குபவனே உறவைப் பூரணமாகப் பேணி நடந்து கொள்பவனாவான். (புஹாரி)
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு மனிதன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்துதான் தனது உறவினர்களிடத்தில் உறவைப் பேணி நல்ல விதமாக நடந்து கொண்ட போதிலும் அவர்கள் அதனை அலட்சியப்படுத்தி மோசமாகவே நடந்து கொள்கின்றார்கள் என முறையிட்டார். அதாவது எனக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள்.
(அவர்களை நான் மதித்து) அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குகின்றேன். ஆனால் அவர்களோ எனக்குரிய உரிமைகளை வழங்குவதில்லை. நான் அவர்களுடன் நல்லவிதமாக நடந்து கொள்கின்றேன். ஆனால் அவர்கள் என்னுடன் மோசமாகவே நடந்து கொள்கின்றனர். நான் அவர்களால் ஏற்படுகின்ற அசெளகரியங்களை சகித்துக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் என்னுடன் மோசமாக நடக்கின்றனர் என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் குறிப்பிட்டது போலவே அவர்களுடன் நீர் நடந்து கொண்டால் அது அவர்களின் மீது சுடு சாம்பலைக் கொட்டியதைப் போல் இருக்கும். நீர் இதே பண்பில் தொடர்ந்து இருந்தால் அல்லாஹ் உமக்கு காலமெல்லாம் உதவிய வண்ணமிருப்பான் என்று உபதேசித்தார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக் காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினருக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும்… (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வங் கொண்டு, பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36).
இஸ்லாத்தின் போதனைகள் இவ்வாறிருக்க இன்று சில குடும்ப உறவுகள் அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றன. குடும்ப உறவுகள் பேணப்படாததால் பல குடும்பங்கள் நலிவுற்று, பொருளாதார ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் பாதிப்படைந்திருக்கின்றன. இந்த நிலையை மாற்றி குடும்பங்களில் செழிப்புற்று விளங்க இஸ்லாம் கூறிய பிரகாரம் குடும்ப உறவைச் சேர்ந்து வாழ்வோமாக.
எந்தவொரு சமுதாயம் தாமாகத் தம்மை மாற்றிக் கொள்ளவில்லையோ நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களை மாற்றி விடுவதில்லை.
(அல்குர்ஆன் 13:11).
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்கின்றபோது ஒரு பாதையால் செல்வார்கள். திரும்புகின்றபோது மற்றnhரு வழியால் திறும்புவார்கள்.” (ஸஹீஹு முஸ்லிம்)

பெருநாள் தினத்தில் எமது சகோதர-சகோதரிகள், இனபந்துக்கள், அன்பர்களை, நண்பர்கள், உற்றார் உறவினரை அரவணைப்பது, ஆதரிப்பது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அவர்களுடனான உறவைப் பலப்பலப்படுத்திக் கொள்வது, பகைமை இருந்தால் அதனை அல்லாஹ்வுக்காக மன்னித்து உறவைப் புதுப்பித்துக் கொள்வது...போன்ற உன்னத கூலிகளைப் பெற்றுத் தரக்கூடிய அம்சங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, எமது பெற்றNhர், சகோதர, சகோதரிகள் உட்பட இரத்த உறவினர்களுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் உதவும்.

“குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம் நுளைழய மாட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

மூன்று நாட்களுக்கு அதிகமாக ஒருவர் தனது சகோதரனை பகைத்துக் கொண்டிருப்பது ஆகுமானதல்ல (ஹராம்) என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் பலவீனமானவர்கள் என்பதனால் நாம் எமது வீட்டில், காரியாலயத்தில், ஊரில் சக மனிதர்களோடு உறவாடுகின்றபோது பகைமை ஏற்பட்டிருக்கும் சிலரோடு அதிருப்தியடைந்திருப்போம் மற்றும் சிலரோடு கோபித்துக் கொண்டிருப்போம். இவற்றையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அரியதொரு சந்தர்ப்பமாக இத்தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் உலகில் இரண்டு விடயங்களை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறான். ஒன்று, நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டும் என விரும்புவது. இரண்டாவது தன்னுடைய வாழ்வாதாரத்தில் பரகத் கிடைக்க வேண்டும் என்பது.
“யார் தனது ஆயுள் அதிகரிக்க வேண்டும் என, அவருடைய வாழ்வாதாரத்தில் பரகத் அமைய வேண்டும் என விரும்புகிறரோ அவர் தனது இனபந்துக்களை சேர்ந்து நடக்கட்டும்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

இரத்த உறவைப் பேணி வாழ்ந்தால், தன் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைப் பேணி வாழ்ந்தால் சுகமாக வாழலாம், நீண்ட ஆயுளைப் பெறலாம், மாதாந்த செலவினத்தைக் கட்டுப்படுத்தி மிச்சம் பிடித்துக் கொள்ளலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தில் விஸ்தீரணம் ஏற்படப் போவதில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

இனபந்துக்களுடனான உறவைத் துண்டித்து, குறைத்துக் கொண்டு அவர்களை அனுசரிக்காமல், அரவணைக்காமல் சுயநலமிகளாக வாழ்கின்ற மனிதர்கள் அவர்கள் நினைத்தது போன்று ஆரோக்கியமாக வாழ முடியாது அவர்களது நாளாந்த செலவினம் குறைவடையாது. அதற்கு மாற்றமான விளைவையே அவர்கள் அனுபவிப்பார்கள். இதனை நாம் இன்று நடைமுறையில் காண்கின்றோம்.

இந்த மார்க்கம் ஓர் அற்புதமான மார்க்கம். எமக்குத் தேவையான அத்தனை வழிகாட்டல்களும் இந்த மார்க்கத்தில் உண்டு. மனிதன் இந்த உலகிர் மகிழ்ச்சியாக வாழ நிறைவோடு, நிம்மதியாக வாழ, ஆரோக்கியதுடன் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வதற்கான அற்புதமான வழிகாட்டல்களை இந்த மார்க்கம் வழங்கியிருக்கின்றது.

அத்தகைய வழிகாட்டலில் ஒன்றுதான், எமது உற்றார் உறவினர்களை, இரத்த பந்தங்களை நாம் எந்தளவு தூரம் சேர்ந்து நடக்கிறNhமோ அந்தளவுக்கு அல்லாஹுத் தஆலா எமது வாழ்வாதாரத்தில், ஆயுளில் விஸ்தீரணத்தை ஏற்படுத்துவான். இது ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாக்கு என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.


அபூ  சல்மான்.
இலங்கை

Comments