Thursday, June 07, 2012

ஷைத்தானின் சதி வலைகள்

ஷைத்தானின் சதி வலைகள் எப்படி யெல்லாம் வரும்
உரை முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி.

Sunday, June 03, 2012

தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்



தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்.



இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435


மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)


ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான்.


தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.


விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம்

பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.



1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது.

Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”.

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர்.

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

இஸ்லாமியர்கலாகிய நமக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா?

இஸ்லாமியர்கலாகிய நமக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா?

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. வல்ல அல்லாஹ் தன் திருமறையில்

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்காக வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.(அல்குர்ஆன்: 5:3)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். (இர்பான் பின் ஸாரியா(ரலி) அஹ்மத் (16519)

இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்து விட்டன.

ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரைக்கல்லாக அவன் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போதுதான் அந்த செயலுக்கு நன்மை கிடைக்கும். இல்லையேல் அது தீமையாகவே அமைந்து விடும்.

நீங்கள்  கொண்டாடும் பிறந்தநாள் விழாவுக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளதா என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களின் வரலாற்றை சொல்லிகாட்டும் போது யாருடைய பிறந்த நாளைப் பற்றியும் கூறவேயில்லை. அதிசயமாகப் பிறந்தவர் என்ற அடிப்படையில் நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும்என் மீது நிம்மதி இருக்கிறது (என்றார்)  (அல்குர்ஆன்: 19:33)

என்று வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அதிலும் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா எடுக்க சொல்லவில்லையே. அதைப்போன்று நபி(ஸல்) அவர்கள், முன் சென்ற நபிமார்கள் ஆதம், நூஹ், இப்ராஹிம் (அலை) மற்றும் பல நபிமார்களின் வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப்பற்றியும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை.அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.

நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ, தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோதாமும் கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவும் இல்லை. மேலும், நபி(ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு பின்பற்றி வந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களா? என்றால் அதுவுமில்லை. அதற்காக விழா கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக்கணக்கை எதிலிருந்து துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை வரலாற்றில் காண முடிகிறது.

உலகத்திலுள்ள எத்தனையோ பேருக்கு பிறந்த நாள் கொண்டாடும்போது, நாம் பிறந்த நாள் கொண்டாடினால் என்ன? என்ற வாதத்தை சிலர் முன் வைக்கின்றனர். இது பற்றி சற்று விரிவாகக் காண்போம்.


 பிறந்த நாள்  விழாக் கொண்டாட்டம் என்பது  ஒரு நல்ல மனிதரின் உண்மையான தன்மையையும், சிறப்பையும் மறக்கடிக்கச் செய்து விட்டு, வீணான செயல்களையும், வீணான சிந்தனைகளையும் மேலோங்கச் செய்துவிடும். அதனால் தான் இஸ்லாம் இந்த விழாக்கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் தருவதேயில்லை.

கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய வல்ல அல்லாஹ் தன் திருமறையில்

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீஙகள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!( அல்குர்ஆன்: 3: 31-32)

இந்தக் குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் அழகிய முன்மாதிரி உள்ளது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையாக இருந்தால் அவன் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். இதுவே இறைநேசத்தின் சத்தும், சாரமும் அடையாளமும் குறிக்கோளுமாகும்.

மாறாக, நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாமல் நல்லது தானே, சிறப்புதானே என்று நாமே நம் இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயல்களும் பித்அத்தான நூதன வழிகேடு என்றும் அதுவே நரகத்திற்கு கொண்டு சேர்க்கும் செயலென்று அல்லாஹ்வும், அவனுடைய தூதர் நபி(ஸல்)
அவர்களும் கண்டித்துள்ளதை காணலாம். அந்த அடிப்படையில் மௌலூது,மீலாதுவிழா போன்ற நிகழ்ச்சிகள்நடத்துவது அழகிய மார்க்கத்தில் புதிதாக சேர்த்த வழிமுறையாகும்.

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டு விலகி கொள்ளுங்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(அல்குர்ஆன்: 59:7)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.(33:36)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!(ஆயிஷா(ரலி) புகாரி 2697)

நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் (ஆயிஷா (ரலி) முஸ்லிம் 3243)

அனைத்து பித்அத்தான செயல்களுக்கும் சாட்டையடியாக அமைந்த மாநபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை இவைகள்:

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் கெட்டது புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவானவை அனைத்தும் பித்அத்களாகும்.ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (ஜாபிர் (ரலி) நஸயி 1560)

என் உம்மத்தினர் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைவர். விலகிக்கொண்டவனைத் தவிர!. அப்போது நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! விலகிக் கொண்டவன் யார்? என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்கு யார் வழிப்பட்டானோ அவன் சுவர்க்கம் செல்வான். யார் எனக்கு மாறு செய்தானோ அவன் விலகிக் கொண்டவன் ஆவான் என பகர்ந்தார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி)

அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ. துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும். (அல்குர்ஆன் 24: 63)

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதிஸ்களின் மூலம் அல்லாஹ்வும், அவனது தூதரும் கட்டளையிடாத எந்தவொரு செயலுக்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பது தெளிவாக நமக்கு எடுத்துரைக்கையில் பிறந்த நாள் விழா போன்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் மார்க்கத்தில் புதிதாக திணிக்கப்பட்ட யூத, கிருஸ்தவ நடைமுறை செயல்கள் ஆகும் 
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.  (புகாரி (3456)
 இதை புரிந்துக் கொண்டு குர்ஆன் மற்றும் நபிவழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை,அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார். (அனஸ்(ரலி) புகாரி 15)

எனவே நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக! இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெற இதுவே சிறந்த வழி.அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
சிறாஜ் மீரான் ஃபிர்தவ்சி