Friday, November 28, 2014

34 உமைர் இப்னு வஹ்பு

உமைர் இப்னு வஹ்பு
عمير بن وهب
த்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள் அவை. கூடிக்கூடிப் பேசி மகிழ்ந்தார்கள்; கூடும் போதெல்லாம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். வீடெங்கும் தெருவெங்கும் அதே பேச்சு. அப்படியான ஒருநாளில் ...

மதீனாவில் நபியவர்களின் பள்ளிவாசலுக்கு அருகே உமரும் தோழர்களும் – ரலியல்லாஹு அன்ஹும் – அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போரின் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நுண்ணிய நிகழ்வையும் ரசித்து ரசித்துச் சொல்லிக்கொண்டார்கள். முஹாஜிர்களின் வீரம், அன்ஸாரிகளின் தீரம், குரைஷிகளின் மூக்குடைப்பு என்று பேச்சு வெகு சுவாரஸ்யமாக நிகழ்ந்து கொண்டிருக்க, தூரத்தில் ஒட்டகத்தில் ஒரு பயணி.

வெகு தொலைவிலிருந்து வந்த அலுப்பில் ‘இந்தா, வரவேண்டிய ஊர் வந்துடுச்சு; இறங்கிக்கொள்’ என்று ஒட்டகம் களைப்பாய் நின்றுகொள்ள, அந்தப் பயணி இறங்கினார். களைப்பையும் மீறி அவரிடம் உத்வேகம் இருந்தது. நபியவர்களின் பள்ளிவாசலை நோக்கி அவர் நடக்க ஆரம்பிக்க, அதை முதலில் கவனித்தவர் உமர். அவரை நன்றாக அடையாளம் கண்டுகொண்டார். சட்டென்று எழுந்து அவரிடம் விரைந்தார்.

33 அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ
عبد الله بن حذافة السهمي
கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர் ஏற்கெனவே அந்த எண்ணெயினுள் தூக்கி எறியப்பட்டிருந்தனர். விழுந்த மாத்திரத்தில் அந்த மனிதர்களின் சதையெல்லாம் கரைந்து கழண்டு போய், எலும்புகள் துருத்திக்கொண்டு, வறுபட்டுக் கொண்டிருந்தன. நிச்சயமாய் எண்ணெய் சூடாகிவிட்டிந்தது. எக்கச்சக்க சூடு.
தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ரோமாபுரியின் பைஸாந்தியச் சக்கரவர்த்தி அந்த முக்கியமான போர்க் கைதியைப் பார்த்து கடைசித் தவணையாகக் கேட்டான்:
“உனக்கு இறுதி வாய்ப்பு அளிக்கிறேன். கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்கிறாயா?”
வைராக்கியத்துடன் பதில் வந்தது “முடியாது”
மன்னனுக்கு வேறு வழி தோன்றவில்லை. “இழுத்துச் செல்லுங்கள் இவரை; கொப்பரையில் தள்ளுங்கள்”
சேவகர்கள் அந்தக் கைதியை இழுத்துச் சென்றனர். கொப்பரையை நோக்கி நெருங்க நெருங்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. அதைப் பார்த்ததுதான் தாமதம், மகிழ்ச்சியுற்ற சேவகர்கள் உடனே சக்கரவர்த்தியிடம் ஓடினார்கள்.
“மன்னர் மன்னா! கைதியின் கண்களில் கண்ணீர்”
“ஆஹ்! படிந்தார் கைதி. இறுதியில் மரண பயம் வந்து விட்டது பார். அவரை உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்”

Thursday, November 27, 2014

32 ஜுலைபீப்

ஜுலைபீப்
جـلـيـبـيـب
தீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம் அது. தங்கள் வீட்டு வாசலில் முகமன் கூறி முஹம்மது நபியவர்கள் வந்து நிற்பது கண்டு பரபரத்துப் போனார் அந்தக் குடும்பத் தலைவர். மகிழ்ச்சியில் அவருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

பரஸ்பர குசல விசாரிப்புக்குப் பிறகு, தாம் வந்த செய்தியைச் சொன்னார்கள் நபியவர்கள், "நான் உங்கள் மகள் திருமண விஷயமாய் வந்திருக்கிறேன்"

‘அல்லாஹ்வின் தூதர் என் மகளை மணமுடிக்க விரும்புகிறாரா?’ பரபரத்துக் கிடந்தவர் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார். "அல்லாஹ்வின் தூதரே! எத்தகு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமான செய்தி இது!. எங்களது கண்களுக்கு குளிர்ச்சியான காட்சி அமையப் போகிறது!"

அவரது பதில் அவர் தப்பர்த்தம் புரிந்து கொண்டார் என்பதை நபியவர்களுக்கு உணர்த்தியது. விளக்கம் சொன்னார்கள், "நான் தங்கள் மகளை எனக்குப் பெண் கேட்டு வரவில்லை"

"வேறு யாருக்கு?" உற்சாகம் கீழிறங்கிய குரலில் கேட்டார் அந்த அன்ஸாரி.

"ஜுலைபீபுக்குத் தங்கள் மகளைப் பெண் கேட்டு வந்தேன்"

31 ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ
حنظلة بن أبي عامر الأوسي

அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு, மதிப்பு. யத்ரிபில் இருந்த மற்றொரு முக்கியக் கோத்திரம் அவ்ஸ். இஸ்லாம் மதீனாவில் எழுச்சி பெறுமுன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரைப் பற்றி, அவ்விரு சாராரும் ஒருவரையொருவர் குத்திக்கொண்டு, வெட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள் என்று முந்தைய தோழர்கள் வரலாற்றில் அறிமுகம் செய்து கொண்டோம்.
இந்த இரு அரபு கோத்திரங்களுக்கு இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்துவந்த பகைமையை, அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூதக் கோத்திரத்தார் தூபமிட்டு நன்றாக ஊதி அணைய விடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர் ரெண்டுபட்டுக் கிடந்தால்தான் தங்களுக்குக் கொண்டாட்டம் என்பதை நன்கு அறிந்திருந்த நரித்தனம்.
அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுடன் வெறும் வாயளவிலான நட்பு என்பதையெல்லாம் தாண்டி, நேசநாடுகளின் கூட்டணிபோல் யூதர்களின் பலமான உதவி இருந்து வந்தது. அவ்வகையில் கஸ்ரஜ் கோத்திரத்தின் மிக நெருங்கிய கூட்டாளி, யூதர்களின் பனூ கைனுக்கா கோத்திரம்.
மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து வந்த அப்துல்லாஹ் இப்னு உபை யத்ரிபின் அரசனாக முடிசூட்டிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டு அனைத்தும் அவனுக்குச் சாதகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் அந்நகருக்குள் மெதுவே அடியெடுத்து வைத்தது இஸ்லாம். அடுத்த சில மாதங்களுக்குள் கடகடவென அங்குப் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து, ஒருமித்த புதிய முழக்கமாக, "லா இலாஹ இல்லல்லாஹ்" தோன்றிவிட, யத்ரிபின் அரசியலும் மக்கள் உறவும் தலைகீழாகிப்போய், அந்நகர் மதீனாவானது.

Wednesday, November 26, 2014

30 துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ

துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ
الطفيل بن عمرو الدوسي
அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் தந்தை, மனைவி தவிர வேறு யாரும் பெரிதாய் அவர் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. "ஹும்! நல்லாத்தானே இருந்தார். மக்காவுக்குச் சென்று வந்ததிலிருந்து இவருக்கு ஏதோ ஆகிவிட்டது போலிருக்கிறது" என்று உதாசீனப்படுத்திவிட்டு தத்தம் வேலைவெட்டி, வழிபாடு என்று இருந்துவிட்டனர்.
சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; இறைவசனம் சொல்லி எச்சரித்துப் பார்த்தார்; யாரும் கேட்பதாய் இல்லை. ஆனால் ஓர் இளைஞர் இருந்தார். அவர் படு சூட்டிகை, கெட்டி. சட்டென்று பிடித்துக் கொண்டார் அந்தச் செய்தியை. "இது எனக்குப் புரிகிறது. உன்னதம் இது. நான் ஏற்றுக் கொள்கிறேன்" அவ்வளவுதான். வேறு யாரும் வரவில்லை.

வெறுத்துப் போனது அவருக்கு. ஒருகட்டத்தில் மிகவும் நொந்து மனமுடைந்துபோன அந்த மனிதர், அந்த இளைஞரையும் அழைத்துக் கொண்டு "வா போகலாம்" என்று நபியவர்களைச் சந்திக்க மக்காவுக்குக் கிளம்பிவிட்டார். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து விபரமெல்லாம் கூறினார். தம் மக்களின்மேல் பெரும் கோபம் இருந்தது அவருக்கு.
"இந்த இளைஞர் யார்?"

29 ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா

ஸாலிம் மௌலா அபீஹுதைஃபாسالم مولى أبي حذيفة
கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல். நபியவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறுபேரை உமர் தேர்ந்தெடுத்தார். அலீ, உதுமான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் பின் அபீவக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹும். அத்தருணத்தில் தம் எண்ணம் ஒன்றைக் கூறினார் உமர். "ஸாலிம் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அனேகமாய் அவரை நான் தேர்ந்தெடுத்து இருப்பேன்"


ஸாலிம்? உமரின் பெருமதிப்பிற்குரிய அந்த ஸாலிம் யார்?

Monday, November 24, 2014

28 ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில்

ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில்
زيد الخير بن المهلهل


அன்றைய அரேபியாவில் வாழ்ந்துவந்த பலகோத்திரங்களில் ஆமிர் என்றொரு கோத்திரம். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்தக் கோத்திரம் வாழ்ந்துவந்த பகுதியில் கடும் பஞ்சமொன்று ஏற்பட்டது. விளைச்சல் ஏதும் இன்றி, உண்பதற்கு உணவின்றி மக்கள் மாய்ந்து கொண்டிருக்க அவர்களது கால்நடைகளும் இறந்துபோக ஆரம்பித்தன. கடுமையான சோதனை. இதற்குமேல் தாங்கமுடியாது என்ற நிலையில் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவன் தன் மனைவி, பிள்ளைகளையெல்லாம் அழைத்துக் கொண்டு "பஞ்சம் பிழைப்போம்" என்று கிளம்பிவிட்டான்.
பசியும் வேதனையுமாய் ஹிரா எனும் பகுதியை வந்தடைந்தார்கள் அவர்கள். தற்காலிகமாய் ஓர் இடம் ஏற்பாடு செய்து அங்குத் தம் குடும்பத்தை பத்திரமாய்த் தங்க வைத்தான் அவன். அவர்களிடம், “நான் வரும்வரை இங்கேயே பத்திரமாய்க் காத்திருங்கள்; நான் சென்று ஏதேனும் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அகப்பட்ட உணவுப் பொருள்களைச் சிறிதளவு எடுத்துக்கொண்டான். மனைவியும் தம் பிள்ளைகளும் பஞ்சத்தில் வாடுவதைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு. மனதில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டான், ‘எப்பாடுபட்டாவது ஏதேனும் சம்பாதித்துக்கொண்டே திரும்புவேன். இல்லையா அந்த முயற்சியிலேயே இறந்துபோவது மேல்!’
கிளம்பினான். இவனுடன் நாமும் நடந்து அலைய வேண்டியிருக்கிறது. அவனோ தன்னுடைய பெயரெல்லாம் தெரிவித்து நம்மிடம் அறிமுகம் செய்துகொள்ளும் மனேநிலையில் இல்லை. எனவே நமக்கு அவன் 'நாடோடி'.

27 ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ

ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ
صهيب بن سنان الرومي
தம் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு வந்தபோது முதலில் தங்கியது குபா எனும் சிற்றூரில். மதீனா நகருக்கு வெளியே சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருந்தது குபா.
நபியவர்கள் ஏறக்குறைய 20 நாட்கள் அங்குத் தங்கியிருந்துவிட்டு, பின்னரே யத்ரிப் நகருக்குப் புறப்பட்டார்கள். அப்படி அவர்கள் குபாவில் தங்கியிருக்கும்போது வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், நபியவர்களிடம் இறைவன் அனுப்பிவைத்த வசனமொன்றைக் கொண்டுவந்து சேர்ப்பித்தார்.

"இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்" பின்னாளில் குர்ஆனில் இரண்டாவது அத்தியாயத்தில் 207ஆவது வசனமாக இடம்பெற்ற இறைவாசகம் அது. நபியவர்கள் அதைத் தம் தோழர்களிடம் அறிவித்துவிட்டுச் செய்தியொன்று சொன்னார்கள். தோழர்கள் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்ட செய்தி.

Friday, November 21, 2014

26 அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ

அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ
النعمان بن مقرن المزني
மதாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு வந்திருந்தது. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ பேச, சக்கரவர்த்திக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

“பிரதிநிதிகளைக் கொல்லக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்" ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.

"மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்"

25 அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித்

அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித்

أبو سفيان بن الحارث

அன்றைய மதீனாவின் பொட்டல் நிலப்பகுதியில் அவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். வியர்வை வழிந்தோட வேலை நடந்துகொண்டிருந்தது. அந்தக் குழியின் நீளம், அகலம், ஆழத்தையெல்லாம் பார்க்கும்போது மரக்கன்று நடும் உத்தேசமெல்லாம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அது பிரேதம் அடக்கம் செய்யப்படத்தக்கக் குழி என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது.
தவிர நபியவர்களின் பள்ளிவாசலிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அந்தப் பொட்டல், இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் ஜன்னதுல்பஃகீ'.அவரையும் அந்தக் குழியையும் கண்டவர்களுக்கு ஆச்சரியம்! அவரது வீட்டில் அன்று யாரும் இறந்து போனதாகவும் தெரியவில்லை.

Wednesday, November 19, 2014

24 முஸ்அப் இப்னு உமைர்

முஸ்அப் இப்னு உமைர்
مصعب بن عمير
கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், "போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை"
நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பி வந்த மகன், "ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்"
அந்த பதில் தாயின் கோபத்தை உக்கிரப்படுத்தியது. 'ஒரே இறைவனாமே?'
"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை"

அதற்குமேல் என்ன பேசுவது? வெளியேறினார் மகன்.

23 உஸைத் பின் ஹுளைர்

உஸைத் பின் ஹுளைர்
أسيد بن حضير

தீனாவில் அப்துல் அஷ்ஹல் என்றொரு குலம். அவர்களை முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு சென்று சந்தித்தார். முதல் அகபா உடன்படிக்கைக்குப் பிறகு முஸ்அப் இப்னு உமைர் யத்ரிபிற்கு வந்து பிரச்சாரம் புரிய ஆரம்பித்ததை முந்தைய தோழர்களின் அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம். யத்ரிப் வந்த முஸ்அபை, தம் வீட்டில் விருந்தினராக இருத்திக் கொண்டவர் அஸ்அத் இப்னு ஸுராரா. இவர் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வீடு முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய மிகவும் தோதாகிப்போய், அங்கு மக்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.

Tuesday, November 18, 2014

உளு செய்யும் முறை

உளு செய்யும் முறை
 
1. நிய்யத்து வைப்பது- (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் உளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதெல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
2. உளு செய்யுமுன் பிஸ்மி சொல்வது- (உளு செய்யும் போது) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு உளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவூத்)

22 துமாமா பின் உதால்


துமாமா பின் உதால்
ثمامة بن أثال
மாமாவிலிருந்து மக்காவிற்கு அவர் யாத்திரை கிளம்பினார். அவர் தமது குலத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. பெரும் செல்வாக்கு உண்டு. கரடுமுரடான போர் வீரர். ஆனாலும் யாத்திரை என்றால் மட்டும் தன்னந்தனியே கிளம்புவது அவரது வழக்கம். வழிப்போக்கிற்கும் பெரிய அளவில் உணவு, இதர பொருட்கள் எடுத்துக் கொள்வது அவரது வழக்கமில்லை. செல்லும் வழிநெடுகிலும் உள்ள இதர கோத்திரத்தினர் அவருக்கு உபசரிப்பு வழங்கத் தயாராக உள்ள நிலையில் அதெல்லாம் அவருக்குத் தேவையில்லாதது.
நாம் முன்னரே பார்த்தபடி மக்காவை நபியவர்கள் கைப்பற்றும்வரை, அஞ்ஞான மக்கள் அங்குள்ள கஅபாவில் நட்டுவைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கே வணக்கமும் வழிபாடும் புரிந்து கொண்டிருந்தனர். யாத்திரை புறப்படுவதும் அச்சிலைகளை வழிபடுவதற்கே. இவரும் அதற்குதான் சென்று கொண்டிருந்தார்.

21 உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ

உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ
عُقْبَةَ بْنِ عَامِرٍ الجهني
ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு.
ரோமர்கள் ஆண்டு கொண்டிருந்த சிரியா நாட்டின் முக்கிய நகரமான டமாஸ்கஸை இஸ்லாமியப் படைகள் முற்றுகையிட்டிருந்தன. படையின் தலைவர் அபூஉபைதா இப்னுல்-ஜர்ரா. அப்படையிலுள்ள பிரிவுகளின் தலைவர்களாக இடம்பெற்றிருந்த முக்கியமான இரு தோழர்கள் காலித் பின் வலீத், அம்ரு இப்னுல்-ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுமா.
ஏறக்குறைய எழுபது நாட்கள் முற்றுகை நீடித்தது. இறுதியில் வெற்றிகரமாய் அந்நகரம் முஸ்லிம்கள் வசமானது. ரோமப் பேரரசின் ஆதிக்கத்தைப் பெயர்த்து நகர்த்தி, இஸ்லாமியப் படையெடுப்பை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் சென்ற போர் அது. இஸ்லாமியப் படையெடுப்பில் ஒரு மைல் கல்.

Monday, November 17, 2014

20 முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ
مجزأة بن ثور السدوسي


சென்ற அத்தியாயத்தில் ஸுராக்கா பின் மாலிக் வரலாற்றைப் பார்த்துக் கொண்டே பாரசீகத்தின் காதிஸிய்யா வரை வந்துவிட்டோம். இவ்வளவு தூரம் வந்துவிட்டதால் அப்படியே அதற்கடுத்து நிகழ்ந்த இன்னொரு முக்கியப் போரையும் ஓர் எட்டு எட்டிப் பார்த்துவிடுவோம்.


காதிஸ்ஸியாப் போரில் பாரசீகப் படைகளின் தளபதி ருஸ்தம் கொல்லப்பட்டதும் அந்தப் போர் ஒரு முடிவிற்கு வந்தது. அந்தப் போரில் பாரசீகப் படைப்பிரிவிற்கு ஜாலினுஸ் (Jalinus), ஹுர்முஸான் (Hormuzan) என்ற இரு முக்கியத் தலைவர்கள் இருந்தனர். போரின் இறுதியில் தப்பித்து ஆற்றைக் கடந்து ஓடிய ஜாலினுஸை, ஸுஹ்ரா இப்னுல்-ஹாவிய்யா (Zuhrah ibn al-Hawiyah) என்பவர் துரத்திச் சென்று பிடித்து, கொன்றொழித்தார். ஆனால், ஹுர்முஸான் மட்டும் தப்பித்துவிட்டான். முஸ்லிம் படைகள் பாரசீகத்திற்குள் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க, இதர சிலப் போர்கள் நிகழ்ந்தன. ஓயாத ஒழியாத போர்க்காலம் அது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள் அவை.  இங்கு நாம் சுருக்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியது - அதிலெல்லாம் பாரசீகர்கள் தோல்வியைத் தழுவ, அந்தந்தப் பகுதிகளும் முஸ்லிம்கள் வசமாகிக் கொண்டேயிருந்தன என்பதை மட்டுமே.

19 ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ

ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ
سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ


ச்சி வெயில் கொளுத்தும் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். வழக்கமற்ற அந்நேரத்தில் தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் வீட்டிற்கு வந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். "வெகு நிச்சயமாய் ஏதோ ஒரு முக்கியமான விஷயம். இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.

"அனுமதி கிடைத்துவிட்டது" என்றார்கள் நபியவர்கள்.
"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?"
"ஆம்! தோழமை"
அதைக் கேட்டு அழுதார் அபூபக்ரு!
மறுநாள் காலை.

Sunday, November 16, 2014

பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?

பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?


பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாம்! 

இதற்கு மார்க்க ரீதியாக தடையேதும் இருப்பதாக அறியவில்லை!

இஸ்லாம் பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட விஷயங்களில், காது குத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறி காது குத்தக்கூடாது என விலக்குவதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை! மாறாக, நபித்தோழியர் காது குத்தி காதணிகளும் அணிந்திருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத மார்க்க ஆதாரமுள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கு முன், பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட சிலவற்றை அறிந்து கொள்வோம்!

பச்சை குத்திக் கொள்வதும், பச்சை குத்தி விடுவதும் பொதுவாக ஆண், பெண் இருபாலினத்தாருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பான சில செயல்களுக்காக, பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள் என ஆதாரப்பூர்வ நபிமொழிகளிலிருந்து அறிந்து வைத்திருக்கிறோம்.

18 அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ

அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ
أبو العاص بن الربيع‎
ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு, ஜமாதுல் ஆகிர் மாதம்.  ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸைத் இப்னு ஹாரிதாவின் தலைமையின்கீழ் 170 பேர் கொண்ட படைக்குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது.

எதற்கு?
சேர்த்து வைத்த செல்வம், குடியிருந்த இல்லம், கூடிக்குலாவிய சொந்தம் என மக்காவிலிருந்த அத்தனையையும் துறந்து புலம்பெயர்ந்து வந்து ஆறு ஆண்டுகள் கடந்தபின்னும் அத்துணைத் தொலைவிலிருந்து புறப்பட்டு மதீனாவரை வந்து, முஸ்லிம்கள்மீது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்தப்படும் போர்களால் முஸ்லிம்களின் நிம்மதியைக் குரைஷிகளால் குலைக்க முடிகிறதென்றால் ... அவர்களிடம் செழித்துக் குலுங்கும் செல்வ வளம்தானே! அதை மட்டுப்படுத்த வேண்டும்.  ஸாரியா உருவானது. "சிரியாவிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் குரைஷிகளின் வணிகக் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வழிமறித்து முறியடியுங்கள். அவர்களது பொருட்களைக் கைப்பற்றுங்கள்" கட்டளையொன்று இடப்பட்டது!

17 முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி

முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி
(معاذ بن جبل)

லீஃபா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு, தோழர் ஒருவரை அழைத்து பனூ கிலாப் கோத்திரத்தாரிடம் சென்றுவரச் சொன்னார். அரசு உதவி பெறத் தகுதியான ஏழை மக்களுக்குக் கருவூலத்திலிருந்து உதவித் தொகை எடுத்துச் சென்று வழங்க வேண்டும். ஸகாத் அளிக்க வேண்டியவர்களிடமிருந்து ஸகாத் திரட்டி வரவேண்டும். அவருக்கு அப்பணி இடப்பட்டது. “உத்தரவு கலீஃபா!" என்று உடனே கிளம்பிச் சென்றார் அத்தோழர். அது சற்று நீண்ட பயணம்.

கலீஃபாவின் தூதுவர் வந்திருக்கிறார் என்றதும் ஸகாத் செலுத்த வேண்டியவர்களெல்லாம் அள்ளி அள்ளி அளித்தார்கள். ஏழைகளுக்கெல்லாம் உதவித் தொகை சர்வ தாராளமாய் முறைப்படி வினியோகிக்கப்பட்டது. வந்த பணி திருப்தியுடன் நிறைவேற, தனக்கு இடப்பட்ட கட்டளைகளைத் திறம்பட முடித்து, பயணத்திலிருந்து திரும்பினார் அந்தத் தோழர். கழுத்தில் குதிரைச் சேணக் கம்பளி; வெறுங்கை. அதை வீசிக்கொண்டு அவர் வீடு வந்துசேர, அவரின் மனைவி திகைப்படைந்து விட்டார்.

Saturday, November 15, 2014

16 ஸைது இப்னு தாபித்

ஸைது இப்னு தாபித்
(زيد بن ثابت )
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு. மதீனா நகரம் முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்நகரிலிருந்த வீடு ஒன்றில் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருந்தார். தன் தாயாரிடம் விரைந்து சென்றார்.

"நானும் போரில் கலந்து கொள்ள வேண்டும். என்னையும் அழைத்துச் செல்லுங்கள்"

மதீனாவில் இஸ்லாம் நுழைவதற்குமுன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினர் அவ்வப்போது முட்டிக்கொண்டு நிகழ்த்திக் கொண்ட  சிறுசிறு சண்டைகள் அலுத்துப்போய் பெரும் போர் ஒன்று நிகழ்த்தினர். புஆத் போர். எல்லாம் மதீனத்து யூதர்களின் கைங்கர்யம். அந்தப் போரில் அந்தச் சிறுவரின் தந்தை காலமாகிவிட்டிருந்தார். எனவே அவருக்கு அனைத்தும் அவருடைய தாயார் ஆகிப்போனார்..

15 வஹ்ஷி பின் ஹர்பு

வஹ்ஷி பின் ஹர்பு
وحشي بن حرب
தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.
யாரோ ஒருவர் அவரிடம் கூறினார், "அல்லாஹ்வின்மேல் ஆணையாகச் சொல்கிறேன். இஸ்லாத்தில் இணையும் எவரையும் முஹம்மது கொல்லுவதில்லை"
"அதற்குமுன் அவர் என்ன கொடுமை செய்திருந்தாலுமா?"
"ஆமாம். மன்னித்துவிடுகிறார் அவர்"
நிதானமாய் யோசித்த அவர் உடனே புறப்பட்டு விட்டார். மதீனா வந்தடைந்த அவர் மக்களிடம் விசாரித்தார், "நான் முஹம்மது நபியைச் சந்திக்க வேண்டும்"
மஸ்ஜிதுந் நபவீக்கு அவர்கள் வழி காண்பித்தனர்.

Thursday, November 13, 2014

14 அப்துல்லாஹ் இப்னு ஸலாம்

அப்துல்லாஹ் இப்னு ஸலாம்
عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ
மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் பாடவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் குர்ஆன், ஹதீஸ் இன்னபிற இஸ்லாமிய சம்பந்தமான வகுப்புகள் பள்ளிவாசலில் நடைபெற, மக்கள் கலந்து கொண்டு ஞானம் கற்றுக் கொள்வார்கள். விண்ணப்பம், நேர்முகத் தேர்வு, சம்பந்தமற்ற நன்கொடைகள் என்று எதுவுமில்லாத உண்மையான பல்கலை அது.
ஆசான்களாகத் திகழ்ந்தவர்களும் பண்பட்ட தோழர்கள்; அமர்ந்து கற்றுக் கொண்டவர்களும் ஞானத்தாகத்தால் உந்தப்பட்டவர்கள். இஸ்லாம் ஒரு சம்பிரதாயமாக அல்லாமல் வாழ்வும், நெறியுமாக அப்படித்தான் படித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

அந்தக் குழுவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார். அனைவரும் அவரிடம் அன்பும் மரியாதையும் நெருக்கமுமாக இருப்பதை, வகுப்பில் அமர்ந்திருந்த ஃகைஸ் பின் உபாத் கவனித்தார். அழகிய, அற்புதமான, முற்றிலும் கவனத்தைக் கவரக்கூடிய உரையொன்றை அந்தப் பெரியவர் நிகழ்த்த, மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். ஃகைஸையும் அந்த ஆழ்ந்த உரை மிகக் கவர்ந்தது.

13 தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ

தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ
ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ ‏
அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல் பவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை!

எதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல்.  படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.

12 அபூதல்ஹா அல் அன்ஸாரீ

அபூதல்ஹா அல் அன்ஸாரீ
‏أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ
மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலம். கடல் தாண்டி நிகழவிருந்த போர் ஒன்றுக்கு முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. மிகவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார். அவரும் முஸ்லிம் படைகளுடன் கலந்து கொள்ள ஆயத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
அவருடைய மகன்களுக்கு அதிர்ச்சி! ‘இந்தத் தள்ளாத வயதில் போர்க் களமா? என்ன இது?’ என்று வருத்தமுற்றவர்கள், தந்தையை மரியாதையுடன் அணுகினார்கள். அவரது மனதை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மிகவும் பாந்தமாய்ப் பேசினார்கள்

11 அப்பாத் பின் பிஷ்ரு

அப்பாத் பின் பிஷ்ரு
عباد بن بشر
மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில் பின்னிரவுத் தொழுகை தொழுது கொண்டிருந்தார்கள். அது மஸ்ஜிதுந் நபவீயை ஒட்டிய வீடு. கதவைத் திறந்து நுழைந்தால் பள்ளிவாசல். அங்கிருந்து மிக இனிமையான குரலில் குர்ஆன் ஓதும் ஒலி மிதந்து வந்தது. இனிமையாக, மிக இனிமையாக, நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்து அளித்ததைப் போன்று, தூய்மையாய், துல்லியமாய் குர்ஆன் ஓதும் ஓசை அது.

Wednesday, November 12, 2014

10 ஹகீம் பின் ஹிஸாம்

ஹகீம் பின் ஹிஸாம்
‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அபூர்வம் நிகழ்ந்தது. மக்காவில் அன்று ஏதோ ஒரு திருநாள். விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே அபூர்வமாய்த் திறக்கப்படும் கஅபாவின் கதவைத் திறந்து அதனுள்ளே சிறப்பு வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. காணாததைக் காண மக்களுக்கெல்லாம் ஆவல்.
கஅபாவின் உள்ளே நுழைந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, கும்பலாக சிலர் முண்டியடித்துக் கொண்டு தரை மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள அந்தக் கதவின் மேலேறி உள்ளே சென்று பரவசத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் நிறைமாதச் சூல் கொண்ட பெண்ணொருவர். உள்ளே இருக்கும்போது அங்கேயே அவருக்குத் திடீரென்று பேறுகால வலி ஏற்பட்டுவிட்டது.

9 ஃபைரோஸ் அத்-தைலமி

ஃபைரோஸ் அத்-தைலமி
فيروز الديلمي

ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டில் ஒருநாள், யமன் நாட்டு அரண்மனைக்கு அரசியைச் சந்திக்க அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் சென்றார். அப்பொழுது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசனால் அங்கு மாபெரும் தொல்லையும் குழப்பமும் ஏற்பட்டிருந்த சூழ்நிலை. அரசியைச் சந்தித்த அண்ணன்காரர், "இந்தக் கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும் அவமானமும் என்பது நீ உணர்ந்ததே. இருந்தாலும் அதை உனக்கு எடுத்துச் சொல்ல வந்திருக்கிறேன்" என்று ஆரம்பித்தார்

8 அபூதர்தா

அபூதர்தா
أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

மதீனாவில் அவ்ஸ்,  கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூத கோத்திரத்தினரின் கைங்கர்யம் அது. யூதர்களுக்கு அதில் அரசியல் சுயநலம் இருந்தது. அந்த அரேபியர்கள் வேதம் அருளப்படாத, சிலை வணங்கும் மக்கள் எனும் இளக்காரம் இருந்தது. தங்களது ஆளுமையே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும் என்ற நயவஞ்சகம் இருந்தது.

7 ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ

ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ
رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ

மதீனாவிற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம்பெயர்ந்ததும் பள்ளிவாசல் ஒன்று கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தின் வடபகுதியில் சற்றே உயர்ந்த ஓர் வெற்றிடம் இருந்தது. அதன் பெயர் அஸ்ஸுஃப்பா.

பள்ளிவாசலின் பின்புறச் சுவரை ஒட்டிய திண்ணை, மேலே நிழலுக்கான ஒரு தடுப்பு - அதுதான் அஸ்ஸுஃப்பா. இங்கு அனாதரவான முஸ்லிம் ஆண்கள் தங்கி, வாழ்ந்து வந்தார்கள். தொடக்கத்தில் மக்காவை விட்டு வெளியேறி, மதீனா வந்திருந்த முஹாஜிர்கள்தாம் அங்குத் தங்கியிருந்தனர். பின்னர், வசதி வாய்ப்பில்லாத மற்ற முஸ்லிம்கள் சிலரும் அங்கு வந்து தங்கிவிட்டார்கள். அனைவரும் ஏழைகள். குடும்பம், உறவு என்று எதுவும் அவர்களுக்கு அமைந்திருக்கவில்லை. ஸுஃப்பாதான் அவர்களுக்குத் திண்ணை, பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்களெல்லாம் "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா - أصحاب الصفة" என்று அழைக்கப்பட்டனர்.

Monday, November 10, 2014

மில்லர் கண்ட குர்ஆனின்

மில்லர் கண்ட குர்ஆனின்

அதிசயங்கள் : கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப்பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

6 ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ

ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ
حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ
யத்ரிப் நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு குழுவுடன் மக்காவிற்கு யாத்திரை சென்றது. மொத்தம் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட குழு அது.

மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது.

5 உத்பா பின் கஸ்வான்

உத்பா பின் கஸ்வான் - عُتبة بن غَزْوان
அது ஹஜ்ரீ 18ஆம் ஆண்டு. ஹஜ் முடிந்து பஸரா நகருக்குத் திரும்ப வேண்டிய அதன் கவர்னர், வழியில் மதீனா வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார். அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) இரண்டாவது கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார். மதீனாதான் கலீஃபாவின் தலைநகரம்.
”தாங்கள் தயவு செய்து என்னை வேலையிலிருந்து நீக்க வேண்டும்” என்றார் கவர்னர்.

ஆச்சரியத்துடன் பார்த்த உமர், ”அதெல்லாம் முடியாது. ஊருக்குத் திரும்பிப் போய் தங்கள் வேலையைத் தொடருங்கள்” என்றார்.
வற்புறுத்தினார் கவர்னர்;

Sunday, November 09, 2014

4 ஆஸிம் இப்னு தாபித்

ஆஸிம் இப்னு தாபித் (عَاصِمَ بْنَ ثَابِتِ بْنِ أَبِي الْأَقْلَحِ)

பத்ருப் போரில் ஏற்பட்ட படுதோல்வியும் தம் பெருந்தலைவர்களது உயிரிழப்பும் மக்கத்துக் குரைஷிகளை அளவற்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியிருந்தன. உயிர் பிழைக்கத் தப்பித்து மதீனாவுக்கு ஓடியது மட்டுமல்லாமல் அரசாங்கம் ஒன்றை நிறுவும் அளவிற்கு வளர்ந்துவிட்ட முஹம்மதை எப்படியாவது கொன்றொழித்தால்தான் பட்ட அவமானத்திற்கும் அடைந்த துன்பத்திற்கும் ஒரு தீர்வு என்ற நிலையிலிருந்தார்கள் அவர்கள்.
பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்பதே மூச்சாகிப் போயிருந்தது அவர்களுக்கு. ஹிஜ்ரீ 3ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் பெரும்படையொன்று திரட்டப்பட்டு, அது மதீனாவை நோக்கி முன்னேறியது.

3 நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ

நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)
அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய் வெட்டப்பட்ட அகழியொன்று அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கிடந்தது. முஸ்லிம்களுக்குக் கடுமையான சோதனை நேரம் அது. போர்மேகம் சூழ்ந்து 27 நாட்கள் ஆகியிருந்தன.
அன்று இரவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்: "யா அல்லாஹ்!, நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்".

Saturday, November 08, 2014

ஏன் இந்த எளிய வாழ்க்கை

ஏன் இந்த எளிய வாழ்க்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.
மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.

2 கப்பாப் பின் அல்-அரத் (ரலி)

கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.

உற்சாகமாக வரவேற்று அவரைத் தன்னுடன் நெருக்கமாக அமரச் செய்த உமர், "உங்களைத் தவிர பிலாலுக்கு மட்டுந்தான் இத்தகைய கூடுதல் நெருக்கமான சிறப்புண்டு" என்று தனது அன்பைச் சொன்னார்.

1. ஸயீத் இப்னு ஆமிர்அன்பான வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!
அந்தக் குறையைப் போக்கும் முகமாக சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.
பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.
வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!
1. ஸயீத் இப்னு ஆமிர்سعيد ابن عامر (ரலி)
உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார்