Thursday, April 19, 2012

பேரழிவுகள் இஸ்லாமிய பார்வையில்

பேரழிவுகள்  இஸ்லாமிய பார்வையில்.....

மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராக வேண்டும். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என இறைவன் எச்சரித்துள்ளான்.

அவற்றை உணர்ந்துக் கொண்டே மனிதன் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் அல்லாஹ்.

சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள், பூகம்பங்கள்,சுனாமி பேரலைகள், புயல் சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும், கேட்டும் பல நாடுகளிலும் மனித இனம் கலங்கிப்போயிருப்பதை காண்கின்றோம்.

மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் என்னமுடியாது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னையும், தன் ஆற்றலையும், தன் சிந்தனையையும் மனிதனுக்கு உணர்த்திட பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான். ஆயினும் மனித சமுதாயம் படிப்பினை பெற மறுக்கிறது
 அல்லாஹ் கூறுகிறான்.
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.  (அல்குர்ஆன்:- 39:55)
மனிதன் எதை பற்றியும் சிந்திக்காமல் பிறர் நலன் மீறி, சுய நலமொன்றே குறிக்கோளாகவும், அல்லாஹ்வையும், மறுமையையும் மறந்து இன்பம் ஒன்றே தன் வாழ்வின் இலட்சியமாகவும் கருதி வாழ முற்பட்டதின் விளைவு தான்  
“ஓசோன் படலத்தில் ஓட்டைஎனும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு.
இந்த உலகில் எத்தனையோ சமுதாயத்தவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்தந்த சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வை மறுத்து அவன் விதித்த வரம்புகளை மீறி நடந்த போது அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் எச்சரிக்கையேன்றே உணர்த்துகிறது அல்குர்ஆன்.
நூஹ் (அலை) அவர்களுடைய சமுதாயம், இறைவனின், கட்டளைகளை ஏற்க மறுத்து வாழ்வில் அநியாயம் அக்கிரமங்கள் செய்த போது தன் நபியையும் வழிபட்டவர்களையும் பாதுகாத்து வரம்பு மீறியோரை வெள்ளத்தால் அழித்தொழித்ததை  சொல்லி நம்மை எச்சரிக்கிறான். அவ்வாறே

ஆது சமுதாயத்தவருக்கு ஹூது (அலை) அவர்கள்  நபியாக அனுப்பப்பட்டார்கள். எமனில் ஹழர மௌத் பிரதேசத்தில் முஹ்றா எனும் கிராமத்தில் அஹ்காஃப் என்னும் ஓடைப் பகுதி. அதில் பெரும்பாலும் மணல்மேடு. அந்த பகுதியில் தான் ஆதுக் கூட்டத்தார்கள் வசித்தார்கள். அவர்கள் பலசாலிகளாகவும் இருந்தார்கள். சுய பலத்தில் மதிமயங்கி அநியாய அக்கிரம்களும் அனாச்சாரங்களும் செய்து வந்தார்கள் இன்னும் அவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். எனவே ஷிர்க் அதிகமாகி அல்லாஹ்வை நிராகரித்து வரம்பு மீறி அக்கிரமங்களில் ஈடுபட்டார்கள். ஹூது (அலை) அவர்களை ஏளனப்படுத்தி எப்போது நீர் கூறும் வேதனை வரும் என வினவினார்கள்.
வேதனையும் வந்தது என்ன நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.
அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
(அல்குர்ஆன் :- 46:24,25.)

காற்று மனிதன் உயிர் வாழ முக்கியமான ஒன்ராகவும்,அருட்கொடையாகும் இருக்கிறது. என்றாலும் மனிதன் வரம்பு மீறும் போது அதனைத் சோதனையாக மாற்றி சீற்றமாகவும்,புயல் காற்றாகவும்  உருவெடுக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகளும், பேரிழப்புகளும் கொடூரமான  வேதனையாக மாறிவிடுகிறது.

ஆபூஹுறைரா (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் சொல்ல நான் செவிமடுத்தேன். காற்று அல்லாஹ்வின் கிருபையாகும். அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவை  அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கை  விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)

மேலும் பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை நாம் புரிந்து செயல் பட வேண்டும் என்பதற்காக சமூது கூட்டத்தாரை ஓர் படிப்பினையாக சுட்டிக்காட்டுகிறான். சமூது கூட்டத்தினருக்கு நபி சாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். அக்கூட்டத்தினர் பாறைகளை குடைந்து வாழும் பலசாலிகளாக இருந்தனர். அல்லாஹ்வை ஏற்க மறுத்து நபியின் அறிவுறுத்தலை மீறி வரம்பு மீறி செயல்பட்டு அநியாய அக்கிரமங்களில் ஈடுபட்ட போது  அம்மக்களுக்கு பேரழிவாக இடிமுழக்கம் அல்லவா அவர்களை இல்லாமல் ஆக்கியது.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர். (அல்குர்ஆன்:-11:66,67)
அதுபோல நபி லூத் (அலை) அவர்களது சமுதாயம் இறைவன் விதித்த வரம்புகளை மீறி தகாத வாழ்வு வாழ்ந்த போது நபியையும் அவர்களுக்கு வழிபட்டவர்களையும் பாதுகாத்து மாறு செய்தவர்களை பேரழிவு மூலம் அழித்தொழித்ததை ஏனையோருக்கு படிப்பினையாக அல்லாஹ் சொல்கிறான்.
எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன் (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
(அல்குர்ஆன் :-11:82,83.)

இது போன்றே மத்யன் வாசிகளுக்கு சுஐபு (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு அச்சமுதாயத்தவர்கல் வரம்பு மீறி நடந்த போது அநியாயம் அக்கிரமங்கள் செய்துக் கொண்டிருந்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது என்பதையும் அல்லாஹ்  விவரிக்கிரான்.

அவ்வாறே ஃபிர்அவ்னும் அவன் கூட்டத்தாரும் பனீ இஸ்ரவேலர்களில் சனிக் கிழமைகளில் வரம்பு மீறியோருக்கும் வேதனை இறக்கப்பட்டதையும் திருமறை படம்பிடித்துக் காட்டி பேரழிவுகள் அல்லாஹ்வின்  எச்சரிக்கை என்பதை இச்சமுதாய மக்களுக்கு உணர்த்துகிறான்.

இவற்றையெல்லாம் அறிந்துக் கொண்டே இறைவனின் வல்லமையை புரிந்துக் கொண்டே மனித இனம் மாறுபட்டு நடக்கும் போது பேரழிவுகளின் மூலம் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறான்.

அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.

(அல்குர்ஆன் :- 11:102.)

திருக்குர்ஆன் விவரிக்கின்ற இது போன்ற செய்திகள் வாழும் மனித இனத்துக்கு படிப்பினையாகவும், எச்சரிக்கையாகவும் அமைகிறது. எனினும் மனித இனம் படிப்பினை பெறாது முழுக்க முழுக்க மாறு செய்யும் போது பேரழிவுகள் மூலம் இறைவன் பாடம் புகட்டுகிறான்.

அதன் விளைவாக தற்காலத்தில் காட்டரினா புயல் முதல் மாலா புயல் வரையும் கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் துவங்கிய கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி பேரலையாக ஜப்பான் இந்தியா இலங்கை என்று ஒரே நேரத்தில் பல நாடுகளையும், நடுநடுங்கச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும், மனித இதயங்கள் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியுமா?அந்நாளை.

2001 ஜனவரி 26ம் நாள் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு இருபதாயிரம் மனித உயிர்கள் பலியாயிற்றே. இவைகள் மனித நெஞ்சத்தில் மாறாதவை  இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை தான் என்பதை மனித இதயங்கள் ஏற்று சீர் பெற்றது. இதற்கெல்லாம் என்ன காரணம் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
( அல்குர்ஆன் :-. 4:79.)

மனிதன் அவன் வாழ்வில் இறை விசுவாசியாகி இறை நெருக்கத்தை பெற வேண்டுமானால் இரு விஷயங்களில் அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டும்.

1.      அல்லாஹ்வை  எப்போதும் நினைத்து வணங்கி அவன் விதித்த வரம்புகளை மீறாது நடக்க வேண்டும்.

2.      அல்லாஹ்வை வணங்குவதுடன் படைப்பினங்களுக்கும் நன்மை செய்து வாழ வேண்டும்.

தற்காலத்தில் முந்திய சமுதாயத்தவர்களில் பேரழிவுகளுக்கு ஆளான சமுதாயத்தினரை போன்று பிறர் நலம் கருதாது சுய நலம் கருதி பூமியில் குழப்பம் விளைவித்து இறைவரம்பு மீறி வாழ்வதில் மனித சமுதாயம் சந்தோஷம் அடைகிறது. இதுவே பூமியின் பேரழிவுகளுக்கு காரணமாக ஆகிவிடுகிறது.

(வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்)
இது போன்ற  பேரழிவுகள் மூலம் பாதிக்கப்படும் அனைவரும் வரம்பு மீறியவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்தவர்கள் எனும் முடிவிற்கும் நாம் வந்து  விடக் கூடாது. காரணம் நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்பதை போன்று தீயோருக்கான வேதனைகள் நல்லோர்களையும் வந்தடையும் என்பதனையும் புரிய வேண்டும்.அல்லாஹ் சொல்கிறான்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் :-8-25)

பேரழிவுகள், சீற்றங்கள், பேரிழப்புகள், நிலநடுக்கங்கள், பூகம்பங்கள், சுனாமி பேரலைகள் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் பலவிதமாக கருத்தைக்கூறினாலும்
இஸ்லாமிய பார்வையில் மனிதர்கள் இறைவனை மறந்து பல்வேறு கேட்ட செயல்கள் தோன்றி விட்டால் பூமி தாங்காது. பேரழிவை ஏற்படுத்தும், சோதனைகள் தொடரும்.பொதுவாக
1.      பொது சேவையில் ஈடுபடுவோர் பொதுச் சொத்தை தங்களின் சொந்த சொத்தாக கருதி மனம் போன  போக்கில் செயல்படுவது.

2.      பிறர் கொடுத்து வைத்த அமானிதத்தை தான் பெற்ற இலாபமாக கருதி அதை பயன்படுத்துவது.

3.      ஜகாத் கொடுக்காமல் இருப்பது.

4.  அறிவும், நன்னடத்தை பெறுவதையும் நோக்கமாக கொள்ளாமல் (பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு) கல்வி பயிற்றுவிப்பது.

5.      தாயை துன்புறுத்துவது.

6.      ஒருவன் தன் மனைவிக்கு முழுமையாக கட்டுப்படுவது.

7.      தந்தையை வெறுப்பது.

8.      பள்ளிவாசல்களில் கூச்சல்,  புதுமைகள், குழப்பங்கள் அதிகரிப்பது.

9.      குற்றவாளிகளே நாட்டின் தலைவர்களாக உயர்வது.
10.    தரம் கெட்டவர்களே சமூகத்தை வழி நடத்திச்செல்வது.

11.    சமுதாயத்தின் மூத்த குடிமக்களை குறை பேசித்திரிவது.

12.    மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படுவது.
இது போன்ற சமுதாய சீர் கேடான செயல்கள் நிரம்பி விட்டால் நெருப்புக் காற்றையும், நிலச் சரிவுகளையும், பூகம்பங்களையும், ஆழி பேரலைகளையும் உருமாற்றம் செய்யப்படுவதையும்,கல் மழை பொழிவதையும் எதிர் பார்க்க வேண்டும் .
எனவே பேரழிவுகள் அல்லாஹ்வின்  எச்சரிக்கை என்பதை உணர்ந்து நல்லபண்புகளையும், மனித நேயத்தையும், பிறர் நலனையும் பாதுகாத்து  அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாமல் நேர்மையுடன் வாழ வழிவகை காண வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் இம்மையிலும், மறுமையிலும் வழங்கி அருள் புரிவானாக!
ஆமீன்.
மவாஸ் மீரான் .