Saturday, March 31, 2012

இஸ்லாமிய பார்வையில் ஏப்ரல்ஃபூல் தினம்

இஸ்லாமிய பார்வையில் ஏப்ரல்ஃபூல் தினம்......

 [இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். இந்த தினத்தின் மைய கருப்பொருளே பொய்தான்]
 உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும்.

 இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன.
இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

 இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும்.

 தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் (அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத) அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹூ அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;
 ஹெர்குலிஸ்: அவர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு (தூதரென்று) வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?அபூ சுஃப்யான்:

 இல்லை. (ஹதீஸ் சுருக்கம்) (புஹாரி:7)
 முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?

 நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?

 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(புஹாரி:34)
 வியாபாரத்திலும் பொய் கூடாது:

 இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!(புஹாரி:2110)
 வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?

 எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சகாபாக்கள்:

 அப்துல்லாஹ் பின் கஅப் (ரலி )அவர்கள் கூறியதாவது;
 (என் தந்தை) கஅப் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹூ 'தபூக்' போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.
 "நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்." (புஹாரி:4673)

 மற்றொரு ஹதீஸில்,
"அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.

 'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான்.

 நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது.

 இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (திருக்குர்ஆன் 09:117-119)" (புஹாரி:4678)
கஅப் இப்னு மாலிக் (ரலி )அவர்கள்அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?
 பொய்யர்களுக்கு தண்டனை

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.

 ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

 அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது.

 பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.(ஹதீஸின்  சுருக்கம்) (புஹாரி:1386)
 என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பெய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்!.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
ஆமீன்.

Saturday, March 24, 2012

இஸ்லாமிய பார்வையில் புறம் பேசலாமா?


இஸ்லாமிய பார்வையில் புறம் பேசலாமா?

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.
 ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.

 புறம் பேசுதல் என்றால் என்ன?

 புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
 புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் புறம்என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

 புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
 அல்லாஹ் கூறுகிறான்:-
 முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

 பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
 முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)

 ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
 ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

 ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

 புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-

 1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.
 2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
 3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
 4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
 புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்:

 கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்:-

 நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

 மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்:-

 1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
 மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார்என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
 2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
 புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

 முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.
 புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
 ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
 அல்லாஹ் கூறுகிறான்:-

 என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.  
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)

 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)

 எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.
 நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
 எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

 மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
 தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
 அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.

سراج ميران(فردوسي)